Monday, August 24, 2015

காலமெனும் கரைப்பான்:


    துவாரகை அடையப்போகும் அழிவை சுபத்திரையின் உள்ளுணர்வு அறிவது அருமையாக கூறப்பட்டுள்ளது. அதை அறிந்தவனாகவும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்பவனாகவும்  கிருஷ்ணன் இருப்பதாக  தெரிகிறது.
 எத்தனை பெரு நகரங்களை மனித குலம் கட்டியமைத்திருக்கிறது.  நம் பழம்பெரும் பாரதத்தின், கிரேக்க ரோம பேரரசுகளின்,  எசிப்திய சுமேரிய நாகரீகங்களின் பெரு நகரங்கள் எல்லாம் இப்போது எங்கே சென்றன.

          விண்ணை நாடி எழுப்பப்பட்ட அந்தனை  நகரங்களும் காலத்தால் அல்லவா விழுங்கப்பட்டன.   காலம்  பெரு நெருப்பென அவற்றை உருக்கியது, காலம் பெரும் வானென திரண்டு அவற்றை சிறுத்துப்போக வைத்தது. காலம் பெரு வெள்ளமென எழுந்து அவற்றை கரைத்தது, காலம் பெருங் காற்றாகி எழுந்து அவற்றை அரித்தெடுத்தது. காலம் பேரொளியாகி அந்நகரங்களை மங்கச்செய்தது.  காலம் பெரும் புவிபரப்பென  விரிந்து அவற்றை தன்னுள் புதைத்துக்கொண்டது.

   ஆனாலும் துவாரகை கிருஷ்ணன் திட்டமிட்டு தன் கூர்மதியால உருவாக்கப்பட்ட நகரமல்லவா? ஆம் துவாரகையின் ஆன்மா கிருஷ்ணன். வேறு விதத்தில் சொன்னால் துவாரகை கிருஷ்ணனின் பருவுடலின் விரிவு. ஆனால் இதுவே துவாரகை அழிவதற்கான காரணம் என நினைக்கிறேன். ஆன்மா பிரிந்த உடல் எப்படி அழிவது இயற்கையோ அப்படியே துவாரகை அழிவதும் இயற்கையானது. கிருஷ்ணனை தலைவனாக கொண்ட ஒரு நகரம் வேறொருவரை தலைவனாக எத்தனை நாட்களுக்கு சகித்துக்கொள்ளும். அந்நகரம் கிருஷ்ணனுக்கு பிறகு அழிந்துபோதல் இயல்பானதுதான் என எனக்கு தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்