Saturday, August 22, 2015

குற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.  நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டில் ஒரு குடும்பம் குடியிருந்தது.அதன் தலைவர் பழைய இரும்பு சம்பந்தமான  தொழில் செய்துகொண்டிருந்தார். திடீரென்று அவர் ஏதோ பொருளாதாரக்குற்றத்தின் பொருட்டு கைது செய்யப்பட்டார். அவரை காவல் நிலையத்தில் சிலநாட்கள் கழித்து  பார்க்க வேண்டியிருந்தது. கைது செய்யப்பட்டபோது இருந்த  துயரம் அவமானம் எல்லாம் வரிடமிருந்து போயிருந்தது. அவர் குற்றத்தை ஒத்துக்கொண்டுவிட்டார். லகுவான மன நிலையில் இருந்தார். காவலர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் வீட்டினர் கொண்டு வந்த உணவை ருசித்து சாப்பிட்டார். தன் சமூக வாழ்வை குடும்ப நிலையை புரட்டிபோட்ட அந்நிகழ்வை எளிதாக கடந்த நிலையில் இருந்தார். எப்படி இந்த மனமாற்றம் அதுவும் சில நாட்களில் என எண்ணி வியந்திருக்கிறேன்.


    இப்படி குற்றம் செய்து பிடிபட்டு அவமானப்பட்டு தண்டனையின் வாயிலில் தப்பிப்பதற்கான அனைத்து  வழிகளும் அடைபட்ட நிலையில் ஒருவன் எப்படி ஒரு மன ஆறுதலை அடைகிறான்?   குற்றத்தின் மனச்சுமை,  காட்டுச்சுனை  நீரின் குளிர் அதில் குதித்த சில மணித்துளிகளில் குறைந்துவிடுவதைப்போல் விரைவில் குறைந்துவிடுகிறது இது  எப்படி நடக்கிறது?


   குற்றம் செய்ய மனம் நினைக்கும்போதே ஒருவனின் உள்ளிருக்கும் அவன் அறம் அவனை தடுக்க முயல்கிறது. அதை மீறியே ஒருவன் ஒரு குற்றத்தை செய்யச் செல்கிறான். அப்போதே அவன் மன அழுத்தம் கூட ஆரம்பிக்கிறது. அதை செய்வதற்கான சூழலை ரகசியமாக உருவாக்கி மனிதர்களின் நம்பிக்கையை சிதறவைத்து தன்னை தானே இழிவாக்கிகொண்டு ஒருவன் ஒரு குற்றத்தை செய்து முடிக்கும்போது பெரிய அளவில்  மன அழுத்ததிற்கு ஆளாகியிருப்பன். பின்னர் அவன் மாட்டிக்கொள்ளாமல் தன்னை காத்துக்கொள்ள செய்யும் நடவடிக்கைகள் எல்லாம் அவன் மனச்சுமையை கூட்டிக்கொண்டே செல்கிறது, அவன் பிடிபடும்போது தான் அடையப்போகும்  தண்டனைக்கான பயம், அவன் காணும் அவமானம்,   தன் நிலையிலிருந்து அவன் அடையும் வீழ்ச்சி இவையெல்லாம் அவன் மன அழுத்தத்தை உச்சத்தில் வைக்கின்றன. தப்பிப்பதற்கான் தன்  முயற்சியெல்லாம் கைவிட்டு தன் புகழ், மதிப்பு என அனைத்தும்  இழந்து அவன் நிற்கும்போது அவன் தன் அகங்காரம் எல்லாம் இல்லாமல் போக வெற்று மனிதனாக ஆகிறான். அவனுக்கு அப்போது இழப்பதற்கு  ஏதுமில்லாத நிலை.  அவன் உடம்பில் தளைகள் இருக்கலாம். ஆனால் இப்போது மனதில் இருந்த தளைகள் எல்லாம் அற்றுப்போய் உள்ளான். அவன் அந்நிலையில்  பிறந்த புத்திளம் குழந்தைபோல் தன்னை உணர்கிறான்.  இந்த நிலையில் ஒரு மனிதன் அடையும் விடுதலை உணர்வு அவனை இலகுவாக்குகிறது. ஒரு மனிதன் இந்த நிலையை தக்கவைத்துக்கொள்வானானால் அவன் மிகுந்த ஆன்மீக பயனை அடைந்தவன் ஆவான், இந்த மனந்திரும்புதலை  இயேசு கிறித்து முக்கியமானதாக கருதுகிறார். இறைவனின் அருகாமையில் கொண்டு சேர்க்கும் எனக்கூறுகிறார். காந்தி தான் தவறு செய்ததாக கருதும் சமயங்களில்எல்லாம்  தன்னைத்தானே குற்றவாளியாக்கிக்கொண்டு கடும் விரதங்கள் மூலம் தண்டித்துக்கொள்வதன்மூலம் தன் ஆன்மீக பலத்தை பெருக்கிக்கொள்கிறார். 


   இத்தகைய மன மாற்றத்தை சாத்யகி சில மணி நேரத்தில் அடைவதை நாம் கண்டோம்.  முன்னர் தானே கிருஷ்ணனின் சிறந்த தொண்டன் என்ற அகங்காரம் இருந்திருக்கும். அக்ரூரர், கிருதவர்மன் மேல் ஓர் ஏளனம் இருந்திருக்கும்.  அவனின் இந்தக்குற்றம் அவனில் இருந்த அகங்காரத்தை  நீக்கியிருப்பதை அவன் உணர்ந்துள்ளான். கிருஷ்ணன் அவனை எப்படி தண்டித்தாலும்  அவன் இப்போது அடைந்திருக்கும் நிலைக்கு அது பொருட்படுத்தக்கூடியதாக இல்லாமல் போய்விடும்

தண்டபாணி துரைவேல்