Friday, August 21, 2015

ஆன்மாவின் புன்னகை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

செல்வம் எப்படி வரும்? செல்வம் எப்படி செல்லும்?  என்று சொல்லும் வள்ளுவன். கூத்துமேடைக்கு மக்கள் வருவதும் போவதும் போல என்று சொல்லுவான்.

இன்றைய காலத்தில் திரையரங்குக்கு, நாடகமேடைக்கு  மக்கள் வருவதுபோல் என்று இந்த உவமையை அமைத்துக்கொண்டால்கூட அதன் விஸ்வரூபம் தெரியாமல் போய்விடும். காரணம் திரையரங்குக்கு சுற்றுச்சுவரும், முன்வாசல் மட்டும்தான் உண்டு. 

பங்குனிமாதத்தோடு நிலக்கடலை அறுவடை முடிந்துவிடும் புஞ்சை நிலத்தில் மேடை அமைக்கப்பட்டு நடத்தப்படும் ராமாயணம், வள்ளித்திருமணம், அரிசந்திரன் நாடகமேடைக்கு வரும் மக்கள் அதன் 360டிகிரியிலம் சிறுக சிறுக வருவார்கள். கூத்துமுடிந்து செல்லும்போது 360டிகிரியிலும் மொத்தமாய் செல்வார்கள். செல்வம் நிலையற்றது என்ற ஒரு தத்துவத்தை முன்வைக்க வந்த வள்ளுவன் கூத்துமேடை என்னும் உவமையின் வழியாக இந்த குறளை கவிதையாக்கி செல்கின்றான். சாகாவரம் பெற்ற இலக்கியம் ஆக்கிச்செல்கின்றான்.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

ஏன் இந்த குறள் இங்கு? ஒருநாடு உருவாகுவதும் கூத்துமேடைக்கு ஆள்வருவதுபோலத்தான். அந்த நாடு அழிவதும் கூத்துமுடிந்து மக்கள் கலைந்து செல்வதுபோலத்தான். அந்த நாடு அழிந்ததைக்காணும் மன்னன் படும் பாடு என்னவாக இருக்கும்? கூத்துமுடிந்த பின்பு கூத்து நடந்த நிலத்தை நோக்கும் தன்னம்தனிமனிதன் படும்பாடு. அந்த குறளின் நீட்சியென வந்து விழும் இந்த சந்தை கலைந்தநிலம் என்னும் உவமை சொல்லும் உண்மை. வலியின் உச்சத்தையும், இரக்கத்தின் தேவையும் அறியவைக்கிறது.

அரண்மனை உப்பரிகையில் ஒரு நாள் காலையில் வந்து நின்று நோக்கிய ஜெயசேனர் கலைந்த சந்தை நிலமென தன் நகரம் தெரிவதைக் கண்டு உளம் விம்மினார்-இந்திரநீலம்-80

வாழ்க்கை ஏதோ ஒருவிதத்தில் சந்தை கலைந்த நிலம்தான். ஏதோ ஒன்றை வாங்கி, ஏதோ ஒன்றை விற்று என்று செல்லும் நாள்வரை அதன் வலி தெரிவதில்லை. விற்கவோ, வாங்கவோ முடியாமல் நிற்கும் ஒரு தருணத்தில் கலைந்த சந்தைநிலம் வலியன்றி ஏதுவும் தருவதில்லை. வாழ்க்கை என்னும் கலைந்த சந்தைநிலமும் அதைத்தான் செய்கின்றது.

உடல் என்னும் மன்னன், ஆன்மா என்னும் மகள். பந்தம் பாசம் என்னும் சுற்றம், வாழ்க்கை என்னும் சந்தைநிலம். எல்லாம் சிலநாள்வரை நலமாகவே இருக்கிறது. ஒருநாள் வாழ்க்கை கலைந்த சந்தை நிலமாகிறது. உடல் என்னும் மன்னன் பணியாளர் கைப்பாவை ஆகின்றான். ஆன்மா என்னும் மகள் பொய்வரைந்த மெய் உலகில் இன்புற்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வளர்ந்து வருகின்றாள். அவளை மையத்தில் வைத்து எமன் ஒரு பக்கத்தில், நீலன் ஒரு பக்கத்தில். அவளுக்கு எமனும் தெரியாது. நீலனும் தெரியது. எமன் தெரியாமல் போகட்டும், நீலன் தெரியவேக்கூடாது என்று வளர்க்கப்டும் கொடுமைதான் என்னே? என்னே? இதை யார் செய்வது? வேலி என வந்த பந்த பாசாம் செய்கின்றது. வேலியே பயிரை மேயவில்லை இங்கு, ஆனால் வேலியே சிறையென ஆகின்றது.

இளைய யாதவர் என்ற சொல்லையோ துவாரகை என்ற ஒலியையோ அவள் அறியவில்லை. அவள் வேய்ங்குழல் என்றொரு இசைக்கருவி இருப்பதை அறியவில்லை. மயிலென ஒரு பறவையை கண்டதில்லை. அவள் விழிகளில் நீலம் என்னும் நிறம் தெரிந்ததே இல்லை. ஆழியும் சங்கும் அங்குள்ள பிறர் சித்தத்திலிருந்தும் மறைந்தன.

உடல் ஜெயசேனர். ஆன்மா மித்திரவிந்தை. விந்தரும், அனுவிந்தரும் பந்த பாசம். உடல் நினைக்கின்றது, தன்னைக்காப்பாற்றி, நாட்டைக்காப்பாற்றி, மகளையும் காப்பாற்றி கரை சேர்த்துவிடலாம் என்று. உடல் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை அரைநாழிகை நேரம் மணிமகுடம் தாங்கமுடியாதபோது அறிந்து இருக்கும்.

மனிதன் உயிர் இருக்கும் வரை நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டு இருப்பதாய் நினைக்கிறான் அல்லது எதாவது ஒரு மயக்கத்தில் நிலைத்து நின்று வாழ்க்கையை கடத்துகின்றான். நினைக்கவேண்டிய ஒன்றை நிலைக்க வேண்டிய ஒன்றை அரைநிமிஷநேரம் தியானம் வைக்கமுடியாத வாழ்க்கைதான் நித்தம் கடந்துப்போகின்றது. இந்த கொடுமை தாண்டவேண்டுமு் என்றுதான் அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் கேட்கின்றார்.

சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
      தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூடமட்டி பவவினையிலே சனித்த
      தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ

கருணைபுரியாது இருப்பது எனகுறை இவ்வேளை செப்பு
      கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடக புயமீது இரத்ந மணியணி பொன்மாலே செச்சை
      கமழுமணமார் கடப்பம் அணிவோனே

 தருணமிது ஐயா மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய
சகல செல்வயோக மிக்க பெருவாழ்வு
தகைமை சிவஞான முத்தி பரகதியும் நீகொடுத்து
      உதவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா

அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
      அரியதமிழ்தான் அளித்த மயில்வீரா
அதிசயம் அநேக முற்ற பழநிமலை மீது உதித்த
      அழக திருவேரகத்தின் முருகோனே-திருப்புகழ்
 
 
 
அருணகிரிநாத சுவாமிகள் முருகபெருமானின் சரணகமலத்தை அரைநிமிஷநேரம் தவமுறை தியானம் வைக்கமுடியவில்லை என்கிறார். அப்படி முடியாத எனக்கு நீயே உதவி செய்யவேண்டும் என்கிறார். அப்படி நீயே வந்து உதவி செய்தால் எல்லாவளமும் நிறைந்த வாழ்வும் முக்தியும் கிடைக்கும் என்கின்றார்.

மித்திரவிந்தைக்கும் நீலனே வந்துதான் உதவி செய்யவேண்டும். அவளுக்கு உடலாக இருக்கும் தந்தை பாழ்பட்டுவிட்டான். அவளுக்கு வேலியாக இருக்கும் அனைத்தும் அவளுக்கு சிறையாக இருக்கிறது. அவளுக்கு உண்மை என்னவென்று தெரியாது. நீலனையும் தெரியாது. வேறு யாராவது அவளுக்கு நீலனைப்பற்றிசொன்னால், சொன்னவர் வாழமுடியாது. நீலன் கருணை மிகுந்தவன். அவள் நீலனுக்கு உரியவள். அவனுக்கு உரியவளை அவன் எமனிடம் விடுவதில்லை. எவரிடமும் விடுவதில்லை. அவள் அறியாவிட்டாள் என்ன? அவள் அறிவதற்காக அவளும் அறியாவண்ணம் அவளிடம் இசையாய் வருகின்றான். அவனை அறியாமலே, அவன் அன்றி வாழமுடியாமல், அவனுக்காக அவள் இறக்கப்போகின்றாள். அப்போது அவளுக்கு செவலியாகவே இருந்தவள் குருவாகி நாமஜெயம் தருகின்றாள். குருவாகின்றேன் என்று அறியாமலே செவிலி குருவாகின்றாள்.

இளவரசியின் இரு கைகளையும் இறுகப்பற்றி அள்ளித்தூக்கி தன் நெஞ்சோடணைத்து வெள்ளைச் சங்குமலர் போன்ற செவிமடலில் வாய்வைத்துஅவன் பெயர் கிருஷ்ணன். கன்னியருக்கு அவன் கண்ணன். இப்புவிக்கு ஆழிவெண்சங்குடன் அமர்ந்த அரசன். அன்றலர்ந்த நீலன். பீலி விழி பூத்த குழலன். அவன் இதழ் மலர்ந்த இசையையே நீ கேட்டாய். இப்புவியை உருக்கி வெண்ணிலா வெள்ளமாக ஆக்கும் அவ்விசையைப் பாடாத சூதர் இங்கில்லை. அன்னையே, நீ அவனுக்குரியவள்என்றாள். அதை சொன்னோமா எண்ணினோமா பிறிதொரு குரல் அருகே நின்று அதைக் கூவக்கேட்டோமா என மயங்கினாள்.

செவிலி தன்னை அறியாமலே மித்திரவிந்தைக்கு குருவாகிவிட்டாள். அந்த கணத்தில் மித்திரவிந்தை புன்னைக்க தொடங்கிவிட்டாள். இனி அவள் பிழைத்துக்கொள்வாள். இனி அவளுக்கு அருணகிரிநாதர் சுவாமிகள் சொன்ன பெருவாழ்வும்,பரகதியும் கிடைத்துவிடும். அரியதமிழ் தந்த வரம்தான்.

இது ஆன்மா புன்னகைக்கும் நேரம்.

நன்றி ஜெ. குடும்பக்கதை என்று நீளும் இந்த பெரும்காவியம். ஆன்மீக தரிசனம் என்று பூத்து மணக்கும், இனிக்கும் என் இதயத்தில்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.