Friday, August 28, 2015

எறும்புலகம்

.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே-என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
இந்த நிலைக்கு மித்திரவிந்தைப்போன்றவர்கள் எளிதில் வரமுடியுமா?  பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தருக்கு மகளாக பிறக்கும்  புண்ணியம் இல்லாவிட்டாலும்,  மகளாக வளரும் பாக்கியமாவது கிடைத்தாள், தானகவே முன்னம் அவன் நாமம் கேட்கும் பேறு கிடைத்துவிடும். அந்த நாமத்தின் மகிமையால் அவன் யார்? எங்கு இருக்கான் என்று சொன்னவரிடமே கேட்டுத்தெரிந்துக்கொள்ளமுடியும். அப்புறம் பிச்சியாகிவிடலாம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் “தெருவில் நடந்துப்போவோர்கள் பார்வை எல்லாம் கீழ்நோக்கியே இருக்கிறது. யாரும் உயரப்பார்ப்பதே இல்லை, காஞ்சினிக் காமினியத்திலேயே உழல்கிறார்கள்” என்பார். உயரப்பார்த்தால் என்ன தெரியும், நீலம் தெரியும், நீலம் தெரிந்தால் அப்புறம் என்ன மண்ணுல வாழ்க்கை?!.

உலகில் நாம் எல்லோரும் மித்திரவிந்தைகள்தானே! மேலே பார்ப்பது இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீலமே தெரியாமல் வாழும்படியே பழக்கப்படுகின்றோம். மயில் என்ற ஒரு பறவை இருப்பதுகூட தெரியாது. குழல் இசையை கேட்டதுகூட இல்லை,  இப்படி இருந்தால் என்னாவது?. குருதியை உணவாக்கி குஞ்சுகளை வளர்க்கும் எறும்பாவோம், எறும்பானால் என்ன ஆகும், ஒரு சின்ன உலகம் கிடைக்கும், உலகம் தான் சின்னது ஆனால் அதற்குள் நடக்கும் வாழ்க்கை எந்த காலத்திலும் முடியாத  பெருங்கடல் கலக வாழ்க்கைதான். உண்ணலாம், உழைக்கலாம், ஆளலாம், ஆளப்படலாம், வெல்லலாம், தோற்கலாம், அந்த உலகத்தை விட்டு மீண்டாலும் மீளலாம், மீண்டும் மீண்டும் அதில் பிறந்தே மாளலாம். அந்த உலகத்திலும் ஒளியும் உண்டு, இருளும் உண்டு. அங்கு கூடும் பெரும்திரள்கூட்டம் வென்றவன் தோற்றவன் என்ற இரண்டே எல்லையில் நின்று களிக்கின்றன. அங்கும் நீலன் வருவான். யாரோ ஒருவர் அவனை விண்ணளந்தவன் என்றும், என்றும் தோற்காதவன் என்றும் சொல்வார்கள். அவனையும் அவர்கள் வெற்றித்தோல்வி என்னும் வட்டத்திலேயே சுற்றிவர வைத்து பார்த்து ரசி்ப்பார்கள். அந்த உலகத்திற்குள் மித்திரை பயந்தப்படியேதான் நுழைகின்றாள்.  மூச்சடக்கி அவளும் உள்ளுழைந்து காணும் உலகம், இருளும்,  ஒளியும்  நிறைந்தது. அதில் நுழைய பயம். நுழையும்வரைதான் பயம், நுழைந்தபின்பு அந்த உலகத்தின் துன்பமும் இன்பமென்று காணக்கிடைக்கிறது.  அந்த களிப்பிலும் மித்திரை அங்கு காணும் ஒவ்வொன்றையும் வேடிக்கையெனப்பார்த்துக்கொண்டு விளகி நிற்பது நல்தவம். அந்த விலகி நிற்கும் நல்தவத்தால் கணிகிறது நீலன் தரிசனம் அவளுக்கு,  “யுகங்கள்தோறும் நான் நிகழ்கிறேன்” என்று கீதைக்கிடைக்கிறது. கீதைக்கிடைக்கையில் மித்திரவித்தை விழித்துக்கொள்வது அற்புதம். விழித்துக்கொள்ளதவர்கள் அனைவரும் எங்கோ ஒரு நீள்வட்டக் கூடமொன்றில் கூடி வாழ்க்கையை சமரில்லாத தருணமொன்றில்லை என்று விழியாகனவில் ஆழ்ந்துக்கிடக்கிறார்கள் எறும்பென. எறும்புகள்தான் சிறியவை, எறும்புலகம்  சிறிதா?. அட்சரம் லட்சம்பெறும் கனவு ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.