Friday, August 21, 2015

காவியம்

சாதாரணமாக வெண்முரசை நாலைந்து பதிவுகளாக சேர்த்து படிக்கத்தான் விரும்புகிறேன். இன்று என்னவோ வந்த உடனே சுடச்சுட படிக்க உட்கார்ந்துவிட்டேன். 'நிழலின் எடை' என்ற வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடியவில்லை, அந்த வார்த்தைகளிலேயே மனம் சுற்றிக் கொண்டிருக்கிறது. என்ன அற்புதமான படிமம்! உங்களைத் தவிர இதை தமிழில் லா.ச.ரா. ஒருவர்தான் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

ஹனுமான் கடலைத் தாண்டும்போது அவரது நிழலை யாரோ பிடித்துக் கொண்டு அவரை நிறுத்திவிடுவார்கள்.

ஜெயமோகன், எனக்கு ஏற்கனவே மகாபாரதத்தில் பைத்தியம் உண்டு. ஆனால் அது அந்த தொன்மத்தின் கதையில், கதைப்பின்னலில், கதை மாந்தர்களில், அவர்கள் சந்திக்கும் கேள்விகள் வழியாக கிடைக்கும் மானுட தரிசனங்களில் ஏற்பட்ட பைத்தியம். வெண்முரசில் நீங்கள் பாத்திரங்களை விரித்து எழுவதில் எனக்கு பைத்தியம் ஏற்படும் என்பது விசித்திரவீர்யனைப் பற்றி நீங்கள் எழுதியபோதே புரிந்துவிட்டது. ஆனால் இந்த மாதிரி நிலக்காட்சிகள், படிமம், உவமை எல்லாவற்றிலும் இப்படி கட்டிப் போடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இதை இப்படி பத்திரிகை தொடர்கதை மாதிரி தினமும் படிக்கக் கூடாது, பகுதி பகுதியாகப் படிக்க வேண்டும்...


அன்புடன்
ஆர்வி