Saturday, August 29, 2015

கண்ணன் என்னும் கள்மரம்.



பிள்ளையார் என்று ஒரு கடவுளும், குமரன் என்று ஒரு கடவுளும் இருக்கிறார்கள். இருவருமே தூக்கி கொஞ்சும் குழந்தைகள்தான். பிள்ளையார் என்னும்போது அது நாம் பெற்ற பிள்ளை நம் மடியில் எந்த அலங்காரமும் இல்லாமல் வந்து உட்கார்ந்து இருக்கிறது என்பதுபோல் உள்ளது. நாம் எழுந்துக்கொள்ளும்போது அது நழுவி நம் காலைக்கட்டிக்கொள்ளும் என்ற உணர்வு தோன்றுகின்றது. குமரன் என்னும்போது அது நாம்பெற்ற பிள்ளைாயாக இருந்தாலும் நம் தலைக்குமேல் உட்கார்ந்துக்கொண்டு அண்ணாந்துப்பார், அதுவும் இந்த இடத்தில் நின்று, இப்படி அண்ணாந்துப்பார் அப்பத்தான் நான் தெரிவேன், நான் உனக்காக மட்டும் அங்கு உட்கார்ந்து இருக்கவில்லை, ஊருபூராவும் பார்க்க உட்கார்ந்து இருக்கிறேன் என்பதுபோல் உள்ளது. அதன் புன்னைகையில் நம்பிள்ளை என்று அள்ளநினைக்கும்போது ஊருக்கே பிள்ளை என்ற பயம் அதன் விழி அசைவில் வந்துவிடுகின்றது. அந்த மரியாதை இல்லாமல் அதை அணுகமுடியில்லை.

கண்ணனும், பிள்ளையாராக குமரனாக வந்து நிற்கின்றான். பிருந்தாவனத்தில் இவன்தான் பிள்ளையாராக இருந்தான் என்று நினைக்கும்போதே துவாரகையில் நான் குமரன் என்றே காட்டிச்செல்கின்றான். என் பிள்ளை வீட்டுக்கு வராத ஊரார் பிள்ளை என்றாகிவிட்ட தவிப்பை ஏற்படுத்துகின்றான். என்பிள்ளை என்ற ஆவலோடு நெருங்கும்போதே, ஊரார் பிள்ளை என்று தள்ளி நிற்கும் தவிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்னிறான். தேவகி, ரோகினி, யாசோதைக்கு இந்த பிள்ளையார், குமரன் என்ற நினைப்பு எழுந்து நெஞ்சடைத்தாலும் சாத்யகிக்கு அது பெரியவிஷயம் இல்லை ஆனால் சாத்யகி அடைவது முற்றும் புதுப்புது சங்கடம். 

சாத்தியகி போன்ற நண்பனுக்கு கண்ணன் அரசன் என்ற இடத்தில் நிற்கும்போது தொழும்பன் என்ற மரியாதை வந்துவிடுகின்றது. எவ்வளவு அணுக்கமாக சென்றாலும் கண்ணன் சற்றுத்தூரமாகவே சென்றுக்கொண்டு இருக்கிறான். ஒவ்வொருப்புறப்பொருளும் கண்ணனுக்கும், தனக்கு இடைவெளி என்றே ஆக்கிச்செல்கிறது. சியமந்தகமணி அதன் உச்சம். அது கண்ணனுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரத்தை வெகுவாக அதிகரிக்கிறது. சியமந்தகமணியின் சக்தியே அதுதான். தன் ஆணவத்தால் அதை கவர்வதன் மூலம், கண்ணனுக்கும் தனக்கு உள்ள இடைவெளி குறையும் என்று அறியமையால் அதை கவரும் சாத்யகி, சியமந்தகமணி கண்ணனிடம்  இருந்து துரத்தியே விடுகின்றது என்பதை அறிகின்றான். ஆணவத்தின் பயன் நிலை குலைய வைக்கிறது. 

“நீயே நான், நானே நீ” என்னும் அத்வைதியாக ஆகும்வரை அவனுக்கு அந்த இடைவெளி இருந்துக்கொண்டுதான் இருக்கும். ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலம் நீங்கும் வரை இந்த “நீயே நான், நானே நீ” என்னும் தரிசனும் கிடைப்பது இல்லை. இந்த வேற்றுமை இருக்கும்வரை பரபிரம்ம தரிசனம் கிடைப்பது இல்லை. ஞானமார்க்கம் அங்கு வழிக்கிவிடுகின்றது. சமவயது உடைய சாத்யகியால் கண்ணணை குழந்தையாகவோ, அல்லது கண்ணனை தந்தையாகவோ கொண்டு சற்புத்திர மார்க்மும் அமைக்கமுடியாது.  

சாத்யகி தொழும்பன் குறி ஏற்றுக்கொண்டு, தன்னை கண்ணனின் தொண்டன் என்று எண்ணிக்கொண்டு தாசமார்க்கத்தில்தான் நின்றான். தாசமார்க்கத்தின் முதல் எதிரியாகிய ஆணவம்த்தூண் வளர்ந்து அதன்மீது ஏறும் பாதள நாகம் விடம் கக்கி அவனை சாய்க்கிறது.

இறுதியாக அவனுக்கு கிடைத்தது சகமார்க்கம். எளியமார்க்கம், கீழ்மேல் பார்க்காத மனம், நன்று தீ என்று கொள்ளாத குணம், குறிப்பாக மூம்மலங்களோடு ஏற்றுக்கொள்ளும் இடம். தன்னை மறக்கும்போதே இந்த நிலை வருகின்றது. என்றும் இன்பம் உற்சாகம் களி என்ற நிலைவரும்போதே இது ஏற்படுகின்றது. பலம் பலகீனம் எதையும் மறைக்காத நலைவரும்போது இது தழைக்கிறது. இதற்கு ஒருபோதைவேண்டும், செயற்கையாக தன் அகங்காரத்தை மழுங்கடிக்கும், சுய அறிவை மறைக்கும் ஒரு போதை வேண்டும், அது நட்பென்னும் போதை. அது விண்ணை தலையில் சூடி, பாதளத்தை உருஞ்சும் நட்பென்னும் பனைமரத்தில் விளையும் போதை, சாத்யகி கள்ளுண்டு அந்த இன்ப மயக்கத்தில்  தன்னை மறந்து கண்ணனின் சகன் என்று கண்டுக்கொள்வது அற்புதம்.

நீ அங்க நான் இங்க இருந்தால் என்ன? உனக்கும் எனக்கும் இடையே தடையாக இருப்பது இந்த புறக்காட்சிகள் தான், அதை நான் காட்சியாகவே வைத்து விட்டு, உள்ளத்தால் எனது உணர்வால் மட்டுமே இணைகின்றேன் என்று செய்கிறது அந்த போதை. இதோ இதுதான் நான், எனது வாசமும், நாற்றமும் உடன் வந்துள்ளேன் என்கிறது. எனது புளிப்பும் இனிப்பும் உடன் வந்துஉள்ளேன் என்கிறது. 

சாத்யகி மயக்கும் கள்ளருந்தவில்லை, நட்பென்னும் இன்கள் அருந்துகின்றான். அவன் நட்பென்னும் இன்கள் நுரைக்க நுரைக்க அந்த நுரைக்குமிழில் வந்து தானாவே விழுகின்றது வான் நீலம்.முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். (வாழ்க்கையில் எத்தனையோ முறை சோப்புநுரையில் வானத்தைப்பார்த்து இருந்தாலும், இந்த இடத்தில் ஜெவின் வரி அதிரவைத்துவிட்டது, அதுவும் அந்த வான்நீலம் கண்ணன் என்றுப்பார்க்கும்போது இரத்த நாளங்களில் நீலனின் புரவிகள் ஓடுகிறது)

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் “ஒரு குவளை கள்ளில் உனக்கு போதை வரும் என்றால், குடத்தில் எவ்வளவு கள்ளிருக்கு என்ற கணக்கு உனக்கு எதற்கு?” என்பர்.

சாத்யகி கள்ளைத்துளித்துளியாக உறிஞ்சிக்கொண்டு இருந்தான் என்றவரிதான் எத்தனை உணர்வுகளை தூண்டுகின்றது. குசலன்போல கண்ணனை அப்படியே குடித்துவிடுபவன் கீதை சொல்லலாம். திருஷ்டத்யுமன் போல இருமிடறுகளாக குடிப்பன் கண்ணனின் இருமையை அறியலாம், பலபெண்களின் கணவன், ஆனால் யோகிஸ்வரன், குழல் ஊதுபவன் ஆனால் கழுத்தறுப்பவன், வள்ளல் ஆனால் லாபம்மீட்டும் வணிகன். கன்றுமேய்ப்பவன் ஆனால் உலகின் பேரரசன். 

திருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக!” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்! விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான்-இந்திரநீலம்-88

சாத்யகிப்போன்று கண்ணனை துளித்துளியாக குடிப்பன்தான் நண்பனை உணர்கிறான். மயக்கும் கண்ணன் முன்னால் பிறந்தானா? மயக்கும் கள் கொடுக்கும் பனை முன்னால் பிறந்ததா? இரண்டும் கறுப்பாக இருப்பதுதான் கடவுளின் திருவிளையாடல். பிறந்ததில் இருந்துப்பார்த்த பனைமரம் ஏன் கறுப்பாக இருக்கிறது என்று ஒருநாள்கூட நினைத்தது இல்லை இன்று இந்த சாத்யகியும், கண்ணனும் நினைக்கவைத்துவிட்டார்கள் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.