எங்களூரில்
மீனாட்சி ஆச்சி என்றொரு ஆச்சி இருந்தாள். என் அப்பா அவரை எப்போதும்
மீனாட்சியம்மை என்றே அழைப்பார். அப்பா வயதுள்ள அனைவருமே அவருக்கு பிள்ளைகள்
தான். மக்கா என்று அவர் அழைக்கையில் என் அப்பா கனிவதைக் கண்டு பலமுறை
வியந்திருக்கிறேன். அப்பா மிகவும் அழுத்தமானவர்(அவரின் இளமையில்), ஊரில்
யாருடனும் நின்று பேசுவதோ, ஊர் விவகாரங்களில் தலையிடுவதோ கிடையாது. ஏன்
அந்த ஆச்சியிடம் மட்டும் இப்படி என்று கேட்டேன். மீனாட்சியம்மைக்கு அவர்
வயதில் ஒரு மகன் இருந்திருக்க வேண்டும்.
மிக
தூரதிர்ஷ்டவசமாக மிக இளவயதிலேயே அவன் இறந்துவிட்டான். கிட்டத்தட்ட அதே
சமயம் அவர் கணவரும் இறந்துவிட்டார். தாங்கவே இயலாத இத்துயரங்களில் இருந்து,
கணவனுமில்லாமல், இருந்த ஒரே குழந்தையுமில்லாமல், உறவென்று சாய்ந்து நிற்க
யாருமில்லாமல் இருந்த கையறுநிலையிலிருந்து அவர் அசாத்தியமாக மீண்டார்.
ஊரின் அனைத்துக் குழந்தைகளும் அவர் குழந்தைகளாயின. என் தந்தைக்கு அவர்
தாயாரிடம் கிடைக்காத அரவணைப்பு அந்த ஆச்சியிடம் கிடைத்திருக்கிறது. நானே
பார்த்திருக்கிறேன், தெருவில் எந்த குழந்தை கீழே விழுந்தாலும் 'யம்மா, என்
பிள்ள!' என்ற பதட்டத்தோடு அவர் அள்ளித் தூக்குவதை. நான் கல்லூரி
பயில்கையில் அவர் மரணமடைந்தார். ஊரே சேர்ந்து அவருக்குச் செய்ய வேண்டிய
இறுதி மரியாதைகளை மிகச் சிறப்பாகச் செய்தது. பலர் மகன் குறை தீர்க்க
மொட்டை போட்டார்கள். பல பேரன்கள், பேத்திகள் நெய்ப்பந்தம் பிடித்தார்கள்.
அமிதையின்
கதை எனக்கு மீனாச்சி ஆச்சியைத் தான் நினைவு படுத்தியது. தான் இழந்த மகனை
ருக்மணியில் மகளாகக் கண்ட தாய், தன் வாழ்வுக்கே பொருள் தந்தவளை
மடியிலேந்தி, முலையூட்டி, சீராட்டியவள் அவளுக்காக கழு அமரவும் சித்தமானது
ஒன்றும் வியப்பில்லை தான். இறுதியில் ருக்மியின் கையால் அடையும்
மரணத்தையும் அவள் இதுநாள் வரை பிரிந்திருந்த மகனுடன் இணையும் நிகழ்வாக,
ஆனந்தமயமான உலகுக்குச் செலவதாகக் காட்டியமை அபாரம் ஜெ. அவளை அழைத்துச்
செல்லும் மகனை பீலிவிழியும், வேய்குழலோடும் கண்டதாகச் சொல்வதில்
இப்பாரதமெங்கும் அன்னையர் உள்ளத்தில் அவரவர் மைந்தராக இருக்கும்
ஆழ்படிமத்தைக் கன கச்சிதமாகக் கொண்டு வந்துவிட்டீர்கள். உண்மையில் மனம்
நிறைந்திருக்கிறது, ருக்மணி கிருஷ்ணனை அடைந்ததால் என்பதை விட அமிதை தன்
வாழ்நாள் நிறைவை அடைந்ததால்.
நெகிழ்வுடன்,
மகராஜன் அருணாச்சலம்
மகராஜன் அருணாச்சலம்