ஜெவின் அனல்காற்று நாவல் நாயகன் இருபெண்கள் இடையில் பயிலும் மனநடனத்தை வசுதேவரைக்கொண்டு இன்று அரகேற்றிவிட்டார். இதை நண்பர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.
அனல்காற்று நாயகன் உணர்ச்சி மயமானவன் தனக்குள் குதிக்கும் காமத்தை, காதலை வெளியில் கொட்டி, கல்லில் கொட்டிய பச்சைபயறு என தெரித்து ஓடுவதைக்கண்டு தவிக்கிறான்.
வசுதேவர் உணர்வு மயமானவர் வெளியில் இருக்கும் காதலை, காமத்தை உள்ளத்தில் நட்டு கொடியென படரவிட்டு பந்தல்போட்டு ரசிக்கிறார். பூத்தும் காய்த்து கனிந்தும் நிற்கிறது.
முன்னது யுத்தம் என்றால் பின்னது விளையாட்டு, இரண்டின் வடிவம்தான் வேறாக இருக்கிறது குணம் உயரம் களம் ஒன்றுதான். வாழ்வா சாவா என்பதுதான் இரண்டுக்கும் முடிவு.
உணர்ச்சி உடல் சார்ந்தது, உணர்வு அகம்சார்ந்தது இரண்டுமே ஜெ கைவண்ணத்தில் மின்னிமலர்கிறது, இது ஜெவால்தான் முடியும்.
“ஆம் அரசே, ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுள் ஒரு பெண்ணை நடித்துக் கொண்டிருக்கிறான். இப்புவி என்பது அன்னை தான் விளையாட அமைத்த பெருங்களம். அதன் நடுவே தன் விண்மைய ஒளிப்பீடத்தில் அவள் அமர்ந்திருக்கிறாள். இங்குள அனைத்தும் அவளை நோக்கி தொழும்பொருட்டே எழுந்தவை. அன்னை எழுந்தருளாத ஆண்மகன் உள்ளம் ஏதுமில்லை” என்று சாக்தராகிய சுமந்திரர் பாடினார்-இந்திரநீலம்-82. இந்த இடம்தான் இந்த இந்திரநீலம்-82ன் உச்சம். ஆணும் பெண்ணும் ஒருநோக்கில் வனமென்றும், மறுநோக்கில் துளிர் என்றும் ஆகும் ஒரு பிரபஞ்ச தரிசனம் இந்த வரிகள். நேற்று இன்று நாளை என்னும் மானிட மாலையில் இனி எப்படி எந்த மலரை சிறிதென்று, பெரிதென்று தரம் பிரிப்பது?. இனி அர்ஜுனனைக்கொண்டு சுபத்திரையை அளவிடுவதா? அல்லது சுபத்திரையைக்கொண்டு அர்ஜுனனை அளவிடுவதா?
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.