Wednesday, August 19, 2015

மகத்தான மனத்தடை

இந்திர நீலத்தின் 79ம் அத்தியாயம் ஒரு வகையில் நாவலின் உச்சம். இதில் சாத்யகி கொள்ளும் அந்த மனத் தடுமாற்றம், அதை அவனுக்கு அளித்த அந்த மனத்தடை, அத்தகைய ஒரு நிகழ்வுக் கோர்வையை நாவலில் கொணர்ந்தமை அபாரம். 

சியமந்தகத்தைத் தனதாக்கிக் கொள்ளும் விழைவில் வெளியேறிய சாத்யகியைக் கண்டு மீட்டு வருகிறான் திருஷ்டதுய்மன். "ஆமாம் நான் தவறிழைத்து விட்டேன், என்னைத் தண்டியுங்கள், மன்னியுங்கள் அது உங்கள் உரிமை. இதோ இந்த தவறும் தான் நான்", என்ற தெளிவுடன், பூரண சரணாகதி மனநிலையில் கிருஷ்ணனின் அரண்மனை நோக்கி வருகிறான் சாத்யகி. அதை, "சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் போன்று"  என்கிறது வெண்முரசு. சற்றும் சலனம் என்பதே இல்லாமல் ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கும் அப்பருந்துகளை வானமே தூக்கிச் செல்லும். அதைப் போன்றே சித்தமொழிந்த அவர்களை அவர்கள் குதிரைகள் சுமந்தேறுகின்றன. 

கொஞ்சமேனும் சுயத்தில் இருப்பவனான திருஷ்டதுய்மனால் சாத்யகியின் இந்த மௌனத்தைத் தாள இயலவில்லை. ஆனாலும் அவனால் அதைக் கலைக்கவும் இயலவில்லை. இந்நிலையில் தான் ஒரு பளிங்கு வளைவில் தலைகீழாகத் தெரியும் தோரண வாயிலைப் பார்க்கிறான் திருஷ்டதுய்மன்.  அத்தருணத்தை எப்படியாவது கடந்து விடத் துடிக்கும் திருஷ்டதுய்மனின் மேல் மனம் அது எவ்வாறு அப்படி எதிரொளிக்கப்படுகிறது என்று அறிய முற்படுகிறது. ஆனால் அங்கு அவன் கண்ட தோரணவாயிலின் தலைகீழ் தோற்றம் என்பது சாத்யகியின் தற்போதைய நிலை தானே. 

திருஷ்டதுய்மனைப் பொறுத்த வரையில் தொழும்பர் குறியேற்ற, கிருஷ்ணனுக்காக தன் உடல், ஆன்மா அனைத்தையும் அற்பணித்த சாத்யகி அவனால் என்றுமே ஆக முடியாதவற்றால் ஆனவன். எனவே அவன் அத்தோரணவாயிலைப் போன்றே உயரமானவன். அத்தகையவன் இப்போது தலைகீழாகக் கிடக்கிறான். மிக நுட்பமான உளவியல் இது. எவ்வளவு தான் நெருங்கிய நண்பன் என்றாலும் நம் கீழ்மையில் ஒன்றிரண்டையாவது பகிர்ந்து கொள்ளாதவன் மீது அகத்தின் அதலத்தில் ஒரு சிறு பொறாமை ஏற்படத்தான் செய்யும். அப்பொறாமையை, அவ்வெண்ணம் தரும் கீழ்மையை மறைக்கவே அவனைப் பற்றி ஒரு மீப்பெரும் பிம்பத்தை நம் மனது கற்பனை செய்து அதை வெளிப்படையாக பேசி, நடித்து நம்மை நம்ப வைக்கும். ஆனால் அவன் கீழே விழும் தருணத்திற்காக ரகசியமாக காத்திருக்கும். திருஷ்டதுய்மனைப் பொறுத்த வரை சாத்யகிக்கு அவன் அளித்த அத்தகையதொரு சந்தர்ப்பமே அவன் கையில் சியமந்தகத்தைக் கையளித்தது. ஒருவகையில் சாத்யகி கீழே விழ வேண்டும் என்ற அவனது அக அதலத்தின் இச்சையின் வெளிப்பாடே சாத்யகியின் தற்போதைய நிலை. ஆக அவனது உள்ளக் கீழ்மையின் எதிரொளிப்பே சாத்யகியின் தலைகீழ் தோற்றம்!!! இப்போது அவர்கள் இருவருமே ஒரு மந்தணக் கீழ்மையைப்  பகிர்ந்துகொள்கின்றனர். எனவே தன் சுய கீழ்மையைத் தாண்டும் விதத்தில் கிருஷ்ணன் அளிக்கச் சொன்ன தண்டத்தை அவன் வழங்காமல் தானும் அத்தவறில் பங்கேற்றுக் கொள்கிறான் திருஷ்டதுய்மன். எனவே இருவருமே ஒரு வித சரணாகதி மனநிலையில் தான் செல்கின்றனர்.

இது வரை எந்த இலக்கியமும் கையாளும் ஒரு தருணமாகவே இது இருக்கிறது. இதற்கு மேல் சாத்யகி கொள்ளும் அந்த மனத்  தடைகள் தான் இதை காவியம் ஆக்குகிறது. இந்த நிழல் பற்றிய பேச்சுகளில் சித்தம் கலைந்த இருவரும் மேலும் முன்னோக்கி செல்கின்றனர். இப்போது அந்த இருவருக்குமே அது வரை இருந்த ஏதோ ஒன்று சென்று விடுகிறது. மீண்டும் தங்களின் கீழ்மையின் கனம் அழுத்துகிறது. அவர்களின் "புரவிகள் எடைமிக்க குளம்போசையுடன்" முன்செல்வதாக வெண்முரசு சொல்கிறது. அது வரைக்கும், பல முறை கண்ட அந்த மாளிகை சாத்யகியை அச்சுறுத்துவதாக உணர்கிறான். அவனை நோக்கி ஏளனப் புன்னகை புரிவதாக, அதனால் அவன் ஆணவம் புண்படுவதாக உணர்கிறான். அதனால் அங்கு வரப் போவதில்லை என இறக்கத்தில் விசை கொள்ளும் பந்தாக சடுதியில் கீழிறங்குகிறான்.

யோக முழுமையின் பலனான தன்னை அனைத்துமான ஒன்றாக அறியப் போகும் அந்த வேளையில்,  தன்னை முழுமையாக இழக்கப் போகும் அந்த வேளையில் வரும் தன்னுணர்வு தரும் இந்தத் தடை மாபெரும் யோகியரலேயேத் தாண்ட அரிதானது. நீலத்தில் கண்ணனுடன் ஒன்றாக விழையும், பிரேமையினாலேயே தனக்கான கண்ணனை உருவாக்கி அதிலேயே கரையத் துடிக்கும் ராதை கூட அவனில் கலந்துவிட்டேன் என்றால் நான் என்று எஞ்சுவது தான் எது என்று மயங்குகிறாள். அவ்வுணர்வையே அவன் மீதான கோபமாக்கி, அவனைக் கொல்ல வேண்டும் என்கிற அளவு செல்கிறாள். யோக மரபில் சிவனின் தலை கொண்டு அவன் மார்பில் கால் பாதிக்கும் காளி என்பது இத்தருணத்தைக் குறிக்கும் ஒரு ஆழ்படிமம். இங்கு சாத்யகியும் அதே போன்றதொரு நிலையில் தான், "என்னால் இயலவில்லை பாஞ்சாலரே. ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டு வந்தேன். கையளவுக்கு மட்டும் எஞ்சிய ஒன்று என்னை தடுத்தது. அச்சிறு ஆணவமே என்னை நானென்று ஆக்குகிறது. இப்பெயரை, இக்குலத்தை, இவ்வுடலை, இவ்விழைவை நான் சூடச்செய்கிறது. அதையும் இழந்தால் உப்புப்பாவை கடலை அடைந்தது போல நான் எஞ்ச மாட்டேன். மீட்பும் இறப்பும் இன்மையும் ஒன்றென ஆகும் ஒரு தருணம் அது. அடியிலா ஆழம் ஒன்றின் இறுதி விளிம்பை அடைந்தது போலும் உடல் மெய்ப்புற்றது. அவ்வாழத்திலிருந்து எழுந்து வந்த கடும் குளிர்காற்றுபோல அச்சம் என்னை பின்தள்ளியது. என்னால் அங்கு வரமுடியாது. எத்தனை கீழ்மகனாக எஞ்சினாலும் சரி, தீரா நரகத்தில் இழிசேற்றில் புழுவென நெளிந்தாலும் சரி, இவ்வாணவம் ஒரு துளி என்னிடம் எஞ்சியிருக்க வேண்டும். இது மட்டுமே நான். இக்கீழ்மையின் நிழல் துண்டு மட்டுமே சாத்யகி என்னும் வீரன்." என்று சொல்கிறான். ராதை பிரேமை என்னும் வழியில் தனக்கான முழுமையைத் தேடினாள் என்றால் சாத்யகி முழுமையான அற்பணிப்பு என்ற தாச பாவத்தில் தனக்கான முழுமையைத் தேடுகிறான். அம்முழுமையை அடையச் சாத்தியமான கையெட்டும் தூரத்தை அவன் அடையும் போது மிக இயல்பாக வரும் தான் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் அவனது தன்னுணர்வு அவனைக் கீழே தள்ளுகிறது. 

யோகத்தில் வரும் இத்தடையை நடைமுறை வாழ்வில் காட்டிய விதம் அபாரமான ஒரு மன எழுச்சியைத் தந்தது. அத்தடை தோன்றும் அக்கணத்தை திருஷ்டதுய்மன் விளக்கும் விதம் இன்னும் அழகு. நல்லது செய்யப் போகும் வேளையில் வரும் அத்தடை 108 பாதாள தெய்வங்களால் காக்கப்பட்டுள்ளது என்கிறான். அத்தெய்வங்கள் "அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென", பல்லுருக் காட்டி நம்மை அந்த நற்செயலைச் செய்வதில் இருந்து விலக்க முயலும். "இத்தருணத்தில் அதை கடக்காவிடில் பிறகு ஒருபோதும் அது நிகழாமல் ஆகிவிடும். ஒரு கணம் விரிந்து ஒரு பிறவியென்றாகலாம். ஏழ்பிறவியென எழலாம். முடிவிலி கூட ஆகலாம்.", என்பது தான் எத்துணை உண்மை. எத்தனையோ யோகிகள் இந்த ஒரு சிறு தடையைத் தாண்ட இயலாமல் அதல பாதாளத்தில் விழுவதும், பின் எழவே முடியாமல் இருப்பதும் நமது புராணங்களில் பல முறை வந்தது தான். நடைமுறை வாழ்விலும் பல வருட உழைப்பில், பல தியாகங்களுக்கும், இழப்புகளுக்கும் பிறகு அடைந்த உச்சத்தை ஒரு எளிய தவறு நேரும் சமயம் தடுக்க இயலாத மனத்தால் கீழே விழுந்த பல பிரபலங்களை நாம் அன்றாடம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் .

இத்தனை வருடம் தொழும்பர் குறியேற்று கிருஷ்ணனைத் தவிர தன் வாழ்வில் வேறொன்றும் இல்லை என்று முழுதறிவித்து, தன்னை முற்றிலும் அவிழ்த்து, தன்னைச் சமர்ப்பிக்க பன்னிரு வளைவுகளை ஏறி வந்த சாத்யகி, அந்த கடைசி நேரத் தடை தரும் எதிர்ப்பில் சடுதியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுகிறான். இனி தன் மீட்சியை சரணாகதி மூலம் கண்ணனை அடைந்தவர்களை, அவர்களின் சமர்ப்பணத்திற்காக அவர்களைத் தேடி வந்த கண்ணனைப் பற்றிய கதைகளைக் கேட்டு, மீண்டும் கிருஷ்ணனால் மீட்கப்படுவான் அவன். "ஒரு நீர்த் துளியை வற்றாமல் காப்பது எப்படி? அதைக் கடலில் எறிந்து விடுங்கள்!!!" என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. அபாரமான அத்தியாயம்!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.