Tuesday, January 10, 2017

மான்கொடி

 [நான்குமுக சிவன்]
அன்புள்ள ஜெ வணக்கம். 

//திமிலெழுந்த வெண்காளை ஒன்று அவருக்குத் துணையென்றிருந்தது. அதனால் அவர் பெயர் பசுபதி எனப்பட்டது. மழு அவர் படைக்கலம். உடுக்கு அவர் காலம். மான் அவர் கொடி. பைநாகம் அவர் கழுத்தணிந்த ஆரம். கதைகள்சொல்லி வரைந்ததெடுத்த ஓவியமே இன்று அவர்.”//

இங்கே சிவத்தின் கொடி மான் என்று காட்டுகின்றீர்கள். விடை ஊர்ந்து விடைக்கொடி ஏந்தியவன் என்று தேவாரம் காட்டுகின்றது. மான்கொடியும் சிவத்திற்கு உண்டா? மழு மான் ஏந்தியவன் என்பதால் படைக்கலமும் கொடியும் என்று காட்டுகின்றீர்களா? 

அன்புடன் 
ரா.மாணிக்கவேல். 


அன்புள்ள மாணிக்கவேல்

சிவ சின்னங்கள் அனைத்துமே பிற்காலங்களில் சிற்பங்களில் சேர்க்கப்பட்ட யோகக்குறியீடுகளே. நாகம் மான் மழு எல்லாம குறியீடுகள்தான்.சிவனை மாடலாக நிறுத்தி உருவாக்கப்பட்டவை அல்ல இச்சிற்பங்கள். அவை யோக தரிசனங்கள்
ஆகவே எது வாகனம் எது கொடி என்பதிலெல்லாம் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அதாவது சிவன்  ‘உண்மையில்’ எந்தக்கொடி வைத்திருந்தார் என்று கேட்பது சரியல்ல. சிவன் கையில் இதைக்கொடுப்பதனடாக இந்த சிற்ப எந்த யோக அர்த்தத்தை உத்தேசிக்கிறான் என்பதுதான் . ஒரு கவிதைவரிபோல.  
இந்தியச்சிற்பங்களை பயணம் செய்து பார்க்க ஆரம்பித்தால் எல்லாவகையான வேறுபட்ட வடிவங்களும் இருப்பதைப்பார்க்கலாம். வட இந்தியாவில் வேதாளவாகனம் கொண்ட சிவன்கூட உண்டு

வெண்காள சிவனின் வாகனம். சிலசமயம் கொடியாகக் குறிப்பிடப்படுகிறது. துள்ளும் மான் யோகநெருப்பின் குறியீடு. சிலசமயம் கொடியாகவும் சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் சிவன் கையில் மான் மழு இருப்பது மிகவும் அரிது.  

ஜெ