Friday, January 20, 2017

சிவசக்தி லீலை


அன்புள்ள ஜெ வணக்கம்.  

சோமாஸ்கந்த வடிவமாக படைக்கப்பட்ட கைலை காளன் காளி சித்திரம் மனதை நெகிழச்செய்கிறது. அறிவென்ற கொடும்பல்சக்கரத்திற்கு இடையில் வாழ்க்கை என்னும் கரும்பை வைத்து நசுக்கி இன்பம் என்னும் சாறுபிழியும் நிலையால் தோன்றும் ஆதாய வாழ்வு அங்கு இல்லை. அறிதல்கடந்த உணர்ந்தல் நிலை அங்கு இயற்கை நீருற்றுபோல் பொங்கிவழிவதால் அறிவுக்கடந்த ஆனந்தவாழ்வு அங்கு நடக்கிறது. 

வாழ்வை அறிதல் மூலம்காணும் அர்ஜுனனுக்கு அது கீழ்நிலையில் உள்ளதுபோல் தோன்றுகின்றது. ஆனால் அவன் அந்த வாழ்வை உணரும் கணத்தில் அதில் உள்ள உணர்வுநிலையால் உச்சவாழ்வைக்கண்டுக் கொள்கின்றான். மிகவும் நேர்த்தியாக திறமையாக காளன் காளி வாழ்வை சித்தரித்து உள்ளீர்கள். மண்விண்தொடும் ஒரு ஆதிசிவசக்தி தரிசனம். 

எதையும் காரணம் கொண்டு நோக்கும் தர்க்கப்புத்திக்கு அது இன்னும் முன்னேறாத கிராதக்காலத்து வாழ்க்கைப்போன்றுதான் தோன்றுகின்றது. ஆனால் வாழ்வின் பல உச்சங்களை அறிந்து தெளிந்து அறிவில் விஞ்சிநிற்கும் காலத்தாலும் தொடமுடியாத ஒரு முழு வாழ்வு அதற்குள் உள்ளது. அந்த வாழ்வை மானிடத்தொகை தொட்டாலேபோதும் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிடும் தன் தெய்வீகததை உணர்ந்துவிடும்.
அர்ஜுனன் பன்றிக்காக காட்டாளனிடம் போர்புரிகின்றான். காட்டாளன் பன்றிக்காக போர்புரியவில்லை மாறாக அவன் மனதில் போரே இல்லை. அவன் போர்புரிவதுபோல் விளையாடுகின்றான் அல்லது எதிர்வினை மட்டும் ஆற்றுகின்றான், அவன் அறிவுப்பூர்வமாக அதை செய்யவில்லை அந்த கணத்தின் உணர்வுநிலை அது என்று மட்டும் காட்டுகின்றான். ஒரு இலை தன் கிளையில் ஒரு திசையை நோக்கித்தான் இருப்பேன் என்று அடம்பிடிப்பதில்லை அந்த கணத்தில் அது எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசையில் முழுவதுமாய் ஆனந்தமாக இருக்கிறது. காட்டாளன் அந்த கணத்தின் இலைபோல ஆனந்தத்தில் இருக்கிறான். அர்ஜுனன் அவனுக்கு எதிர்திசையில் கணம் கணம்தோறும் புலன்களின் பிடியில் கட்டி இறுக்கப்படுகிறான். அதை அறிவுபூர்வமான வாழ்தல் என்று நினைக்கிறான். 

போரில் தோற்று ஆற்றல் இழந்து அறிவிழந்து திறமை இழந்து உள்ளம் உடைந்து ஆண்மை பொடிந்து கண்ணீர் சிந்தி அர்ஜுனன் தற்கொலை செய்துக்கொள்ளச்செல்லும்போதும் காட்டாளன் எந்தவித பதற்றமோ அறிவுப்பூர்வ ஆராட்சியோ செய்யாமல் அந்த கணத்தின் உணர்வு நிலைக்கு தக்கப்படி அர்ஜுனன் நிலையை கண்டுக்கொண்டு உணர்ந்துக்கொண்டு இருக்கிறான். அது சரி என்றோ தவறென்றோ அவன் எந்த முன்முடிவுக்கும் வரவில்லை. காட்டாளனிடம் அவனை வென்று செல்லவேண்டும் என்ற சொல்கூட இல்லை. அந்த கணத்தில் அர்ஜுனனைக்கொல்ல அவனுக்கு எந்த கட்டாயமும் இல்லை அதனால் அவன் அர்ஜுனன் வார்த்தையின் வழியாக அர்ஜுனன் அகத்தோடு இழைந்து ஓடுகின்றான் அவ்வளவுதான் அவன் செய்வது. அதுவே அர்ஜுனனுக்கு மிகையாக இருக்கிறது. 

இடுப்பில் ஒரு குழந்தையைத்தூக்கிக்கொண்டு உடன் ஒரு பிள்ளை வர எளிய அன்னையாகவரும் காளி அர்ஜுனனின் தற்கொலையை தடுப்பதன் மூலமாக  அந்த கணத்தில் மூன்றுக்குழந்தையின் தாயாக காட்டாளின் காதலியாக மட்டும் நிற்கிறாள். அவள் தன்னை தாய் என்றோ காதலி என்றோ அறிந்துக்கொண்டு செயல்படவில்லை, அந்த கணத்தின் தாயும் காதலியும் என்று உணராமலே உணர்வுநிலையில் பயணிக்கின்றாள். அது அவளுக்கு ஒரு இருப்பு. அது அவள் செய்துக்கொண்டது இல்லை. மனிதர்கள் தங்களை தாங்களெ செய்துக்கொண்டு இருக்கையில் எதுவும் செய்யாமல் ஒன்று முழுதாக வரும்போது அது எளிதாக தாழ்ந்ததாக தெரிகிறது. 

ஒன்றை ஒன்று சமன்செய்யும் ஒரு சக்தியின் இருதுருவங்களாக இருக்கும் காட்டாளனும் காளியும் அர்ஜுனன்போன்ற அறிவிழியாளர்களுக்கு இரண்டாக தெரிகின்றது ஆனால் அது ஒரு முழுமையின் உணர்வுநிலை என்று காட்டாளன் காளியுடன் ஊடியும் கூடியும் செல்லும்போது உணரப்படுகின்றது.

பாசுபதம் என்றால் என்ன? என்று காட்டாளன் காளியிடமே கெஞ்சிக்கொஞ்சிக்கேட்பது ஒரு பகடிபோல நவநாகரீக வாழ்க்கைக்கு வெகுதொலைவில் இருப்பதுபோல் தோன்றினாலும் அதற்குள் உள்ள மெய்மை அதிசயக்கவைக்கிறது. பாசுபதத்தின் பொருளாக இருப்பவன் உணர்வாக இருப்பவன் காட்டாளன் அவனால் பாசுபதம் என்பதை சொல்லாக அறிவுப்பூர்வமாக சொல்லமுடியாது. பாசுபதம் என்றாலே அவன் பாசுபதமாக மாறிவிடுவான். அதனை சொல்லாக காளியால்தான் சொல்லமுடியும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சிவபெருமான் வேடம்போட்டால் சிவனாகவே சாமதியில் ஆழ்ந்துவிடுவார் அதன்பிறகு அவரால் எப்படி சிவனாக நடிக்கமுமடியும். “க“ என்றஉடனேயே பிரகலாதன் கண்ணில் கண்ணீர் வழியுமாம். அவன் கண்களுக்கு கண்ணன் தெரிவானாம். அதன்பிறகு அவனால் எப்படி க கா கி கி சொல்லமுடியும். பாசுபதம் என்றாலே பாசுபதமாகிடும் உணர்வுநிலையில் இருக்கும் காட்டாளன் எப்படி பாசுபதத்தின் பொருளை விளக்குவது. அதை காளி விளக்குவதாக நீங்கள் படைத்ததை நினைத்து நினைத்து ஆனந்தப்படுகின்றேன்.

சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே-என்று அபிராமிப்பட்டர் சொல்லும் தன் துணைவருடன் புல்லும் பரிமளப்பூங்கொடியாய் நிற்கும் காளியை காணும்போது ஆதி அன்னை கண்முன் வந்து நிற்கும் அற்புதம் தோன்றுகின்றது. எளியக்கல் அதன்மீது ஏறும் பக்தியால் தெய்வமாவதுபோல காளி ஆதி அன்னையாகி விடுகிறாள். 

காட்டாளன் உடன் போர்செய்யும் அர்ஜுனன் காட்டாளன் இடுப்பளவே இருக்கிறான். காட்டாளன் தோள்தசை அர்ஜுனன் தலைஅளவு உள்ளது என்றுக்காட்டி, காளி அர்ஜுனன் இடம் பன்றியை ஒற்றைக்கையில் தூக்கிதரும்போது அதன் பாரம் தாங்காமல் அர்ஜுனன் பன்றியை கீழே தவறவிடுகிறான் என்பதைக்காட்டும்போது காளியின் உள்வலிவு காட்டாளனுக்கு எத்தனை இணக்கமாக இணையாக உள்ளது என்பதை அறியமுடிகிறது. உள்ளம் இணையும் அத்த ஒத்திசைவை உடலிலும் இணைத்துக்  அவள் காட்டாளன் உயரமிருந்தாள் என்று காட்டும்போது காளனும் காளியும் மாதொருபாகனாய் அகம்புறம் இணைந்த ஒத்த ஒரு சக்தியாய் கண்முன் விரிகின்றார்கள். இந்த மாதொருபாகன் தன்மையே அவர்களை கிராதகாலத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகின்றது. உண்மையில் நாகரீக மானிட உலகம் முழுமையை கீழாக கற்காலத்தன்மையாக நினைக்கிறது என்பதை நினைத்து மானிடவர்க்கத்தின்மீது பரிதாப்படத்தோன்றுகின்றது. எழுபது வயது தாத்தா பதினேழுவயது பேத்தியுடன் டூயட்பாடும் காலத்தில் கனவில் தொலைந்துபோகும் மானிடம் தன் இழந்தது என்ன என்பதை அறியுமா?

பித்தன் என்றும் பிச்சி என்றும் பேயன் என்றும் பேயிச்சி என்றும் முரண்டுக்கொண்டே இருப்பது அவர்கள் தங்கள் துருவங்களின் தூரங்களை உண்டு ஒன்றிவிடுவதற்காகத்தான், அவர்கள் அந்த ஆழ்நிலையில் உறைந்தவிடாமல் இருக்க   சடையர்கள் அவன்மேல் கல் எறிந்து உலகை நினைவுருத்திக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களின் லீலைகள் இங்கு நிகழவேண்டும் என்று விரும்புகின்றார்கள். அவனோ அவள் தன்னில் உறைந்துவிடாமல் இருக்க அவள்மேல் சொல் எறிந்துக்கொண்டே இருக்கிறான்.

//“பூசலா? நாங்களா?” என காளன் திகைத்தான். “ஆம், நானே பலமுறை கண்டேனே!” என்றான் அர்ஜுனன். “அதுவா பூசல் என்பது? அவளை நான் வேறு எப்படித்தான் அணுகுவது?” என்று காளன் சொன்னான். “அவளை சற்றுநேரம் தனித்துவிட்டுவிட்டால் பனியிலுறையும் ஏரி என அமைதிகொண்டுவிடுவாள். அதன்பின் எரிமலை எழுந்தாலொழிய சொல்மீளமாட்டாள்.”//

காளனும் காளியும் எளிய வாழ்வாக நடத்தும் மானிட லீலையில் பொங்கிவரும் ஊடலும் கூடலும் உணர்வுநிலையில் விரிந்து எழும்போது பிரபஞ்ச சிவசக்திலீலையாக தரிசனம் தருகின்றது. கிராதம் நடமுறை வாழ்வில் உள்ள தெய்வீகத்தை எழுப்பி காட்டி வெல்கின்றது

ராமராஜன் மாணிக்கவேல்