Wednesday, January 4, 2017

அறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)
சண்டன் “வேளிரே, ஒன்றுணர்க! கற்றுத்தேரும் சொல் ஒருபோதும் மெய்மையை சென்றடைவதில்லை. அது ஓர் ஒப்பந்தம் மட்டுமே. கற்பித்தவர்களுக்கும் கற்றவர்களுக்கும் நடுவே ஒரு படைக்கலம்வைப்பு, ஒரு நிகர்நிலை ஒப்பு. அழியா மெய்ச்சொல் கல்லில் அனலென எழவேண்டும். அது கற்பதற்கேதுமில்லை. ஒலிகளையும் ஒப்புமைகளையும் மட்டுமே அது இங்கிருந்து பெற்றுக்கொள்கிறது” என்றான்.

வெண்முரசு பொங்கி பெருகி பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப் படிப்பவருக்கு  இருக்கும் ஒரு இக்கட்டு என்னவென்றால் பல சிறந்த கருத்துக்களை போதுமான கவனம் கொள்ளாமல் தவறவிட நேர்வதாகும்.  கல்வியைப்பற்றி சண்டன் கூறும் இக்கூற்று  மற்றொரு மகாவாக்கியமாகும்.  ஒரு ஆசிரியர்  இதை அறிந்து  உணர்ந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.  இந்த வாக்கியத்தில் என்ன அறிகிறோம் என்பதை தெளிவாக்கிக்கொள்ள முயல்கிறேன். 

ஆசிரியனின் பணி ஒருவன் அறிந்திருப்பதை அவனுக்கு தெரியப் படுத்துதலே.    ஏற்கெனவே அவனுக்கிருக்கும் அறிவை சொற்களாக மாற்றி அவன் சிந்தையில் தேக்குவதாகும்.  ஒருவனுக்கு அவன் கொண்ட ஆயுதமென அறிவு இருக்கிறது அதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித்தருவது கல்வி என்றும் கூறலாம்.  ஒரே ஆசிரியனிடம் பயில்பவர்கள் ஒரே மாதிரியான ஞானத்தைப்பெறுவதில்லை.  ஆசிரியன் மாணவனிடம் இருக்கும் அறிவைத் துலங்கச் செய்கிறான். ஒரு உலோகப் பொலிவு நிபுணன் கோயிலில் இருக்கும் தங்கச் சிலையை,  வெள்ளி அணிகலன்களை,  தாமிரப்பொருட்களை,  பித்தளை வேலைப்பாடுகளை,  ஐம்பொன்சிலைகளை எல்லாம் சுத்தப்படுத்தி பொலிவடையச் செய்கிறான். அவன் பொற்சிலையில் புதிதாக தங்கத்தைச் சேர்ப்பதில்லை. தாமிரப்பொருட்களில் எதையும் கூடுதலாக்குவதில்லை. பித்தளை கலன்களை பளபளவைக்க பொன்னைச் சேப்பதில்லை. ஐம்பொன் சிலைகள் அடையும் அழகு அதற்கு முன்னரே இருந்ததுதான். அவன் அப்பொருட்கள் மேல் படர்ந்திருக்கும் அழுக்கை நீக்குகிறான். அவைகளின் மீது ஒளி பிரதிபலிக்கும் வண்ணம் அவற்றை மழமழப்பாக்குகிறான்.  அவன் செப்பை பொன்னாக்குவதில்லை, இரும்பை வெள்ளியாக்குவதில்லை. இருக்கும் உலோகம் அப்படியேதான் இருக்கும். 
 
 
இதையேதான் ஒரு ஆசிரியர்  பல்வேறு மாணவர்களுக்கு கற்பிப்பது அமைகிறது. அவர் அவர்கள் அறிவின் மேல் படர்ந்திருக்கும் அறியாமையை, ஐயங்களை, புரிதலின்மைகளை துடைத்து நீக்குகிறான். அவர்களின் அறிவை அவன் சிந்தையிலிருந்து  சொற்களென  பிரதிபலிக்க வைக்கின்றான்.  ஆனால்  எல்லா மாணவர்களையும் ஒன்று போல அறிவுடையவர்களாக அவனால் ஆக்க முடிவதில்லை.  இதற்கு காரணம் இயற்கையாக இருக்கும் அறிவத்தாண்டி ஒருவனுக்குள் ஒன்றை ஒருவனுக்கு புகுத்திவிடமுடியாது. அப்படிப் புகுத்தப்பட்டது ஒரு சொல்மூட்டையாக  மட்டுமே அவன் சிந்தையில் இருந்துகொண்டிருக்கும். 
 
 
இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நம்மால் முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் இதை தவறு  என்றும் நம்மால் நிரூபிக்க முடிவதில்லை. எப்படி ஒரு சீனுவாச ராமானுஜன் கணிதத்துறையில் பெரும் மேதையாக தோன்றினார்?  ஏன் அன்றைய நாளைவிட சிறந்த சூழல்கள்  இப்போது  இருப்பினும் பல ராமானுஜன்கள் தோன்றவில்லை?  ஏன் ஒரு பத்து வயது சிறுவன் இருபதாண்டுகள் பயிற்சி பெற்ற ஒரு சதுரங்க விளையாட்டுக்காரரை வென்று விஞ்சுகிறான்?  இசை போன்ற கலைகளில் ஒருசிலர் மட்டும்  கொள்ளும் பெரும் வல்லமை எப்படி நிகழ்கிறது? 
 
 
 
 ஒருவன் பிறக்கும்போதே அவன் அவனுக்கான அறிவை பெற்றே பிறக்கிறான் என்றல்லவா இது காட்டுகிறது. அல்லது தானாக ஒரு அறிவு பின்னர் அவனுள் ஒரு தெய்வத்தைப்போல இறங்கியிருக்குமோ?   சரியான சூழலால், சரியான ஆசிரியரால்  துலக்கம் பெற்றவர்களின் அறிவு பொலிந்து ஒளிர்கிறது. மற்றவர்கள் அவ்வாறு அவர்கள் அடைந்திருக்கும் அறிவை கண்டுபிடித்து  துலங்கவைக்கப்படாததால் அல்லது வேறு அறிவுத்துறையில் தவறுதலாக திணிக்கப்படுவதால் மந்தமானவர்களென  ஆக்கப்படுகிறார்கள்.  
 
 
 
இதே உக்கிரன் ஒரு சூதர் இல்லத்தில் பிறக்காமல் ஒரு வேளான் குடியில் பிறந்து கடின உழைப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் போர் வீரன் மகனாக பிறப்பெடுத்து ஆயுதப்பயிற்சியில் ஈடுபடப்பட்டிருந்தால் அவன் ஒரு திறனற்றவனாக   ஒரு கோழையாக அடையாளம் காணப்பட்டிருப்பான்.   சூதர் குலத்தில் பிறந்ததால் அவன் பெற்றோர்கள் அவனை வேறு துறையில் செலுத்த விழையவில்லை. அதனாலேயே அவன் சண்டன் மற்றும் ஞானத்தைத் தேடி செல்லும் இளைய விவேகிகளால்  கண்டெடுக்கப்பட முடிகிறது.  அவர்கள் அவன் அறிவெனும் வேள்வித்தீயை போற்றி வளர்க்கும் வைதிகர்களாக ஆகிறார்கள்.
      
தண்டபாணி துரைவேல்