Saturday, January 14, 2017

கூழாங்கல்



பார்த்தனின் பாசுபதமாக அவன் கையில் வந்து சேர்வது ஒரு கூழாங்கல். இது முக்கியமான ஒரு குறியீடு. முன்பு காண்டீபத்திலும் இதே போன்றதொரு கூழாங்கல் வந்தது. அன்று அது நேமியின் கையிலிருந்தது. துறவிலிருந்து கடிமணம் நோக்கிக் கிளம்பிய அவர் தான் சென்றுகொண்டிருந்த வழியின் தடமாகத் தன் கையோடு கொண்டு சென்றதும் ஓர் கூழாங்கல் தான். ஒரு கல் கூழாங்கல்லாக மாற அதன் மீது காலம் ஓடியிருக்க வேண்டும். காலத்தின் அனைத்து ஆயுதங்களாலும் தாக்குண்டு தாக்குண்டு அக்கல் அதன் கூழாங்கல் வடிவை அடைந்திருக்க வேண்டும். அதன் மீது ஆதியின் எச்சமும், காலத்தின் எடையும் சேர்ந்தே இருக்கும். காலத்தின் எடையைப் பிரித்தெடுத்தால் எஞ்சும் ஆதியே முழு ஞானம்.

கிராதத்தில் அர்ஜுனன் கூழாங்கல்லை வீசுமிடத்தில் தேவதேவனின் இக்கவிதை சட்டென்று திறந்து கொண்டது மற்றொரு பேரனுபவம்!!

இக் கூழாங்கற்கள் உண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன் முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
ஐயோ… இதைப் போய்…’ என ஏளனம் செய்து

ஏமாற்றத்துள் என்னைச் சரித்துவிட்டாய்1

சொல்லொணாத
அந்த மலை வாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கும்
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அனைத்தையும் கொண்டு படைத்த
ஓர் உன்னத சிருஷ்டி

நிறத்தில் நம் மாம்சத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

ஆம்... காரணம் தேடும் இவ்வுலகில் அதற்கு என்ன வேலை. அது அங்கே மட்டுமே இருத்தல் தகும். எனவே தான் அர்ஜுனன் அதை அங்கேயே வீசுகிறான்!! ஆம், அவனுக்குத் தான் காற்றில் ஆடும் இலைகளின் நடனம் கைவசப்பட்டு விட்டதே!!!


அருணாச்சலம் மகராஜன்