அன்புள்ள ஜெயமோகன்
நீண்ட நாட்களுக்குப்பின் இம்மின்னஞ்சலை
அனுப்புகிறேன்.
கிராதம் தொடர்ந்து படித்து வந்தேன்.
உயிரைப் பணயம் வைத்து அர்ஜுனன் மீட்டுக்கொடுத்த மகனின் அருமையயும், அர்ஜுனனின் பால் அந்த்ணன் கொண்ட நன்றியையும் நீர்த்துப்போகச்செய்துவிட்டதே பிறகு தொடர்ந்த தேவைகளும் ஆசையும். அர்ஜுனனின் சொல்லையும் மீறி அவன் பெயரை துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, மனித மனத்தின் இயல்பு காலம் காலமாக இப்படித்தான் இருந்து வருகிறது எனத் தெளிவாக்குகிறது.
கண்ணனின் வெவ்வேறு உருவகங்களை எவ்வித வெளிப்பூச்சுகள் இல்லாமல் கண்டது வெண் முரசில்தான்.அது இனிமையானது என்பதாலோ, பெரும்பலான படைப்புகளும், ஊடகங்களும் ஜில்லென்ற அழகான கண்ணனை மட்டுமே நம் முன்னிறுத்தியுள்ளன.
கந்தர்வன் பொருட்டு நடந்த கிருஷ்ண அர்ஜுன யுத்தத்தில் திரையில் பொதுவாக கண்டது வேறு. பாணங்களின் யுத்தம். இறுதியில் அர்ஜுனன் பாசுபத அஸ்திரமும், கிருஷ்ணன் சக்கரமும் கையில் எடுக்க, சிவபெருமான் தோன்றி தடுத்தாட்கொண்டதாக வந்த சித்தரிப்பு. இதில் எனக்கு தோன்றிய கேள்வி இது. மகாபாரதத்தின் வெவ்வேறு படைப்புகளில் காலக்கிரம குழப்பங்கள் உண்டா. உதாரணமாக, கிருஷ்ணார்ஜுன யுத்தத்திற்கு முன் பாசுபதம் பெறப்பட்டதா, அல்லது பின்பா. எது சரி
இந்த எதிர்மறை உருவக நிலையினை விட்டு கண்ணன் மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் சம்பவங்கள் அடுத்த அத்தியாயங்களில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள
ரமேஷ்
மூலமகாபாரதத்தில்
கிருஷ்ணார்ஜுன யுத்தம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. அது தென்னகப்பிரதிகளில் மட்டும்
உள்ளது. அதற்கும் கொஞ்சம் முன்பு சேர்க்கப்பட்டது கிராதனாக சிவனைச் சந்திக்கும் காட்சி.
இவை தனித்தனியாக மூலக்கதையுடன் ஒட்டாமல்தான் உள்ளன. அர்ஜுனன் பாசுபதம் பெற்றதை போரில்
காணமுடியாது
ஜெ