இன்று வெண்முரசில் ஒரு வரி மிக நுன்மையான காமம் சார்ந்த பென் உளவியல் கூறு ஒன்றை சொல்லியிருக்கிறது. ஆண் எதிர்படும் பெண்ணை எப்போதும் பார்க்கிறான். முதல் பார்வையில் அவள் உரு முழுதையும் அவன் பார்வை அலசி ஒரு சித்திரத்தை மனதில் எண்ணமாக சொல்லாக வரைந்துகொள்கிறது. அது வரம்பு மீறி போவதை அடுத்த நொடி உணர்ந்து அதை தேவையான அளவுக்கு கட்டுபடுத்திக்கொள்கிறான். உறவு முறை, தகுதி, சமூக விதி, அறம் எல்லாம் அதற்கப்புரம்தான். பின்னர் அவன் மனம் அவளை காதல் அல்லது காம நோக்கில் அணுகலாம் என முடிவு செய்தபிறகு அவன் தன் பேச்சு செயல் போன்றவற்றால் அவளை ஈர்க்கப்பார்க்கிறான். அந்த முதல் நொடிப்பொழுதில் இப்படி கட்டின்றி காணும் தன் பார்வையை ஒரு ஆணால் தவிர்க்கவே முடிவதில்லை. அது ஆண் எனப் பிறப்பவனின் அடிப்படைப்பண்பு. ஒரு பெண்ணை பார்க்கையிலே அவன் மகிழ்ச்சி கொள்கிறான். பெண்களை பார்ப்பதற்காகவே அவன் பல இடங்களுக்கு செல்கிறான். நேராகவும் மறைமுகமாகவும் பார்ப்பதில் ஆர்வம் கொள்கிறான். ஆணின் காமம் காதல் அவன் பெண்னைப் பார்க்கையிலேயே தொடங்குகிறது. பின்னர் பலவித செய்கைகள் புகழ் மொழிகள் சீண்டல்கள் மூலம் அவளை ஈர்க்க நினைக்கிறான். ஆம் தன் தோகையை விரித்து ஆடுகிறான். பல பெண்களை தன் வாழ்வில் கண்ட அர்ச்சுனன் பார்வதி என்ற அந்தப் பெண்ணிடம் ஒரு முதிரா இளைஞனைப்போல் நடந்துகொள்கிறான். தன் திறனை அவளுக்கு காட்டுகிறான். அதை அந்த பீதர் தலைவர் மிக எளிதாக புரிந்துகொள்கிறார்.
அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன்றி வேறல்ல அது.”
ஒரு பெண் சாலையில் எதிர்வரும் ஆணை இப்படி பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அப்பார்வை அடையாளம் காணுதல் பொருட்டெனவே இருக்கும். ஆனால் அவன் தன்னைப் பார்க்கிறான் என்பது அவளை சலனப்படுத்தும். ஆண் பார்ப்பதில் காணும் இன்பத்தை பெண் பார்க்கப்படுகையில் அடைகிறாள். பார்க்கப்படுபவளாக தான் இருக்கவேண்டும் என்பதற்காக அவள் நேரம் பொருள் போன்றவற்றை செலவு செய்கிறாள். தன்னை கவருவதற்காக அவன் புலியைக்கொன்று அதன் பற்களை எடுத்துவருதலை, சீறி வரும் காளையை எதிர் நின்று அடக்குதலை, தன்பொருட்டு மற்றவர்களுடன் பகைகொண்டு போர்புரிதலை அவள் உள்ளூர ரசிக்கிறாள். இப்படியெல்லாம் செய்யப்படுதலில் ஈர்க்கப்பட்டபின்தான் அவள் காதல், காமம் தோன்றி வளர ஆரம்பிக்கிறது, அவள் உறுதிகொண்டபின்தான் தன் காதலனை ஒரு ஆண் உடல் கொண்டவனாக காண்கிறாள். அதனால்தான் ஒரு ஆணைப்போல ஒரு பெண்ணுக்கு ஆணின் உடலழகு முதன்மையானது அல்ல. அவன் உடலை அவள் கவனிப்பது ரசிப்பது காமுறுவது அவளுக்கு இறுதியாக நடக்கிறது. அப்படி அவள் நோக்கத்துவங்குவது அவள் காதலில் காமமடைவதில் மனம் கனிந்துவிட்டாள் என்பதைக் காட்டுகிறது. ஒரு ஆண் பெண்னை காண்கையில் ஒரு குற்ற மனப்பான்மையோடு காண்கிறான். ஏனென்றால் அவன் காதல் அப்போது உறுதிபெறவில்லை. ஆனால் ஒரு பெண் ஆணைப்பார்க்கையில் எவ்வித தயக்கமும் அவளுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் \
ஒரு பெண் எதன்பொருட்டு ஆணின் உடலை நோக்கினாலும் அது ஒன்றின்பொருட்டென்றே ஆகும்.
அந்த ஒன்றில் அவள் மனம் உறுதிகொண்டுவிட்டது. இப்படி ஒற்றைவரியினில் ஒரு உளவியல் நுட்பத்தை சொல்லிச் செல்கிறது வெண்முரசு
தண்டபாணி துரைவேல்