பாசுபதம் என்பதை கிராதம் “பிநாகம் பொன்னிறமான
பெருநாகம். அது வடதிசையிலிருந்து தென்திசைவரை நிறைத்திருக்கும் முடிவிலா வளைவையே
உடலெனக்கொண்டது. அதற்கு ஏழு தலைகள். செந்நிறமான ஆணவம், அனல்நிறமான சினம், பொன்னிறமான விழைவு, பசும்நிறமான அறிவு, நீலநிறமான மொழி, கருநீலநிறமான ஊழ்கம்
கருநீலச்செம்மைகொண்ட தன்னிலை என அதை வகுக்கின்றன நூல்கள். பாசுபதம் அதன் அம்பு.
அது நீலநா பறக்கும் தழல்வடிவமான சிறுநாகம். நிழலற்றது அது.” எனக் குறிப்பிடுகிறது.
பொதுவாக பாசுபதம் என்பதை ஒரு அஸ்திரமாகவே, அம்பாகவே ஒரு இந்திய மனம்
கருதும். அதை ஒரு தத்துவமாக விரித்தெடுப்பதே கிராதத்தின் வழி. இருப்பினும்
வெண்முரசின் மற்றொரு முக்கிய நோக்கம் படிமங்களின் மீளுருவாக்கம். எனவே பாசுபதம்
என்பதை ஓர் அம்பாக ஏன் கருத வேண்டும், அந்த படிமத்தின் பொருள் என்னவாக இருக்கக்கூடும்,
அது அம்பு என்றால் அதை எய்த வில் எது, எய்தவர் யார் என்ற விவாதத்தையும் கிராதம்
கூடவே செய்கிறது. அதன்
பதிலே மேற்கண்ட பத்தி.
பைநாகம் அல்லது பிநாகம் என்று அழைக்கப்படும் பொன்னிறப்பாம்பே அதை எய்த
வில். அதற்கு ஏழு தலைகள் எனச் சொல்கிறது கிராதம். வெறுமனே தலைகளை விவரிக்காமல்
கூடவே அதன் நிறங்களையும் சேர்த்துத் தருகிறது. அவை வானவில் வண்ணங்கள். அதன் வைப்பு
முறையும், ஒவ்வொன்றிற்கும் அளிக்கப்பட்டுள்ள நிறங்களும் மிக முக்கியமானவை. முதலில்
வருவது ஆணவம். இறுதியாக வருவது தன்னிலை. சைவ சித்தாந்தத்தின் படி ஒரு கரு
உருவாகும் முன்பே, அது பார்த்திவ பரமாணுவாக இருக்கும் காலத்திலேயே அதில் ஆணவமாக
அதன் தன்னுணர்வு உருவாகிவிடுகிறது. ஆணவம் தனக்கு வேண்டியவற்றைக் கேட்க சினமாக மாறி, பின் அனைத்தையும் கொள்ள
விரும்பும் விழைவாக பரிணமித்து அறிவாக வளர்ந்து, மொழி என்னும் ஊர்தியில்
வாழத்துவங்கி, ஊழ்கத்தைக் கண்டுகொண்டு, தன்னிலையை உணர்கிறது. ஆம், பார்த்திவ
பரமாணு கருவாகி, உருவாகி, உணர்வாகி, பூமிக்கு வந்து அறிந்து, அறிவித்து,
தியானித்து, தன்னை முழுமையாக அறிந்தமைந்து உருவழிந்து முடியும் ஓர் உயிரின் படிநிலைகளே
அந்த நாகத்தின் ஏழு தலைகளாக அமைந்துள்ளன.
இந்த வானவில் நாகம் எது? அதை வில்லாக வளைத்து அம்பெய்பவர் எவர்?
இதற்கு நாம் மகாகாலரின் கதையை நோக்க வேண்டும். காலபீதியாக கருவுக்குள் இருக்கும்
அவரும், அவரை அழைத்துப் போகக் காத்திருக்கும் காலமார்க்கனும் தோன்றுவது ஒரே
சமயத்தில். இருவரும் வேறு உலகங்களில் இருந்தாலும் இணைந்தே இருக்கிறார்கள். காலபீதி
ஏன் தான் புவிக்கு வரவேண்டும் என்பதற்கு பதிலாக மாம்டி, “ஏனென்றால் நீ
சிவம். உருக்கொண்டு உருவழிந்து சிவம் ஆடும் நடனமே நீ கொள்ளும் வாழ்க்கை. ஒவ்வொரு
உயிர்த்துளியும் ஒவ்வொரு பருப்பொடியும் அவ்வாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இது
அழியாத தாளமென்றறிக! எழுக காலரூபனாக! காலத்துடன் நின்றாடுக!”, என்கிறான். காலத்தோடு நின்றாடும் வாழ்வை மகிழ்வோடு ஏற்று மண்ணுக்கு
வரும் குழவியின் நிழலாகத் தொடர்கிறான் காலமார்க்கன். அவரை நிறைவு செய்யும் நிழல்.
அவர் வளரும் தோறும் அவரை விட வளரும் ஒரு நிழல். அதையும் கிராதம், “அவர் ஆற்றும்
செயல்களில் விளைவுகுறித்த அச்சமாக இருந்தான். அவர் கற்ற நூல்களில் ஐயமானான். அவர்
கொண்ட உறவுகளில் ஆணவத்தின் இறுதிக் கசப்பானான். அவர் செய்த பூசனைகளில் பழக்கமெனும்
பொருளின்மையானான். அவர் அமைந்த ஊழ்கங்களில் எஞ்சும் தன்னிலையானான்”. அவரின் மறு பாதியாக இருக்கும் அந்த நிழலும் தானே என்பதை அறிய அவர்
ஊழ்கத்தில் எஞ்சும் தன்னிலையையும் துறந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு
அறிந்த அவர் முன் அந்நிழல் முக்கண் முதல்வனாக, நடராஜனாக வந்து நிற்கிறது.
சிவமேயாம் எனச் சொல்லி பிறந்தவர் யாமேநீ எனக் கூறி அமைகிறார். இதையே உருக்கொண்டு உருவழிந்து ஆடும் சிவ நடனம் என்கிறது கிராதம்.
இந்த நிழல் தன்னைப் பற்றிச் சொல்கையில் முக்கண்முதல்வனின் பிநாகமும்,
பாசுபதமும் தன்னை ஆள்வதாகக் குறிப்பிடுகிறது. ஆம், அந்த வானவில் நாகத்தை வில்லாக
வளைத்து பாசுபத அஸ்திரத்தை எய்தது காலமார்க்கனே, ஒவ்வொருவரின் முழுமை செய்யும்
நிழலே. நிழலற்ற அந்த அம்பு சினம் கொண்ட நாகமாக, மொழியைக் கூராகக் கொண்ட நா பறக்க
ஆதியில் வந்தமைந்த ஆணவத்தைத் தைக்கிறது. தன் நிழல் எய்த அம்பில் வீழ்ந்து
குருதியாடி ‘சர்வாங்க ரக்த’மாக நிற்கையிலே முழு மெய்மை கூடுகிறது. அவனே
பொன்னார்மேனியன், மின்னார் செஞ்சடையில் மிளிர் கொன்றை அணிந்தவன். அவ்வாறு
குருதியுடல் சூடி, குருதியில் ஊறிய கருக்குழவியாகி மகாகாலர் அறிந்த முழு மெய்மையே
பாசுபதம் எனப்படுகிறது. தன் வாலைத் தான் கவ்விய நாகம்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்