Monday, January 16, 2017

மூன்றுவழி மலை






பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் “வேதங்கள் யாரை பிரம்மம் என்று பேசுகிறதோ அவரை தந்திரம் சிவம் என்று பேசுகிறது.  பாகவதம் கிருஷ்ணன் என்று பேசுகிறது.  ஓம் சச்சிதானந்த பிரம்மம் என்கிறது வேதம். ஓம் சச்சிதானந்த சிவம். சிவன் மட்டுமே. சிவன் மட்டுமே என்கிறது தந்திரம். ஓம் சச்சிதானந்த கிருஷ்ணன் என்கிறது பாகவதம். வேதம் தந்திரம் பாகவதம் மூன்றும் அந்த ஒரே சச்சிதானந்தத்தைப்பற்றியே பேசுகிறதுஎன்கிறார். 


கிராதம் வேதம் தந்திரம் பாகவதம் வழியாக பரபிரம்மத்தை அருவாய் உருவாய் அருவுருவாய் காட்டி உணரவைக்கிறது. கிராதத்தில் வரும் சண்டன் என்னும் இசை சூதன் தனது  கலையின் வழியாக பாகவதனாய் நிற்கிறான். தனது சொல்லின் வழியாக வேதாந்தியாக நிற்கிறான். தனது வாழ்வின் வழியாக தந்திரவாதியாக நிற்கிறான். அதனால் அவன் உடன் வந்து சேரும் வைசம்பாயணன், சுமந்து பைலன் ஜைமினி மற்றும் உக்கிரன் ஆகிய அனைவருக்கும் அவன் தனக்குள் உள்ள ஒரு கதவை திறந்துவிட்டு தனக்குள் நுழைந்துக்கொள்ள கண்டடைய அதைப்பற்றி உயர்ந்துக்கொள்ள வழியாக நிற்கின்றான்.


சண்டன் தனது கதைகளின் வழியாக பிரம்மத்தை உடல்கொண்ட சக்தியாக  எழசெய்கின்றான். தனது சொல்லின் வழியாக உருவத்தை அழித்து பூமியை கலைத்து அனைத்தையும் அருவமாக்கி பிரபஞ்சதை பிரமமாக்கிவிடுகின்றான். தனது வாழ்வின் நெறியாக பயணத்தின் இறுதி லட்சியமாக தந்திரத்தில் சென்று காளஹஸ்தியில் கலக்கிறான்.


வேதம் தந்திரம் பாகவதம் மூன்றும் மூன்றுவழியாக இருந்தாலும் மூன்றும் பெறக்கூடிய இறுதி பெரும்நிதி ஒன்றே.


கிராதம் நாவலில் கைலைக்கு காளனுடனும் காளியுடனும் செல்லும் அர்ஜுனன் அங்கு மூன்று சிவவடிவினரைக்காண்கின்றான். சடையர் பேயர் எரியர். சிவனைத்தேடி சிவவடிவினர்ஆகியவர்கள் இவர்கள். இவர்களும் சிவனும் ஒன்று அல்ல ஆனால் இவர்களும் சிவனார்கள்தான் என்று காட்டும்போது கிராதம் அர்த்தப்படுகிறது.


சடையர் பேயர் எரியர் ஆகிய மூவரும் தவம் துறவு வேதம் என்ற மூன்று வழிகளை பயன்படுத்தி தங்கள் இறுதி பெரும்பயனாகிய சிவத்தை அடைந்து சிவனானவர்கள்.


சடையர் தனது தவத்தின் வழியாக சிந்தையை சிவத்தின்பால் வைத்து சிந்தை தெளியத்தெளிய சிந்தையுள்ளே சிவத்தை கண்டுக்கொண்டவர். சிவமானவர். சடைவளர்ப்பார் நீறுபூசுவார் முப்புரி சூலம் ஏந்துவார் பீடாதிபதிகாக குருவாக இருப்பார். சிந்தையை சிவன்பால்வைத்து சித்தியடைவார்.


பேயர் உடல்பேணமாட்டார் உயர்வு தாழ்வு பார்க்கமாட்டார் நன்று தீது அறியமாட்டார் ஆக்கம் கேடு உணரமாட்டார் இருமை கடப்பார், வாக்கும் மனமும் கடப்பார். சிவத்தையே பிடித்து சிவமாகி நிற்பார்.


எரியன். சித்தம் வாக்கு மனம் காயம் அது அது அதுஅதுவாக இருக்க வேதம் காட்டும் வழியில் வேள்விகள் செய்து சிவனே என்று இருப்பார். இவர்கள் தவம் செய்வது இல்லை. துறவு மேற்கொள்வது இல்லை. தவமும் துறவும் இருந்தாலும் அவர்கள் வேள்வி செய்வதையே முதலாக கொள்வார்கள். சடையர்போலவோ பேயர்போலவோ இவர்கள் இல்லறம் நீங்குவதில்லை. வேதத்தை கற்பதும் கற்பிப்பதும் கடமையாக கொண்டவர்கள். வேள்விகள் மூலமாகவே இருளை களைந்த ஒளியாகுபவர்கள்.

கற்றாங்கு எரியொம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. –திருஞானசம்பந்தர் தேவாரம். கோயில்.

சடையர் பேயர் எரியர் மூவரும் மூவராக இருந்தாலும் ஒருவரே. ஒருவர்போல இருந்தாலும் மூவரும் வந்த வழி மூன்று.மூன்றுவழியாக வந்தாலும் அவர்கள் மூவரும் அடைந்த நிலை ஒன்று. எரியர் கர்மமார்க்கத்திலும் சடையர் சரியைமார்க்கத்திலும் பேயர் ஞானமார்க்கத்திலும் சிவத்தை அடைந்து சிவனாகுகின்றார்கள்.

சடையர் பேயர் எரியர் இந்த மூவரையும் அர்ஜுனன் சந்திக்கும்போது அவன் அந்த மூன்று வழியிலும் பயணித்து இருப்பதை கிராதம் அழகாக காட்டுகின்றது. எளிதாக சொல்லிச்சென்றாலும் ஜெயமோகன் அதற்குள் உள்ள அர்த்தத்தை பொதிந்து வைத்திருக்கும் நுட்பதை நோக்கும்போது கதை எல்லை இன்றி விரிகின்றது.

//அர்ஜுனன் அவர்களின் காலடியில் அமர்ந்துகொண்டான். “என் பெயர் சடையன்என்று முதல் முதியவர் சொன்னார். “நெடுந்தொலைவு வந்துள்ளாய். நீடுதவம்செய்து உடலுருகியிருக்கிறாய்…” இன்னொருவர்என் பெயர் பேயன்என்றார். “நீ உகந்த வழிகளினூடாகவே இங்கு வந்துள்ளாய் என உன் விழிநோக்கி அறிகிறேன்என்றார். அர்ஜுனன் அவரை வணங்கிஅவ்வாறன்றி இங்கு வர இயலாதென்று அறிவேன், எந்தையேஎன்றான். அவர் நகைத்துஆம்என்றார். மூன்றாமவர்என்னை எரியன் என அழைக்கிறார்கள். உன்னைக் கண்டதும் நான் மகிழ்ந்தேன், மைந்தாஎன்றார். “அது எந்தையரிடமிருந்து நான் பெற்ற நல்லூழ்என்றான் அர்ஜுனன்.//

அர்ஜுனன் முன்னோர்கள் செய்த வேள்வியாலும் அவது ஞானத்தாலும்  தவத்தாலும் இந்த கைலையை அடைந்தான் என்பதை அழகாக புரியவைக்கிறது. வேர்களும் கிளைகளும் திசைகளை நோக்கி பிரிந்தாலும் பூக்களும் கனிகளும் திசைகளை கடந்த திசைகளின் மையத்தில் எப்போதும் இருக்கிறது.  

ராமராஜன் மாணிக்கவேல்