அன்புநிறை ஜெ,
மற்றுமொரு வருடம் முன்னகர்கிறது வெண்முரசு அனைவரையும் முன்னகர்த்திக்கொண்டு - வாழ்த்துகள். வாழ்த்துங்கள்.
வெண்முரசில் தமது அதிதீவிரமான விழைவினாலோ தவிப்பினாலோ உருவேறும் உருமாறும் மாந்தரின் சித்தரிப்பு சிலிர்ப்பானவை.
பிறப்பால்
வரும் பல குணங்களும், வாழ்க்கை அனுபவத்தால் செதுக்கப்படும்
உளித்தீற்றல்களும் தன்னுரு மாறி வேற்றுரு கொள்ளும் கணங்கள் மானுடனுக்கு
எப்போதும் வலி மிக்கவை. அதனினும் தீவிரமானவை ஆண்மையும் பெண்மையும்
தன்னியல்பு திரிந்து உருமாறும் தருணங்கள் - வரமென்று வேட்பினும் சாபமென்று
நேரிடினும் அந்த கணங்களின் கொந்தளிப்பு எரிமலைவாய்தான்!!
ஸ்தூனகர்ணன்
//காலகம்
என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டை. அங்கே வந்துசேர
ஓடைகள் வழியாக மட்டுமே வழியிருந்தது.// நீர் தன்னியல்பால் திசை தேர்ந்து
ஓடுபவையே ஓடைகள். தனக்கான பாதைகளையும் தடைகளையும் தானே எதிர்கொண்டு
பெருகும் நீர்வழி ஊர்ந்து செல்பவர் மட்டுமே கண்டுகொள்ள அடர்கானகத்தில்
காத்திருக்கிறான் ஸ்தூனகர்ணன் ஆணென்றும் பெண்ணென்றும்.
பெண்மை
துறக்கும் ஆணையும், பெண்மை துறக்கும் பெண்ணையும் துலாக்கோலின் இரு
தட்டுகளில் நிகர் செய்ய இருவருக்கும் வரமருள்கிறாள் ஸ்தூனகர்னை. அருள்பவள்
அன்னைதானே.
அம்பையெனும் நெருப்பு
பெண்மையின்
உச்சகணமொன்றில், நிரகாரிப்பெனும் ஒருதுளி நெருப்பில் தன் ஆன்மா எரிந்தழிய
அணங்கென அலையும் அம்பை. பெருநெருப்பை நெருப்பே அணைக்க முடியும் எனத் தன்
இறுதிச் சிதையில் தீ இறங்குபவள்.
மகனே
என அழைத்துத் தன் அழல் அனைத்தையும் சிகண்டினிக்கு தரும் அந்த நொடியில்
வராஹியிடம் பாலருந்திய மகள் மகனாகிறாள். அந்தப் பெருநிகழ்வின் களம்
அடியில்பெரும்பாறை தாங்கும் ஏதும் முளைக்காத நிலம் - சிகண்டியைப்போல.
அன்னையை
உணர்ந்த கணம் அகம் ஆணாகிவிட ஸ்தூனகர்ணனிடம் ஆணுடலை மட்டுமே கோருகிறான்.
வைரம் ஒன்றைத் தருகிறான் ஸ்தூனகர்ணன். இருளின் மறுபாதி அல்லவா வைரம்.
பகைமையின் மறுபெயரும் வைரம்தானே. வைரத்தை விழுங்கி சிகண்டி பெண்மையை, காலம்
தன்னுள் பொறித்திருந்த குழந்தைகளை வேரொடு களைகிறான்.
துரியன்
இறப்பால்
தன் அழல் அணையாதென்ற உணர்வாலேயே வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்லும்
துரியன் - தன் ஆன்மா இறந்துவிட்டது என்று உருகி நிற்க, அழல் தீர்க்க
மீண்டும் வருவது ஸ்தூனகர்ணன்.
ஸ்தூனகர்ணன்
காட்டும் தன்னுள் வாழும் சிறுமியை, தன் மீது தீராக் காமத்துடன்
உள்ளுறையும் பெண்ணை , தொப்புள்கொடி பற்றிய சிறு பெண் மகவை சிதைத்துக்
கலைத்து தன் பெண்மையைத் துறக்கிறான் துரியன். தன் மீதான காதலைத்
துறந்தவனின் தனிமை பாழ்நரகு. நட்பெனினும் உறவெனினும அவன் அதன் பிறகு
பகிர்ந்து கொள்ளப் போவது தூய்மையான ஆணவத்தையே. அதுவே அவனது ஆளுமை என்றாகும்
தருணம்.
இனி எனக்குத்
தெய்வங்கள் இல்லை என்பவனையும், பீஷ்மன் யாராக இருந்தால் என்ன என்று
அடிமுடி அறியாமல், அன்னையின் அழல் என்னும் தழல் உணர்ந்து தன்னைத்
துறப்பவளையும், களமொன்றில் எதிர்தரப்புகளில் நிறுத்தும் காலம்.
யுவனாஸ்வன்
தன்
குருதி முளைத்தெழ வேண்டும் என்ற பெருவிழைவால் தெய்வங்களை வேட்டு
தாய்மையை, பெண்மையை ஏற்பவன். யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல்
கனவு காண்கிறான். உள்ளுறையும் அனலில் உடலே எரிந்திட தன் ஊழ்கத்தின் பயனை
பிரம்மனின் வரத்தை அருந்தி கருக்கொள்கிறான் தன்னையே உண்ணக் கொடுக்கும்
மாந்தாதா. தாய்மையை வேண்டி ஏற்றுக் கொள்ளும் ஆணின்கதை.
பங்காஸ்வன்
தேடலும்
விழைவும் எது குறித்திருப்பினும் அதன் விசையளவு வளைந்து கொடுக்கிறது
விசும்பு. காமத்தில் திளைத்து, காமத்தில் மூழ்கி, காமமென்றாகி, பின்னும்
முழுதுணரமுடியாமையின் தவிப்பில் தனை முழுதும் எரித்து இந்திரனிடம் வரம்
பெற்று, வைரம்போல் உடல் கொண்டு மீள்கிறான். மீண்டும் வைரம். காமக்
கடும்புனல் கடந்தேறி பெண்ணென்றாகிறான். விழைந்தது உடலல்ல அதைத் தாண்டிய
பெண்மை என்ற அறிதல்.அதன் பின்னரே உளம் சென்றமைகிறது பெண்ணென.
பெண்ணென்றாகி காமத்தை அறிந்து, தந்தையாய்ப் பெருகியபோதுணர்ந்த ஆணவம் கடந்து, தாயென்றாகிப் பெருகி மீண்டும் அனைத்தையும் துறக்கிறாள்.
திளைத்தும்
துய்த்தும் உருமாறியும் உளம்மாறியும் கொடுத்தும் நடித்தும் பெற்றும்
பெருகியும் துறந்தும் இழந்தும் உருகியும் கடந்தமைகிறான்
பங்காஸ்வன்.பாறையின் சிறுநினைவென தொடங்கிய பயணம், காலம் உருட்டி விளையாட,
நதியைத் தழுவிக் கரைந்து, தன் கூர்முனைகளைத் துறந்து கரையேறும் கூழாங்கல்
போல.
விஜயை
உணர்வுநிலைகளின்
உச்சத்தில் மீண்டும் ஒரு நிராகரிப்பு. ஊர்வசி தனைக் கொடுக்க வந்தவளல்ல -
விஜயனை திசை மாற்ற எய்யப்பட்ட அம்பு. எனினும் பெண்ணென எழுந்து நிற்பவளை
அவனது விலகல் சீண்டுகிறது. சினந்தெழுவது ஊர்வசியின் பெண்மை -
சபித்துவிட்டுப் போகிறாள் - தீச்சொல்லை வரமென்றே ஏற்கிறான் விஜயன். பெண் என
அமைந்ததும் துணிவை அடைவதாகக் கூறுகிறாள். தாட்சாயணி முதல் அனைவரும்
கொள்ளும் பெருந்துணிவு - தந்தையரிடம் தனது உளத்திண்மை சொல்வதற்கு. தாயென்று
கனிந்தருளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் வெற்றியை அருள்பவர்கள் தந்தையரே.
வென்று வென்று மேற்செல்லும் தேவேந்திரன் ஆயினும் மகள் மேல் சினந்திடத்,
தீச்சொல்லிட தந்தையால் இயலுமோ.விஜயை தன்னை ராதையோடு நிகர் வைக்கிறாள்.
தன்னை இளைய யாதவனுக்கு முழுதளிக்க விழைகிறாள்.
எது பெண்மை
வெண்முரசில்
இதுவரை வஞ்சம் பொருட்டு பெண்மையைத் துறக்கும் பெண்ணும், ஆணும், வரமெனப்
பெற்று பெண்மையை ஏற்றவரும், தீச்சொல்லெனப் பெற்று பெண்மையை விரும்பி
ஏற்றவனுமாய் எத்தனை சித்திரங்கள்.
அனைத்திலும்
ஊடாடும் நுண்சரடென, பெண்மையென சொல்லப்படுவது எது. அம்பையின் சிதையில்
எரிவதும், சிகண்டினி துறப்பதும், யுவனாஸ்வன் பொங்கிப் பெருகி அளிப்பதும்,
பங்காஸ்வன் கடப்பதும், விஜயை வரமென ஏற்று முழுதென உணர்ந்ததும் எதை? - உடல்
அல்ல; ஆன்மாவில் ஆண்பெண் பேதமில்லை - எனவே அதுவமல்ல; முக்குணங்கள்
இருபாலுக்கும் உண்டு - அதுவுமல்ல; மனமா? மனம் எனில் அனுபவங்களின் தொகுப்பா?
ஆணென உணர்வதும் பெண்ணென உணர்வதும் வேறுபடுவதும் அனுபவங்களை உய்த்துணரும்
இயல்பிலா. பெண்ணென உணர்ந்த பிரேமையை ஆணென குறைவின்றி உணரமுடியாது என்பதும்,
தனிமையிலும் தவிப்பிலும் தன்னளவிலே நிறைவு செய்து கொள்ளக்கூடியதுமாகப்
பெண்மையை ஆக்குவது எது.
உடல் அல்ல; தாய்மை, கன்னிமை, அமுது, நஞ்சு, நாணம், காமம் என வரும் பெண்மையென உணரப்படுவது தன்னை முழுதளிக்கும் தன்மையையா.
தனது
குலத்தையே தன் பெருந்தோளில் சுமப்பவனிடம் உன் தனிமை அறிவேன் என்று தன்னையே
முழுதளிக்க முன் வரும் அம்பையின் பெண்மை. யாரென்று அறியாமலே தன்
பிறவியையும் பின்வரும் அனைத்துக் கண்ணிகளையும் அன்னைக்கு அர்ப்பணிக்கும்
சிகண்டினியின் பெண்மை.
தன்னை
முழுமையாய் விரும்பும் பெண் உள்ளே இருக்கும்வரை அவள் தன்
ஆடிப்பிம்பத்தையும் கொல்ல முடியாத அளிகொண்டவள் என்றுதானே உள்ளுறையும்
பெண்மையைத் துறக்கிறான் துரியன். தன்னுடல் முளைக்க வேண்டுமென்ற விழைவில்
தொடங்கும் ஆண்
தன்னுடலில் பால்சுரந்து தன்னையே
உண்ணத்தரும் தாயாகும் மாந்தாதா. எவரையும் கடந்து கடந்து மேற்செல்லும்
விஜயன், தன் சுயம் அழித்து முழுமையும் நீலனின் காதலில் சமர்ப்பணம் செய்யும்
ராதையென்றே தன்னை உணர்வது விஜயையாகவே.
அளித்து அளித்து அந்த அளியின் நிறைவால் அனைத்தையும் அடைகிறதா பெண்மை?
ஆனால்
மையத்திலுள்ள பெண்களிலேயே தேவயானி, சத்யவதி, பிருதை, பாஞ்சாலி எனத் தங்கள்
பெருவிழைவால் விதி சமைத்துச் செல்லும் பெண்களின் பெருநிரையையும்
காண்கிறோம்.
அடைவதன் விழைவாலேயே அளிக்க முற்படுகிறதா பெண்மை?
அடைவதன் விழைவனுத்துமே யாருக்கோ அளிப்பதற்காகவா?
இருளின்
துளியென எஞ்சிய கரியின் ஆழ்கனவொன்றில் இருக்கிறது ஒளி. அளவிட முடியாத
ஆழங்கள் அளிக்கும் அழுத்தமும் வெப்பமும் இருளை உருக்க, தன்னுள்ளிருக்கும்
ஒவ்வொரு துளி இருளையும் மிச்சமின்றி கிழித்தெடுத்து, எச்சமற்று உருமாறி,
எஞ்சியதை மானுடனுக்காய் வீசி எறியும் வைரங்களென. இருளின் துளியிலிருந்து
பிறந்து வருகிறது ஒளி.
ஒளியின்
தரிசனமெத் துலங்கும் வைரம், ஒளியைக் கண்டதும் தன் ஒவ்வொரு
முனையிலிருந்தும் முற்றிலும் வீசி எறியும். ஒளியின் அதீதத்தில் எரிந்து
போகும் வைரம் கரியெனவே எஞ்சும்.
இருளாய், ஒளியாய், அளிப்பதும் அடைவதுமாய் தன்னை முழுமைப் படுத்திக் கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறதோ பெண்மை. அல்லது பெண்மை பெற்ற மானுடம் அனைத்தும் அவ்வழிதானா?
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள சுபா
உண்மையில் வெண்முரசில் என்ன
வருகிறதென்று இப்போது என்னால் சொல்லமுடியாது. அந்தந்த அத்தியாயங்களில்
முழுமையாக ஈடுபடுவதே என் வழியாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக எழுதி எழுதிக்
கண்டுபிடிக்கவேண்டியதுதான். வாசகர்கள் உடன் வந்து கண்டுகொள்கிறார்கள்