அன்புள்ள ஜெ
வெண்முரசு இறுதிநாவலை
படித்துக்கொண்டிருக்கிறேன். நான் நினைப்பதுண்டு இந்நாவல் தொடரின் இறுதிப்பகுதி எதுவாக
இருக்கும் என்று. அதாவது நாவல் உச்சம் அடையும் இடம் எது என்று. அது மாறிக்கொண்டே இருந்தது.
முதல் நீர்க்கடன் முடிந்து திருதராஷ்டிரர் போகும் காட்சி வந்தபோது இதுதான் என்று நினைத்தேன்.
ஆனால் மீண்டும் மீண்டும் அத்தகைய உச்சங்கள் வந்துகொண்டே இருந்தன. துவாரகையின் அழிவு,
இளைய யாதவரின் இறப்பு எல்லாமே உச்சங்கள்தான்.
இப்போது தோன்றுகிறது.
இந்த மாபெரும் நாடகத்தின் முடிவே குந்தி வந்து கங்கைக்கரையில் அமர்ந்து மைந்தர்களை
ஒரு பொருட்டாகவே நினைக்காமலிருப்பதுதான் உச்சம் என்று. ஒவ்வொருவரும் யாருக்கு யாரோ
என்று ஆகிவிட்டார்கள். எந்த உறவும் இல்லை. உறவுகளுக்காகவே இத்தனைபெரிய போர் நடந்தது.
இன்றைக்கு அந்தப்போரினால் எந்த பயனும் இல்லை. போருக்கு ஆதாரமான உணர்ச்சிகளும் மறைந்துவிட்டன.
ஒன்றுமே மிச்சமில்லை. அந்த அத்தியாயத்தின் வெறுமையில்தான் வெண்முரசின் தரிசனம் நிறைவுபெறுகிறது
பாஸ்கர்