Wednesday, August 5, 2020

மானசாஇனிய ஜெயம்

இன்று  அதிகாலை கனவில் அஜிதனுடன் ஹரித்வார் மானஸாதேவி கோவில் குன்றின் படிக்கட்டில் அமர்ந்து கங்கையைப் பார்த்தபடி ஏதோ கதைபேசிக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலானோர்  கருப்பு வெள்ளயில்தான் கனவு காண்பதாக மூளைநரம்பியல் சொல்கிறது. நான் வண்ணங்களன்றி கனவு கண்டதே இல்லை. இந்தக் கனவில் கங்கை ஹமாம் சோப்பு பச்சையில் நுரை ததும்ப பாய்ந்துகொண்டிருந்தது.

எழுந்து பறக்கும் எண்ணங்கள். கோவிலில் கண்ட மூன்றுமுகமும், ஐந்து ஜோடி கரங்களும், நாக படம் சூடிய சிரசும் கொண்ட மானஸாதேவி அன்னை. கோவில் வாசலில் அமர்ந்து வாசிக்க நேர்ந்த அவளது பன்மைத்துவ தொன்மக்கதைகள். ஒடிசா அருங்காட்சியகத்தில் கண்ட ஆஸ்திகனை மடியில் இருத்திய மான்ஸாதேவி படிமைகள். 

தேடி எடுத்து மீண்டும் முதற்கனலில் ஓவியர் சண்முகவேல் வரைந்த மானஸாதேவியை கண்டேன். காமிக்சில் துவங்கிய எனது பால்யம் தொட்டு பல கதைகள் அதன் சித்திரத்துடன் இணைந்தே என்னுள் பதிந்து கிடக்கின்றன. ஓவியம் மீதான கவனம் குறிப்பாக அன்றி, தன்னுணர்வு இன்றியே உள்ளே பதிய காரணம், என் தாத்தா சில்பியின் ஓவியங்கள், கோபுலுவின் ஓவியங்கள் சேகரித்து வைத்திருந்தார் என்பது. 

எங்கள் வீட்டின் மைய ஹாலில் மூன்றுஅடி அகலம், இரண்டரை அடி உயரத்தில் கோபுலு வரைந்த பெருவுடையார் கோவில் எழுவதை பார்வையிடும் ராஜராஜனின் குடும்பத்தின் தோற்றம் மற்றும் கல்லணையை பார்வையிடும் கரிகாலனின் காட்சிகள் கொண்ட ஓவியங்களை ஆப்டோன் அச்சில் ,வண்ணத்தில் கொம்புச் சட்டகமிட்டு மாட்டி வைத்திருந்தார் தாத்தா. சிறு வயதில் எனக்கு கிடைத்த பாரதி சரிதை கோபுலு வரைந்த ஓவியங்களால் ஆனது இப்போதும் என் சேகரிப்பில் உண்டு.

ஷெல்லியின் ஒஸிமாண்டியாஸ் கவிதைக்கான தலை உடைந்த சிலையின் ஓவியம், அற்புத உலகில் ஆலிஸுக்கான சிரிக்கும் பூனை ஓவியம், ராதுக்கா பதிப்பக நூல்களின் ஓவியங்கள், புத்துயிர்ப்பு நாவலின் ஓவியங்கள், பொன்னியின் செல்வன் நாவலில் மணியம் ஓவியங்கள், ஆனந்த் பய்- இன் அமர் சித்ர கதை வரிசைக்கான ஓவியங்கள் என நினைவில் கதைகளுடன் பொதிந்து கிடக்கும் ஓவியங்கள் பல, 95க்கு பிறகு கேபிள் டீவியும், 2000க்கு பிறகு எண்மத் தோற்றநிலை மெய்மை தொழில்நுட்பமும் கூடி, எழுத்து அதை மையம் கொண்ட ஓவியம் இது இரண்டையும் அழித்தது. பிரபஞ்சனின் வானம் வசப்படும் போன்ற வரலாற்று தொடர்களில் மணியம் செல்வம் செல்வம் அவர்களின் ஓவிய வரிசை போன்ற ஒன்று இனி சென்று மறைந்த காலம் ஒன்றின் இனிய நினைவு மட்டுமே. இந்த பின்புலத்தில்தான் வெண்முரசுக்கு பெங்களூர் மணிகண்டன் நெறியாள்கையில் ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவிய வரிசை முக்கியத்துவம் பெறுகிறது.வெண்முரசு ஓவியங்களில் கதையில்  உள்ள சித்தரிப்பு ஒன்றை ஓவியமாக வரைந்து காட்டவில்லை  ஓவியர். மாறாக கதையில் அந்த ஓவியம் எந்த தருணத்தை மையம் கொள்கிறதோ, அந்த தருணத்தை மறுஉருவாக்கம் செய்து அளிக்கிறார். இங்கேதான் ஓவியம் என்ற தனித்த கலையை கையாளும் ஓவியன் எனும் ஆளுமை தொழில்படுகிறார்.

இந்த முதல் ஓவியமே அதற்கு சிறந்த உதாரணம்தான். முதல் பார்வையில் மொத்த ஓவியமே ஒரு ஆழ்மனக் கனவினை தூரிகையால் தொட்டெடுத்த உணர்வை தருகிறது. ஆஸ்திகன் காண்பது என்ன? அன்னை சொல்லும் மாநாக இரவின் பிரபஞ்ச சிருஷ்டியின் கதைதானே. அந்த மாநகத்தின் இரு விழிகளும் சந்திரரும் சூரியருமாக, ஒளிர்கிறது மிளிரும் நட்சத்திரங்கள் சிதறிய வெளி.

மைய வண்ணமாக வசீகரிக்கும் கரும் பச்சை. அந்தி எனும் பொழுதை அதன் நிறபேதப் பின்னணியில் ஒரு அமானுஷ்ய தருணத்தை சித்தரிக்க சரியான வண்ணத்தேர்வு. ஓவியத்தின் நோக்குநிலை (point of view) மிக முக்கியம். பார்வையாளரை எங்கே நிறுத்துவது என்பதை தீர்மானிக்கும் கோணம் அது. நாம். குடிலின் வாசலில் நிற்கிறோம். நம் இரு புறமும் அகல் விளக்குகள் எரிகின்றன. நமக்கு முன்னால் வாசலில் வெளியே நோக்கி மானஸாதேவியும் ஆஸ்திகனும் அமர்ந்திருக்கிறார்கள். விளக்குகள் ஒளியில் அன்னையின், மைந்தனின் உடல்மொழி துலங்கி வருகிறது. 

நவீன ஓவியம் செய்யும் மறு உருவாக்கம் அல்லது தலைகீழாக்கம் இங்கே நிகழ்கிறது, நமது இந்தியச் சிற்ப ஓவிய மரபில் வித விதமான மானஸாதேவிச் சித்திரங்கள் உண்டு. நான் கண்ட சிற்பம் ஒன்றில் மானஸாதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் ஆஸ்திகன் குழந்தைக்கு மீசைதாடி உண்டு. இப்படி பல்வேறு வடிவங்களில் உள்ள மனசாதேவி வடிவங்களில் இந்த ஓவியம் தனித்துவம் கொண்ட ஒன்று. மானஸாதேவி ஆஸ்திகன் இருவரையும் பின்பக்கம் இருந்து (அதே சமயம் அதே வீரியம் கொண்ட தொன்ம ஆழத்துடன்) சித்தரித்த ஒரே ஓவியம் இது. நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அநேகமாக வெண்முரசின் ஒவ்வொரு ஓவியத்தையும் இனிமேல்தான் நிதானமாக ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறேன் என நினைக்கிறன். இன்றைய நாள் மானஸாதேவி நினைவுக்கு அதைத் தொட்டு எழுப்பிய ஷண்முகவேல் அவர்களின் இந்த ஓவியத்துக்கு.

கடலூர் சீனு