Monday, November 14, 2016

விழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)


  வெண்முரசில் வரும் பல தத்துவக் கருத்துக்களை  கதையறியும் சுவாரஸ்யத்தில் போதுமான சிந்தனையை  அளிக்காமல் கடந்து போய்விடுகிறேன் என்ற குறை என்மேலே  எனக்கு உண்டு.   அவை ஒவ்வொன்றும் தியானித்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டியவை. ஆகவே கதைக்காக ஒருமுறை படித்துவிட்டு சில நாட்கள் இடைவெளியில் கவனமான மீள்வாசிப்பு செய்வது  எனக்கு மிகவும் பயன்தருவதாக உள்ளது. 
        வெண்முரசின் இந்தப் பகுதியில் வேதத்தை வெறும் விழைவுகளை நிறைவேறுவதற்கான வழிகாட்டிப்புத்தகமாக பயன்படுத்திக்கொள்வதை எதிர்த்து பைலன் நடத்தும் விவாதம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.     வேள்விகள் செய்து விழைவுகளை நிறைவேற்றும் அளவுக்கு வேதத்தை படிப்பதும் பொருள்கொள்வதும் போதுமானது எனக்  கூறும் அவன்  குருவிடம் பைலன் இவ்வாறு விவாதிக்கிறான்.
   
   விழைவுகள் அனலென தொட்டவற்றை எல்லாம் உண்டு பெருகுபவை. மாமன்னர்களுக்குக் கூட அவற்றில் சிறுதுளியேனும் நிறைவுறுவதில்லை. நிறைவுறாத விழைவே துயரம். அத்துயரத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் மானுடர். எங்கும் நான் காண்பது அத்துயர் நின்று ததும்பும் முகங்களை மட்டுமே. அத்துயரை வெல்லாமல் மானுடனுக்கு மீட்பில்லை” என்றான் பைலன்.

  விழைவை நிறைவடையச் செய்தல் என்பது வேள்வித்தீயை நெய்யிட்டு அவிக்கமுயல்வதைப்போன்றது.  ஒரு விழைவு நிறைவடையும்போது நிறைவடையாத மற்றொரு விழைவை நினைவூட்டிச்செல்கிறது.   முகத்தின்எதிரில்  பொருத்தப்பட்டுள்ள விழைவுகள் என்ற கழியில் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கும்  நிறைவு என்ற கிழங்கை பிடித்துண்பதற்காக  ஒரு கழுதையைப்போல காலமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  
 
   துயர் என்பது இதுவரை நிறைவேறாத விழைவு அல்லவா?  ஆக தனக்கு ஏற்படும் விழைவுகள்மூலமாகத்தான் மனிதனுக்கு துயர்கள் ஏற்படுகின்றன. விழைவு நிறைவேறுகையில் தற்காலிகமான இன்பமும் அது நிறைவேறாவேளைகளில் துயருறுதலும் தான் வாழ்க்கையில் நிறைந்து உள்ளது.  இதைப்பற்றி எவ்வித சிந்தனையும் எழாமல் இதில் உழன்றுகொண்டிருக்கும் மனிதர்கள் தம் விழைவுகளை நிறைவேற்ற முயன்றுகொண்டிருப்பது சரியாக இருக்கலாம்.  ஆனால் இதைப்பற்றி ஆய்ந்தறிய முற்படுபவனுக்கு விழைவின் மூலத்தை அறிந்து  அங்கு ஏன் முடிவில்லாமல் விழைவுகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன  என்பதை அறிதல் மட்டுமே நிறைவளிக்கும். அவனுக்கு விழைவினை நிறைவேற்றும் வேள்விகள் போதுமானவையாக இருப்பதில்லை. அது ஒருவகையில் ஏமாற்றுவேலை என உணர்கிறான்.

அறிந்துக் கடக்காமல் துயரை வெல்ல முடியாது, ஆசிரியரே. மானுடம் துயர் சுமந்து கூன்கொண்டிருக்கிறது. அதற்கு மீட்பென வருவது மெய்யறிவாகவே இருக்க முடியும். அனல்மேல் நெய்பெய்து அணைக்கவியலாது” 

     விழைவுகள் எங்கிருந்து எழுகின்றன?  அவை நிறைவேறுகையில் எது இன்பத்தை அனுபவிக்கிறது? சள்ளைப் பிள்ளை  உண்ணும் உணவையெல்லாம் வயிற்றில் இருக்கும் நாடாப்புழு  தான் எடுத்துக்கொண்டு அக்குழந்தைய சத்தின்றி வாட விடுவதைப்போல ஈடேறிய விழைவுகளால் நம்மை நிறைவடையாமல் செய்வது எது? வேதங்களில் செறிந்திருக்கும் தத்துவங்களிலிலிருந்து இதற்கு விடை காண முற்படாமல், அவ்வேதங்களை வெறும் விழைவுகளை நிறைவேற்றும் வழிமுறைகள் என மட்டுமே காண்பது அவ்வேதங்களை சிறுமைபடுத்துவதாக ஆகும் என பைலன் உரைக்கிறான்.. 
     வழிபட்டு இறையெழுப்பி அருள்கொள்ளவேண்டிய தெய்வச்சிலைகளை நீங்கள் வயல்கொல்லையில் காவல்பாவைகளாக நிறுத்திக்கொள்கிறீர்களோ என்று ஐயம் கொள்கிறேன்” என்றான். 
ஆனால் அவனுக்கு பதிலாக கிடைப்பதெல்லாம் கேள்விகேட்காமல்  வேதத்தை வழிபடும் பழமைவாதக் குரல்தான்.  வேதத்தை எவ்வித  ஆய்வுக்கும் உட்படுத்தாம,  அது சொல்வதை அப்படியே சொல் மாறாமல் கேட்டுக்கொள்ளல்  வேண்டும் என பைலனின் குரு கூறுகிறார்.  அதிக விலை கொடுத்து வாங்கிய கணிப்பொறியை  பல்வேறு பயன்களை ஆய்ந்து அதை பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதோடு கூட  அதை மேலும் மேம்படுத்த முயல்வது அல்லவா சிறப்பான செய்கை.   ஆனால் கணிப்பொறியை வேறு எவ்விதத்திலும் உபயோகிக்காமல்  அதன் திரையில் ஒரு  தெய்வ வடிவை தோன்றவைத்து  அதை சுவாமி படம் என்ற முறையில்  பூஜையறையில் வைத்து வழிபட பயன்படுத்துவதைப்போன்றது பைலனின் குரு  கூறுவது. 

“ஆயிரம் தலைமுறைகளாக வேதம் நாவிலிருந்து நாவுக்கென பற்றிப்படர்ந்து எரிந்து ஒளியாகி இங்கு நம் வரை வந்து சேர்ந்துள்ளது. மருந்தை அருந்துபவன் அதை முற்றறிந்துவிட்டு உட்கொள்வதில்லை. மருந்து உள்ளே என்ன செய்கிறதென்பதை மருத்துவனும் சொல்லிவிடமுடியாது. வேதமே சொல்லில் எழுந்த மருந்து. பிறவிப் பெருந்துயர் அழிக்கும் அமுது. அதைப் பேணுவதும் கொள்வதுமே நம் கடன். ஆராய்வதற்கு நாம் வேதம் வந்தமைந்த முனிவர்கள் அல்ல, எளிய மானுடர்.”
  வேதத்தின் புனிதம் அதன் தத்துவத்தில் இருக்கிறது. அதை விடுத்து அதை விழைவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கையேடு என பயன்படுத்திக்கொள்வது, அல்லது பூஜையறைத் தெய்வசிலையைப்போல் வழிபடமட்டுமே பயன்படுத்துவது எப்படி சரியாகும் என்ற பைலனின் கேள்விக்கு அவன் குருவிடம் விடைகிடைக்காமல் போகிறது. மனிதனின்  சிறுமைகள்,  அவனை சிறையிட்டிருக்கும் விழைவுகள் என்ற விலங்குகளை உடைத்து அவனை விடுவிக்காத எந்த ஒன்றும் அவனுக்கு உண்மையில் பயனளிப்பதில்லை எனச் சொல்லிச் செல்கிறது  வெண்முரசின் இப்பகுதி.


தண்டபாணி துரைவேல்