Saturday, November 19, 2016

இரு துருவங்கள்
இரு துருவங்கள் என்றால் இரண்டும் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவையா? அல்லது ஒன்றின் இருப்பை ஒன்று மறுப்பவையாஇல்லை ஒன்றின் இரு பக்கங்கள் அவை. ஒன்றில்லாமல் ஒன்றிருப்பதில்லைவடதுருவம் மட்டும் வேண்டும் தென்துருவம் வேண்டாம் என ஒன்றை நாம் அடைய முடியாது. இப்படியே காந்தத்தில் இரு நிலைகள், மின்சாரத்தில் நேர் எதிர் என இரு நிலைகள்நாணயத்திற்கு பூ தலை என இரு பக்கங்கள்  ஒன்றை ஒன்று இணைந்தே இருக்க, ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை கொண்டவைஇதில் ஒன்று சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்றூ நாம் கொள்வதில்லை.


        
ஆனால் அனைத்து நேரெதிர் நிலைகளையும் நாம் சமமாக விரும்புவதில்லைஇந்த நேரெதிர்  இரட்டையில் ஒன்றைப் பெரிதென, ஒன்றைச் சிறந்ததெனஒன்றை விருப்பத்துக்கு உகந்ததென ஒன்று வெறுத்து ஒதுக்கவேண்டியதென நினக்கிறோம். அந்த இரட்டையில் ஒன்றைத்  தேடிக்கொண்டு மற்றொன்றிலிருந்து தப்பித்துக்கொண்டு ஓடமுயல்கிறோம். ஒன்றை புலன்களால் அனுபவிக்க விரும்புகிறோம். மற்றொன்று நம் புலன்களின் அருகில் வருவதை முடிந்தவரை தவிர்க்கப்பார்க்கிறோம். ஆனால் நாம் தவிர்க்கப்பார்க்கும் ஒன்று நாம் விரும்பும் ஒன்றை விட அதிகம் இருக்கிறது. வேண்டும் ஒன்று குறைவாகவும் வேண்டாதவை அதிகமாகவும் இருக்கிறது. வேண்டிய பொருள் கிடைப்பதற்கு அரிதாகவும் பண மதிப்பு அதிகமாகவும் இருக்கின்றதுவேண்டாத பொருள் நம் எதிரே நாம் கேட்காமலேயெ குவிக்கப்படுகிறதுமனிதனின் அறிவெல்லாம இந்த வேண்டாத ஒன்றை விடுத்து வேண்டிய ஒன்றை பெறுவதற்காக செலவிடப்படுகிறதுஅறிவியல் சமயம் தத்துவம் அரசியல் எல்லாம் இதன் பொருட்டு உண்டாக்கப்பட்டவையாக இருக்கின்றன
    
           
வேண்டியவை பலகீனமானவை ஆனால் வேண்டாதவை பலம் வாய்ந்தவை.   அழகு மிகுந்த முகம் எனப் புகழப்பட்டது ஒரு சிறிய வடுவினால், சின்ன தேமலால், அழகற்றது என ஆகிவிடுகிறது. சுவையான உணவில் சிறிது சுவை மாறினால் உண்ண வேண்டாத ஒன்றாக மாறிவிடுகிறதுஆய்ந்து அலசி வாங்கப்பட்ட   உயர்ந்த ரக ஆடை ஒர் கிழிசல், ஒரு சிறு கறையின் காரணமாக  அதன் பெருமை அழிந்து அணியப்படாமல் தூக்கி எறியப்படுகிறது. `


            
வேண்டியவையின் ஆயுள் மிகக்குறைவாக இருக்கவேண்டாதவை நீடித்து இருக்கின்றன. வேண்டியவை எளிதில் சமநிலை குலைந்து போய்விட வேண்டாதவை உறுதியாய் இருக்கின்றன. ஒரு மலரின் வாசம் சிலமணி நேரம். சற்று நேரத்தில் அது  அழுக ஆரம்பித்து   கெட்ட வாடையடிக்கத் தொடங்கிவிடுகிறது.   சுவையான உணவு கொஞ்ச நேரத்தில் கெட்டுப்போய் உண்ணத்தகாததாக ஆகிவிடுகிறதுநம் மனதில் தோன்றிய மகிழ்ச்சிசிறு காரணத்திற்காக சட்டென்று காணாமல் போகிறது. ஆனால் எற்பட்ட துக்கம் மனதில் அகலாமல் நீண்ட நேரம் இருக்கிறது. வேண்டியவை வெகு விரைவில் வேண்டாதவை என உருமாறுகின்றன.     இன்னும் கேட்டால் நமக்கு வேண்டாதவையால் ஆனதுதாகத்தான்  இந்த உலகம் தெரிகிறது. அதில் தேடி தேடி சிறிதிலும்  சிறிதானவையே அதுவும் சிறிதான காலத்திற்கு நமக்கு வேண்டியவையாக கண்டடைகிறோம்.   


       
ஆழ்ந்து பார்த்தால்,   வேண்டியவை வேண்டாதவை என எதிர் எதிரானதாக தோன்றினாலும், வேண்டாதவையின்  வேறு வடிவமே வேண்டியது என அறிகிறோம்பிறப்பு என்பது இறப்பின் மீது போர்த்தப்பட்டுள்ள மென்தோல். அழகு என்பது அழகின்மையின், அருவருப்பின் மேல் மூடப்பட்டுள்ள மெல்லிய ஆடை. நறுமணம் என்பது கெட்ட வாடைஎன்ற பனிக்கட்டி மேல்  எழும்பும்  ஆவி. உணவு என்பது மலத்தின் இறந்தகாலம். இளமை என்பது முதுமை என்ற தேரை இழுத்துகொண்டு முன் செல்லும் குதிரை. அரிய மணிகள் முத்துக்கள், பவளங்கள் பொன் என அனைத்தும் பூமியில் வீண் என ஆன குப்பைகள்மங்களம் என்பது அமங்களம் என்ற முகத்தின்மேல் பூசப்பட்ட மெல்லிய மஞ்சள் பூச்சு. ஒளி என்பது பேரிருள் வெளியின் மேல் தோன்றும் சிறு வெண் புள்ளிகள். ஒழுங்கு என்பது ஒழுங்கின்மை என்ற மத யானையை கட்டிப்போட்டிருக்கும்  மெல்லிய கயிறு. அழியாமை என்பது அழிபவைகளின் நிறைவேறாக் கனவு.        வேண்டிய பொருளை அடைவதற்கும் வேண்டாத பொருளை தவிர்ப்பதற்கும் அந்த வேண்டாத பொருளை அறிய வேண்டியிருக்கிறதுமருத்துவம் என்பது உடல் நலத்தைப் பேணுவதற்கான கல்வி. ஆனால் அந்தப்  படிப்பு பெரும்பாலும்  உடல் பிணிகளைப்பற்றியதாக இருக்கும்உலகில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவலர்கள் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் மனிதர்களை அயராது தேடி கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்உலகில் எப்படியெல்லாம் ஒழுங்கின்மை எதன் பொருட்டு ஏற்படுத்தப்படுகிறது என அறிவது  அவர்களின் கல்வியாக இருக்கிறது. அழகுக் கலை என்பது அழகின்மையை அறிந்து அதை நீக்குவது அல்லது மறைப்பது. அழகின்மை எதுவென அறியாத ஒருவர் அழகுக்கலையில் நிபுணர் ஆக முடியாது. ஆகவே இந்த வேண்டாதவற்றை சகித்துக்கொண்டு அதை முழுதறியாத ஒருவன் குறைபட்ட அறிவுடையவனாகவே இருப்பான். ஆதி சங்கரர் புராணத்தில் அவர் காமத்தைசம்சாரவாழ்வை  அறியாமல் துறவை உயர்த்திப்பேசுவது  சரியில்லை எனக் கூறப்பட்டு அதன் காரணமாக அவர் வேறொரு உடம்பில் கூடு மாறி காமத்தை அறிந்துவந்ததான கதையை கேள்விப்பட்டிருக்கிறோம்
      
நாம் வெறுத்து ஒதுக்குபவைகளின் தெய்வம் ஜேஷ்டா தேவி. நாம் தேடும் திருமகள் என்ற தெய்வம் சிறு பெண்குழந்தையென கையில்  அகப்படாமல் சிரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஜேஷ்டா தேவி காமம் கொண்ட பெண்ணென நம்மை விடாது பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறாள். ஒரு கணம் தயங்கி நிற்கையில், சற்றே சோம்பல் கொள்கையில்சிறு பிழையைச் செய்கையில்,   கவனமின்றி  அசட்டை செய்கையில், நோக்கம் மறந்து கவனம் சிதறிப்போகையில், மதிமயக்கும் போதையில் ஆழ்கையில்  அவள் நம்மை பிடித்து அவள் மடியில் இருத்திக்கொள்கிறாள்பின்னர் சிரமப்பட்டு அவளிடமிருந்து விலகி ஒட முற்படுகிறோம். சீக்கிரம் விழிப்படையாதவர்களை அவள் இறுகத் தழுவி தன்னுள் ஆழ்த்திக்கொள்கிறாள்.    விடாது தொடரும் அவளை எவ்விதம் தவிர்ப்பது எனத் தெரியாது விழித்து நிற்கிறோம்
       
துணிந்து சில சித்தர்கள் திரும்பி அவளை பார்க்கிறார்கள்விலகி ஓடுதலே அவளை நம்மீது காமம் கொள்ளச்செய்கிறது என உணர்ந்து அவளை நோக்கி அவர்களாகவே செல்கிறார்கள். தன் ஆடை அணிகலன்களை துறக்கிறார்கள். நாயின் மலத்தை தின்கிறார்கள், மற்றவரின் சிறுநீரை குடிக்கிறார்கள். சுடுகாட்டில் எரியும் பிணத்தை பிய்த்து உண்கிறார்கள். மனிதர்கள் தவிர்க்கும் அனைத்தையும் விலக்காது  ஏற்றுக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் முன்  திகைத்து நிற்கிறாள்  ஜேஷ்டா தேவிஅந்தக் கடும் தவத்தின் காரணமாக அவர்கள்   ஒரே தெய்வத்தின்  பொன்நிழலென  திருமகளையும்  கரு நிழலென ஜேஷ்டா தேவியையும் அறிகிறார்கள். வேண்டுதல் வேண்டாமை இல்லாத பெரு நிலையை அடைகிறார்கள்.


      
கிருஷ்ணனை திருமகள் வேண்டி ஏற்றுக்கொண்டவள். அவன் வெற்றி பெறாத போர்களே இல்லைஎதிர்கொண்ட சொற்களங்கள் எல்லாம் வென்றவன் அவன். எட்டு திருமகள்களும் அவன் வீட்டில் அவனை விரும்பி இணைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவனையும் பின்தொடர்கிறாள் ஜேஷ்டாஅவளை அலட்சியப்படுத்தி முன்சென்றுகொண்டிருந்த கிருஷ்ணன் திரும்பி அவளை நோக்குகிறான். தன்னை விரும்புபவர் எவராயினும் ஏற்காது விடுபவனல்ல அவன்அவள் ஜேஷ்டா என்பதால் மட்டும் விட்டுவிடுவானா என்ன. அவளையும் அவன் ஆரத் தழுவிக்கொள்கிறான். எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமைகொள்வதே கிருஷ்ணனின்  சிறப்பு. ஜேஷ்டாவினுடனான கூடலில் அவன் முழுமை கொண்டு இருக்கிறான். வெண்முரசில் அந்த சித்தரிப்பு  எவ்வித மூடி மறைத்தலும்  இல்லாமல் கூறப்பட்டிருக்கின்றன.   சில வாசகர்களால் இந்தப்பகுதியை  ஏற்றுக்கொள்ளமுடியாமல் போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெண்முரசு ஒரு முழுமையான  காவியம்இந்திய ஞான அறிவையெல்லாம் கூறிச்செல்லும் இக்காவியம்  இப்பகுதி இல்லாமல் போனால் அது குறை எனவே நிற்கும்


  
விஷ்ணு  வராக அவதாரம் எடுத்த போது திரும்ப வைகுண்டம் வராமல் ஒரு பெண்பன்றியை மணந்து குட்டிகளை அடைந்து ஒரு கூட்டமாக சகதியில் வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் பின்னர் திருமகளின் வேண்டுதலுக்கேற்ப சிவன் வந்து தன் சூலத்தால்   அந்த வராகத்தை கிழித்து  அந்நிலையிலிருந்த விஷ்ணுவை மீளவைத்தார் என்ற ஒரு புராணக்கதை உண்டு. ஆகவே கிருஷ்ணனுக்கு இந்த நிலை பொருந்தாது என்று ஒருவர் கூற முடியாது.
  
கிருஷ்ணன்   மனிதனாக ஞானியாக ஆசிரியனாக முழுமைகொண்டு மலர்வதற்கு அவன்  இந்த நிலையையும் அடைந்து கடந்து வரவேண்டும் என்றிருக்கிறது எனில் அவன் கடந்து வரட்டும்அவன் அனுபவத்திலிருந்து நாம் இன்னமும் கற்போம்.தண்டபாணி துரைவேல்