Thursday, November 17, 2016

பகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)


    நாம் எதோ ஒரு தத்துவத்திடம், ஏதாவது ஒரு ஆளுமையிடம், அல்லது ஏதாவது இலட்சியத்தின்  பால் ஈர்க்கப்படுகிறோம்.  அதை நாம் ஆய்ந்து அறிந்துதான் தேர்ந்தெடுத்திருப்போம். நாள்போக்கில் அதில் நம் மனதை  முழுமையாக அர்ப்பணித்து அதன் சேவகனாக ஆகிவிடுகிறோம்.  அது  நம்மை ஆளத்தொடங்குகிறது. அதற்காக நம் வாழ்வை அர்பணித்துக்கொள்கிறோம். அதன் மேல் நமக்கு கேள்விகள் எழுவதில்லை. அதன்மீது வேறு யாரேனும் கேள்விகள் எழுப்பினால், சிறு சந்தேகத்தை கேட்டால்,  நம்மால் பொறுக்க முடிவதில்லை. அவர் சொன்னதை சிந்திப்பதற்கு முன்பே தவறு  என்று மறுக்கிறோம். அப்படி மறுப்பதற்கு சரியான பதில் கருத்து நம்மிடம்  இல்லையென்றால் கோபம் கொண்டு வசை பாடுகிறோம். வன்முறையில் இறங்குகிறோம்.


   ஏன் நாம் இப்படி ஆகிவிடுகிறோம் எனத் தெரிவதில்லை. அதன் பிடியில் முழுமையாக சிக்கியிருக்கும் நம் சிந்தனையை சுற்றி சுவரென அதன் மீதான ஈர்ப்பு  சூழ்ந்துள்ளது. நம் பார்வையின் வீச்சை குறைத்துவிடுகிறது. நம் தேடலை அதன் எல்லைக்குள் நிறுத்திக்கொள்கிறது. அது நம் சிந்தனையின் சிறையென ஆகி அதிலிருந்து  நம்மால் இறுதிவரை வெளியே வரமுடியாமல் போய்விடுகிறது.


    எவ்வளவுதான் உயர்ந்த தத்துவம், ஆளுமை அல்லது இலட்சியமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது நமக்கு சிறைதான். அதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை.  அந்தச் சிறையை எந்த அறிவார்த்தமான விவாதமும் உடைத்துவிடுவதில்லை. அப்படி நம்மை விடுவிக்க முயலும் விவாதங்களை, அறிவுரைகளை,  நாம் தவித்துவிடுகிறோம். அவற்றை நிந்தித்து மூர்க்கமாக சண்டையிடுகிறோம்.


  அதற்கு விடிவு தான் என்ன?  நம் காதுகளை அடைத்திருக்கும் அடைப்பை எப்படி உடைத்து நீக்குவது?  கண்களை மூடியிருக்கும் திரையை எப்படி கிழித்தெறிவது?  அதைவிட முதலில்  நம் காதுகள் அடைக்கப்பட்டிருப்பதை கண்கள் திரையிடப்பட்டிருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது என்பது பெரிய கேள்வி.


      அந்தக் கேள்விக்கு பதிலாக  சில சமயம்  ஒருவன் வருகிறான்.  எந்த கொள்கையின் பிடியிலும் இல்லாத அவனைக் காணுகையில் கோமாளியெனத் தென்படுகிறான். எவ்வித நோக்கும் இல்லாது அவன் பேசுவது நமக்கு நகைப்பை வரவைக்கிறது. எந்த இலக்கணங்களுக்குள்ளும் அடங்காத ஒருவனை நாம் இதுவரை பார்த்திருப்பதில்லை. அனைத்தையும் தன் கேள்விகளால் சீண்டுகிறான்.  நாம் ஒன்றின் வசத்தில் இருக்கிறோம் என்பதே அவனை அவன் கூற்றுகளால நம்மை சீண்டத் தூண்டுகிறது. அவன் நம் கருத்தை மட்டுமல்லாமல் நாம் எதிர்க்கும் கருத்துக்களையும் தத்துவங்களையும்  எள்ளி நகையாடி பகடி செய்வதால் அவனை நாம் எதிரியாக காண்பதில்லை. அவன் கோமாளி அதனால் அவன் சொல்வதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்துடன் அணுகுகிறோம். அவன் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்டு அவன் சொல்வதை கேட்க காது கொடுக்கிறோம். அவன் சுட்டிக்காட்டி சிரிப்பதை காண முற்படுகிறோம்.    அவன் சொற்கள் நிர்வாணமாக இருக்கின்றன. அவன் உயரிய தத்துவங்களை அற்பமான உவமைகளால் அளவிட்டு அவற்றின் மிகைப்படுத்தப்பட்ட உயரத்தை குறைத்துவிடுகிறான்.  அவன் சொற்கள் நம் கொள்கையை, தத்துவத்தை, நம்பிக்கையை  சீண்டுகின்றன. நெடுநாள் கடலோடிய கப்பலில் சேர்திருக்கும் படிவங்களைபோல் நம் சிந்தனையில் சேர்ந்திருக்கும் அபிமானங்களை, மூடநம்பிக்கைகளை, அதீத ரசனைகளை அவன் பகடி என்ற சிற்றுளியால் செதுக்கி நீக்குகிறான்.  பெரிய அறிவுரைகள், விவாதங்களால் தகர்க்க இயலாது நம் சிந்தனையை சுற்றி அமைந்திருந்த அரண், அவன் சிற்றுளியால் மெல்ல மெல்ல தகர்கிறது.

   

நாம் இப்படி ஏதோ கொள்கையின் தத்துவத்தின் அல்லது ஒரு ஆளுமையின் காரணமாக நம் சிந்தனையை சிறையிட்டுக்கொள்ளமல் இருக்க இத்தகைய ஒருவன் நமக்கு தேவைப்படுகிறான். ஆனால் அவனை வெளியில் தேடாமல் நம்க்குள்ளே தேடவேண்டும். நம்மை சுய பகடி செய்துகொள்ளும் ஒருவனுக்கு இப்படி வெளியிலிருந்து பகடிசெய்பவன் அவசியமில்லை.  காந்தி இரமணர் போன்ற பெரிய ஆளுமைகள்  மற்றவர்கள்  தம்மை பகடி செய்வதை புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்வதோடு தம்மை சுயபகடி செய்துகொள்வதை,     நாம் படித்திருக்கிறோம். சுய பகடி நம் அகங்காரத்தை குறைக்கிறது. நம்மை மற்றவர் கண்ணோட்டதில் பார்க்க வைக்கிறது. நம்மை சீர்படுத்திக்கொள்ள, நம் நடவடிக்கைகளை நேர்ப்படுத்திக்கொள்ள அவை உதவுகின்றன. எப்போது தன்னிலிருந்து இன்னொருவனாக  வெளிவந்து தன்னையே பகடி செய்துகொள்பவன், என்றுமே உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கிப்போகமுடியாது.  அப்படி நம்மிலிருந்து வந்த ஒருவன் நம்மை ஓயாது பகடி செய்துகொண்டிருக்கையில் நம்மால் எப்படி கோபத்தில் கொந்தளிக்க  முடியும்? துயரத்தில் மூழ்க முடியும்? களிப்பில் ஆட முடியும்? காமத்தில் மதிமயங்க முடியும்?
   

வெண்முரசில்  பகடி செய்பவர்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு தத்துவத்தின் உயர்வை விளக்கிச்செல்லும் அதே நேரத்தில் அது பகடிக்கும் உட்படுத்தப்பட்டு அதன்சிறப்பின் எல்லையும் சுட்டப்படுகிறது. வெண்முரசின் பெரிய கதாப்பாத்திரங்கள் எல்லாம் அவ்வப்போது பகடி செய்யப்பட்டு மனிதர்களாக்கப்படுகிறகள். இந்தப் பகுதியில் சண்டன் என்ற சூதனின் பகடி உயர் தத்துவங்களை குறிவைக்கிறது. அத் தத்துவங்களின் சிறையிலிருக்கும் மனிதர்களை பகடி செய்கிறது. அந்த தத்துவங்களை கைக்கொண்டவர்களின்  உள்ளத்தின் ஆழத்தில் தேங்கி வாடையடிக்கும்  தற்பெருமையை, மூட பக்தியை, சிந்தனைத் தேக்கத்தை வெளிக்கொணர்கிறது.  இந்தப் பணியை,  பகடியைத் தவிர வேறெந்த முறையிலும் செய்ய முடியுமா என்பது  ஐயமே.

தண்டபாணி துரைவேல்