Friday, November 18, 2016

இருளே ஒரு உலகமாக




இருளே ஒரு உலகமாக இருக்கும் யமலோகத்தின் கதவுகளின் தாழ் பொன்னால் ஆனதாக இருக்க. பொன்னே ஒரு உலகமான குபேரபுரின் கதவுகளின் தாழ் கல்லிரும்பால் ஆனதாக இருக்கும் முரண்தான் மானிடர்களின் மனங்களாக அங்கு  தாழ்க்கொண்டு தடுத்தும் இழுத்தும் விளையாடுகின்றது.

இருள் உலகங்கள் பயம் என்றும், வஞ்சம் என்றும், காமம் என்றும், உறவென்றும், சுகம் என்றும், நிறைவின்மை என்றும், சுயநலமென்றுமை்  ஒரு பொன்தாழ்மின்ன மனிதனை இழுத்து தனக்குள் அமிழ வைத்துக்கொள்கின்றது. அதில் அமிழ்ந்தவர்கள் அதைவிட்டு யுகம்யுகமாய் கரையேறமுடியாத இருள் உலகில் மூழ்கி மூழ்கி மூச்சுத்திணறுகின்றார்கள். ஆனால் இருள் உலகத்திற்கு  வராதே என்று தடுக்கும் காவலாளிகள் இல்லை என்பதுதான் இதன் இருளுலகின் முரண்.
.
பொன்னுலகம்  நிறுத்துப்பார்த்தல் என்றும், பண்டமாற்றென்றும், காலவாணிபம் என்றும் பகுக்கப்பட்டு ஒவ்வொரு தாழின் முன்னும் காவலாளிகளால் நிறுத்தப்பட்டும் மறுக்கப்பட்டும் சுடப்பட்டும் மயக்கப்பட்டும் தடுக்கப்படுகின்றார்கள் ஆனால் அதில் சென்று  சக்கரைப்பாகில் ஒட்டிக்கொள்ளும் ஈப்போல மானிடர்கள் மாறிவிடுகின்றார்கள் என்பதுதான் பொன்னுலகின் முரண்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்-என்கிறார் வள்ளுவர்.

பகைவனின் செருக்கை அறுக்கக்கூடியது பொருள் என்றாலும், பொருளைப்போல செருக்கை உண்டாக்ககூடிய இன்னும் ஒருபொருள் இல்லை. அறிவுடையவன் செறுக்கு அடங்கா செருக்கு என்றாலும் அறிவுடையவனை அறிவுடையவன் என்று அறிய ஒரு அறிவு வேண்டி உள்ளது ஆனால் பொருள் உடையவனை பொருள் உடையவன் என்றுக்காண இருவிழிக்கூட தேவை இல்லை. பொருளே ஒரு செறுக்காக பொருள் உடையவனிடம் அமையும்போது ஏற்படும்பேதமையை குபேரனாக உருவகப்படுத்தும் இடத்தில் வெண்முரசு அதன் விண்வெளியைத்தொடும்போது அதன் பாதத்தை சமகாலம் என்னும் பூமியில் ஊன்றுகின்றது.

பூதம்போலவும் அக்கினிப்போலவும் அறிவுள்ள குழந்தைகள்போலவும் பொன்கத்தி ஏந்திய வீரர்கள்போலவும் மகனாகி வரும் அரண் விழுதுகள்போலவும் இருக்கும் குபேரபுரியின் அனைத்து வல்லமையும் தனது செருக்குக்கு பின்னால் உள்ள பேதமையையும் குழந்தைத்தனத்தையும் பயத்தையும் காட்டும் இடத்தில் குபேரபுரி என்பது நாம் நித்தம் நித்தம் மண்ணில் காணும் காட்சி  என விரிகிறது.

நித்தம் நித்தம் கேட்ட புகழ்மொழியை புதிதாக கேட்டதுபோல் மனம்மகிழும் குபேரனைப்பார்க்கும்போதுதான் “குபேரா! நீ இத்தனை பெரிய சின்னவண்டாடா“ என்று கேட்கத்தோன்றியது. உண்மையில் குபேரன் சின்னவண்டுதான். அவனை சின்னவண்டு என்று நம்மமுடியாமல் உலகத்தை மயக்குவதுதான் மாயையின் முரண். 

செல்வம் கனவுப்பொன்றது என்று அறியாத மனிதர்கள் பொன்னால் துயில்கின்றார்கள். செல்வம் கனவுப்போன்றது என்று தெரிந்தும் பொன்னால் துயிலமுடியாமல் பொன்னுக்கான தெய்வம் துயிலாமல் இருக்கிறான் இதுதான்  காலம்செய்யும் முரண்.

எல்லா செல்வங்களுக்கும் அதிபதி ரீதி நிதி இருபுறம் இருக்க இளம்சூரியன் குடைக்கீழ் சிம்மாசனத்தில் வைரக்கொம்புடைய ஆட்டுவாகனம் அருகில் இருக்க அரசாளும் குபேரன் ஒரு மானிடன் முன் சரிக்குச்சரி பொன்வைக்கமுடியாத கருமி என்பதுதான் பொன்செய்யும் முரண்.  

பொன்தேவனை வெல்வதன் மூலமாக துயிலையும் அர்ஜுனன் வெல்கிறான்.

பொன்படைத்தவர்கள் வீட்டில் ஆண் மக்கள்  எல்லாம் கோழைகளாக இருக்க பெண்மகள் மட்டும் அச்சம் மற்று இருப்பதுதான் வாழ்வியல் முரண். 

ராமராஜன் மாணிக்கவேல்