Wednesday, November 30, 2016

பிருஹஸ்பதி



அன்புள்ள ஜெ.

//இங்கு அவையமர்ந்திருக்கும் பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குரு அல்லவா?” என்றார் நாரதர். இந்திரனால் மேலும் சொல்லெடுக்க முடியவில்லை//

பிரஹஸ்பதி தேவகுரு அல்லவா? சுக்ராச்சாரியார் அசுரக்குரு. 

பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குருவல்லவா? என்று நாரதர் கேட்பது அவருக்கே உரிய புள்ளியில் அடிக்கும் நாவன்மையாகவும் தெரிகிறது எது சரி? 

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல். 
அன்புள்ள ராமராஜன்
தேவர்கள்களுக்கும் அசுரர்களுக்குமான ஒரு போட்டியில் தேவர்கள் பிருஹஸ்பதியை தங்கள் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தனர், அசுரர்கள் சுக்ரரைத்தேர்வுசெய்தன - இப்படி ஒருகதை புராணங்களில் உள்ளது. அதைவைத்து இந்த கூற்று சொல்லப்படுகிறது
புராணங்கள் ஒற்றைக்கதை அல்ல. அவை ஒரு வகை கருவிகள்.படிமங்கள். ஆகவே அவை பலவகையில் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. பிருஹஸ்பதியின் கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவை முரண்பாடுகள் கொண்டவையாக, தொடர்பற்றவையாக இருப்பதைக் காணலாம்
புராணங்களில் ஆரம்பகாலத்தில் பிருஹஸ்பதி அனைவருக்கும் குருவாகவே இருக்கிறார். சுக்ரர் அவரது மாணவர். நாத்திகதரிசனம் பிருஹஸ்பதியில் இருந்து உருவாகி அவரது மாணவர்களிடம் சென்றது என்பது வரலாறு - நானே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். 
இந்தக்கதையில்பிருஹஸ்பதி அனைவருக்கும் ஆசிரியர்  என்றே சொல்லப்படுகிறார். ஆனால் அவர் அசுரர்களிடம் செல்லவில்லை
ஜெ