தேவி காமினி (கிராதம் -24)
ஆவாஹனம்
பிறகு வந்தவள் காமினி. அன்று மாலையில் ஒரு மரத்தடியில் சருகு மெத்தையில் அவன் துயின்று கொண்டிருந்தபோது அவள் மெல்ல வந்து அவன் அருகே அமர்ந்தாள். உடலின் மெல்லிய வெம்மையையும் தோல்மணத்தையும் அவன் புலன்களுக்குள் வாழும் நுண்புலன் ஒன்று உணர்ந்தது. நன்கு உணர்ந்திருந்த அருகமைவு. ஆழ்குரலில் “நீயா?” என்று அவளிடம் கேட்டான். கையூன்றி அவள் அவன் மேல் மெல்ல குனிந்தாள்.
நான் ஜடரையின் தங்கை” என்று அவள் சொன்னாள். வியப்புடன் “நான் அறிந்ததில்லை” என்றான். “அவளை அறிந்த இதழ்கள் என்னையும் கண்டுகொள்கின்றன” என்று அவள் கூறினாள். “உடலணைவது வரை நரம்புகளில் வாழ்வேன். அங்கிருந்து மூலாதாரத்திற்குச் சென்று அனல்துளியென எஞ்சுவேன். தன்னுணர்வு இருக்கும் வரை உன்னை நான் விட்டுச் செல்வதில்லை” என்று அவள் சொன்னாள்.
வழிபாடு:
உலகின் அனைத்து மனித உயிர்களையும் தன் உடலின் சிற்றணுக்கள் என கொண்டிருக்கும் விராட புருசனின் உயிராவல் ஒரு தெய்வமென்று ஆகி தோன்றியவள் நீ. உயிர்களின் உடல்களில் எழுந்தும் தணிந்தும் ஒளிந்துறையும் வேள்வித்தீ நீயல்லவா.
ஆர்வமாய்த் தோன்றி, ஆசையாய் வளர்ந்து, அனுபவமாய் மலர்ந்து, நினைவென முதிர்ந்து நிற்பவள். பிறந்து வளர்ந்து இறத்தல் என இருக்கும் சாரமற்ற வாழ்வில் ஒரு தெவிட்டாச்சுவையொன்றை தருபவள் நீ.
நீ எழும்போது உடலின் ஐம்புலன்களின் அறிதல் மாறுபடுகிறது. நீ விழிகளுக்கு சிலவற்றை மேலும் அழகென தெரியவைக்கிறாய், சிலவற்றில் மேலும் சுவையை கூட்டுகிறாய், சிலவற்றில் கமழும் மணத்தை மேலும் அதிகரிக்கிறாய், சிலவற்றை தொட்டறிவது மேலும் இதம்தருவதாக ஆக்கி இன்பத்தை கூட்டுகிறாய்.
நீ என்னுள் எழுந்து என்னை இன்னொரு ஆளாக மாற்றுகிறாய். என் சிரிப்பு நடை பாவனைகள், பேச்சு செயல் அனைத்தும் எதிர்பாலின உயிர்களை கவர்வதென ஆகின்றன. உன் தூண்டில் முள்ளில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு புழுவென நான் ஆகி, மற்றொரு தூண்டிலில் கோர்க்கப்பட்டுள்ள வேறு புழுவை இரையென எண்ணி நாடி ஓடுகிறேன்.
மற்ற உயிர்களின் உடலில் ஓரிடத்தில் மட்டும் எழுபவள் நீ. ஆனால் மனிதர்களில் உடல் முழுதும் ஓடி விளையாடுகிறாய். நிணம் ரத்தம் நரம்புகள் என இருக்கும் ஒரு உடலை உன் மாய ஒளியில் ஒராயிரம் இன்பங்கள் வழங்கும் களிக்கூடம் என தெரியவைக்கிறாய்.
ஒருவன் மனதில் மெல்ல நுழைந்து அவனறியும் முன்பே ஒரு பனிப்போர்வையென அவன் அறிவை மூடிக்கொள்கிறாய்.
சீராக எண்ணங்களை அடுக்கி வைத்திருக்கும் ஒரு மனதில் நீ புயற் காற்றென தோன்றி அனைத்தையும் கலைத்துப்போடுகிறாய். அசையாது தீபமென ஒளிர்ந்துகொண்டிருக்கும் அவன் அறிவை சலனப்படுத்தி அறிவை சிதறடிக்கிறாய்.
தன்னை உடலிலிருந்து பிரித்து தான் உடலல்ல என உயர முயல்பவரை மீண்டும் அவர் வெறும் உடல்தானென வீழ்த்தி விளையாடும் சிறுமி நீ.
உன்னிலிருந்து விடுபட வேண்டும் என ஓயாது போராடுபவர் எவரையும் நீ உன் குறும்பினால் தடுமாறி உன் மடியில் விழவைக்கிறாய். எதன்பொருட்டும் பணியாதவனை நீ பணிய வைத்து மகிழ்பவள். பெரிய வீரனை ஒரு கோழையென குறுக வைக்க, ஒரு அறிஞனை பேதையென உளறவைக்க, துறவி தன் துறவை துறந்து வீழவைக்க, நெறிகள் தவறா உறுதி கொண்டவரை பிறழவைக்க என உன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.
உன்னை கட்டுக்குள் வைக்க என்று உலகில்தான் எத்தனை நெறிகள். அனைத்தையும் கட்டறுத்து எழும் கள்ளி நீ.
நீ மனமிரங்கி அருளினால் அன்றி உன் மாயைத்திரை தாண்டி வெளிச்செல்லக்கூடுமோ?
தேவி, நான் உன்னை எதிரியெனக்கொண்டு வென்று செல்ல முயல்பவன் அல்ல. உன்னை அறிந்து உசாவி கடந்து மேல் செல்ல முயலும் ஓர் எளியவன்.
என்னை இன்பமென்ற கள் மயக்கில் என்றும் இருக்கும்படி வீழ்த்தி விடாதே. என் அறிவை உனக்கு அடிமை என ஆக்கி என் எண்ணமெல்லாம் உன்னைசுற்றியே இருக்கும்படி என் சிந்தையை நீ அடிமைப்படுத்திக்கொள்ளாதே.
உன்மாயையில் நான் மூழ்கி நெறிகள் என இச்சமூகத்தில் கொண்டிருப்பதை நான் கைவிடாமல் இருக்க கருணைபுரிவாயாக.
உன் இதம்தரும் அணைப்பிலிருந்து விடுவித்து ஞானவெளியில் பயணம் செல்ல என்னை அனுமதிப்பாயாக.