Saturday, November 26, 2016

தேவி ஜடரை (கிராதம் 24)



ஆவாஹனம்:
  

ஓநாயின் முகம் கொண்டவளாகிய ஜடரை. மெல்லிய முனகல் ஓசையுடன் எழுந்து காற்றென வந்து அவன் உடலைத் தழுவி அவனை முத்தமிடத்தொடங்கினாள். குளிர்ந்த மூக்கின் முத்தங்களால் அவன் உடல் சிலிர்த்துக் கூசியது. அவள் வாயிலிருந்து வெம்மைகலந்த மூச்சு ஊன் மணத்துடன் எழுந்தது. அனலென அவன் வாய்க்குள் புகுந்து வயிற்றில் குடிகொண்டாள்.மூவேளை பசியென  அவன் உடலில் அவள் எழுந்தாள். அவன்  வாழ்ந்தகாலத்தை மூன்றென பகுத்தாள். அவன் உடலை எரிவதும் அணைவதுமென இரு செயல் கொண்டதாக ஆக்கினாள்.  அவன் நோக்கிய அனைத்தையும் உண்ணத்தக்கதும் அல்லதுமாக பிரித்துக்காட்டினாள். அவன் கால்களில் ஆற்றலாகவும் கைகளில் விசையாகவும் எண்ணங்களில் ஒளியாகவும் ஆனாள்.   (வெண்முரசு ) 

வழிபாடு:
 
நான் பிறந்த நாளிலிருந்தே என் உடலை வேள்விக்குண்டமாக்கி அதில் வேள்வி நெருப்பென எரிந்துகொண்டிருப்பவளே உன்னை வணங்குகிறேன். 

 என்உடலை வளர்த்து பேணி என்னை வாழ வைப்பவள் நீ. என் வாழ்நாள் முழுதும் உனக்கான அவியை  உழைத்து தேடி கொணர்ந்து   வருபவன் நான்.   நான் உன்னையும் நீ என்னையும் பேணி இருப்போமாக. 

உனதிருப்பை உணர்கையில் நான் என் நலத்தை உணர்கிறேன். நீ என்னுள் எழாத பொழுதுகளை நான் நோயென அறிகிறேன்.    

அவியிடாத நெருப்போ குன்றும். ஆனால் அவியிடாதபோதுதான் நீ சீறி எழுகிறாய். வயிற்றினில் தொடங்கி கண்களில் சுவாலை வெளிப்பட எரிந்தாடுகையில் என் அனைத்து பண்புகளையும் மறந்து போக வைக்கிறாய்.   அனைத்து பணிகளையும் தவிர்த்து உனக்கான அவியினைத் தேடுவதையே முதன்மையாக்குகிறாய். 

   உனக்கு அவியிடுவதே எனது முதன்மை இன்பமென ஆக்கி வைத்திருக்கிறாய்.  அறுசுவைகளை அவ்வப்போதைக்கான பரிசென அளித்து இன்பமளிக்கிறாய்.  உணக்கான அவிப்பொருளாகிய உணவை  காண்கையிலே பெருகத் தொடங்கும் இன்பம், அது  உருவாகும்  ஓசையில்,  அதைத் தொட்டெடுக்கையில், அதன் வாசத்தை  நுகர்கையில் வளர்ந்து, நாவில் சுவையென உச்சமடைகிறது.

நீ நிறைவு கொண்டு தணிந்து இருக்கையில் மட்டுமே மற்ற அனைத்து இன்பங்களுக்கான விழைவுகள் தோன்றுகின்றன. விழைவுகளுக்கான முதன்மைத்தெய்வமன்றோ நீ.  உன் அனுமதியின்றி எந்த விழைவுத் தேவதை என்னுள் எழ முடியும்?

தேவி  என் இறுதிவரை என்னுள் எழுந்தருளி இருந்து  என்னை காத்துவருவாயாக. உனக்கு அவியிடுவதில் நான் செய்யும் நேரக் குறைகளை, அவிப்பொருட்களின் தூய்மைக்குறைகளை, அளவுக் குறைகளை மன்னித்து என் ஆகுதியை ஏற்று நான்  நலமோடும்  வளமோடும் வாழ அருள்வாயாக.