Wednesday, November 30, 2016

பொன் எனும் பொறி




அன்புடன் ஜெ அவர்களுக்கு,

உங்கள் கதையில் , வியாசர் கங்கையை திரையாக்கி , வீரசொர்க்கத்தை காண்பிப்பது போல, எனது மடிக்கணினி திரையின் வழி, நான் ஏழுலக வாசியாகிவிட்டேன். சமயங்களில் விராடபுருஷனாக உணர்கிறேன். கொட்டு முடிந்து, சன்னதம் முடித்து, இந்த தரையுலகில் கால் வைக்கவே கூசுகிறது.
எல்லா அனுபவங்களுக்காகவும் தாள்பணிகிறேன்.

குபேரபுரியில், சுயம் இழந்து, சிற்ப செதுக்குகளாக கட்டுண்டு மயங்கி இருப்பவர்களை பற்றி வந்ததும் இதை எழுத தோன்றியது. "salt of the earth" என்றொரு ஆவண படம். கர்மயோகியான போட்டோகிராபர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியது. அதில், பிரேசில் தங்க சுரங்கங்களை படமெடுத்திருப்பார். பின் குரல் இப்படி சொல்லி செல்கிறது "இங்கே வேலை செய்பவர்கள் யாரும் அடிமைகள் இல்லை. பலரும் பட்டதாரிகள். டாக்டர் மற்றும் என்ஜினியர்களும் உண்டு. இங்கே , இந்த சூழலில் , இப்படி அடிமைகள் போல வேலை செய்ய ஒரே காரணம் , தங்கம். இவர்கள் மண் சுமக்கும் சதுரங்களில் , தங்க இழை ஓட்டம் , கண்டுபிடிக்கப்பட்டால் , அப்பகுதியில் வேலை செய்த எல்லோருக்கும் , ஒரு கிலோ தங்கம்.    வாழ்க்கையையே புரட்டி போடக்கூடிய செல்வம். அதன் பின் , அவர்கள் மீண்டும் வேலை செய்ய தேவை இல்லை. அதற்காகத்தான் இங்கே வேலை செய்கிறார்கள்.
ஆனால் ஒருமுறை தங்க இழையை பார்த்தவர் , இங்கிருந்து மீள்வதே இல்லை" என சொல்லி முடியும். 

எவ்வளவோ பகிர நினைத்து, நினைத்ததுடன் மட்டுமே நிறுத்திக்கொள்கிறேன்.


அன்புடன்,
ஜோதி ராஜேந்திரன்