Thursday, November 17, 2016

பெரிய குழந்தை




அடம்பிடிப்பவளுக்கு பிறந்து அடம்பிடிப்பதன் மூலமாகவே வளர்வதாகவும் வெல்வதாகவும் நிறைவதாகவும் நினைக்கும் குபேரன், குதிரைகளின் கண்களை மறைத்து வண்டிஇழுக்க வைப்பதுபோல மனிதர்களின் புலன்களை தனது வசிகரத்தால் மறைத்து தனக்கு வகனமாக பயன்படுத்துகின்றான்.

கனவில் விழுபவர்கள், விழைவில் விழுபவர்கள், உள்ளம்  திரிபவர்கள் என்று அவன் வாகனம் விலையில்லாமல் தனாக வந்து கிடைக்கிறது. அவனுக்காக காத்துக்கிடக்கிறது. குபேரனுக்கு வாகனமாக இருப்பதை அறியமலே குபேரனாக இருப்பதாக நினைக்கும் மனிதர்கள்மேல் அவன் பயணம் செய்கிறான். 

புலன்களுக்கு கனவுகளாக இருப்பவைகளையும், விழைவுகளுக்கு விடியலாக இருப்பவைகளையும், மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பவைகளையும் பொருளாக செய்து பொருள் என்று நம்பும் இடம்வரை குபேரன் பயணம் செய்கின்றான். உண்மையில் பொருள் என்று பொருள்படும் சொல்முன் அவன் அதாவது சொல்லின் பொருளாகிய சக்திமுன் அவன் பொருள் அற்றுப்போகின்றான். குழந்தைமையால் வரும் பேதமையே தனது உருவம் உடல் ஆற்றல் என்று வாழ்ந்தவன் அன்று அடங்குகின்றான். அப்படி அடங்குபவனை சுமந்து வாகனமென அலைந்தவன் இன்று தன்னைத்தான் நோக்கி சிரிக்கிறான்.

தன்னைத்தான் நோக்கி மனிதன் சிரிக்கும் தருணத்தில் எல்லாம் மனிதன் தன்னை உணர்கின்றான். தன்னைத்தான் நோக்கி மனிதன் சிரிக்கமுடியாத நிலையில் மனிதனை மனிதனின் விழைவு வைத்திருக்கிறது. அந்த விழைவு ஒடியும் ஒருதருணத்தில் மனிதன் தன்னைத்தான் காண கண்கொண்டுவிடுகின்றான். 

இந்திரகீலமலைக்கு செல்லும் அர்ஜுனன் தன்னைத்தான் உணரும் தருணத்தில் தன்னைத்தான் நோக்கி சிரிக்கிறான்.  அன்று அர்ஜுனன் மலைவிட்டு கீழிறங்கும்போது எதிர்வரும் இளமுனியைப்பார்த்து சிரிக்கின்றான். இன்று குபேரனைத்தேடிப்போகும் அதே அர்ஜுனனைப்பார்த்து இன்று சௌம்யன் சிரிக்கிறார். இவரும் தன்னைத்தான் பார்த்து சிரித்தவர்தான். தன்னைத்தான் பார்த்து சிரிப்பவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒரு பித்து ஒழிந்த நிலை தெரிகிறது. அந்த பித்தின் இறக்கத்தில் அவர்களுக்குள் ஒரு அமைதி நிலவுகின்றது. அந்த அமைதியில் உண்மை தெரிகிறது.

குழந்தைத்தனமான குபேரனை சுமந்த அலைந்த பித்து ஒழிந்து சௌம்யன் மனம்திரும்பும்நாளில் பொன் என்பது சுமக்கவைப்பது அல்ல ஒளிரச்செய்வது என்பதை அறிகின்றார். சுமக்கவைக்கும் அனைத்தும் பொன்இருள். விடிவிக்கும் அனைத்தும் பொன்னொளி.  பிரமத்தை கூழாங்கல்லை அனலை இளம்தளிரை ஒன்றென ஆக்கி விடுதலை அளிப்பது என்பதை அறிகின்றார்.

குபேரபுரியின் இருட்டும் அடர்பொன்னால் ஆனது என்பதால் அது புலன்தொடும் அனைத்தையும் பொன்னால் மூடிக்காட்டுகிறது அதை தாண்டும் ஒருவன் குபேரன் வாகனமாக தான் இருப்பதை அறிகின்றான். அது தன்னை பார்த்து சிரிப்பதை அறிகின்றான். பின் தன்னைத்தான் அறிகின்றான். அதன் பின் எங்கும் பொன் விலைமதிப்பில்லா பொன் இருப்பதை அறிகின்றான். அவனுக்கு விருந்தினர் வந்தால் விருந்தானந்தம் வராவிட்டால் ஏகானந்தம்.   

ஜெயங்கொண்ட சோழபுரம் நீதிமன்றச்சுவர் ஓரமாக ஒரு பிச்சைக்காரர் ஒரு அழுக்கடைந்த பையோடு உட்கார்ந்து இருப்பார். போவோர் வருவோரை திட்டுவார் புழுதிவாரி இறைப்பார். பள்ளிக்கும் விடுதிக்கும் போகும்போது அவரை தினம் காண்பது வழக்கம். அவர்மேல் சற்று அச்சம் என்பதால் தூரமாக நின்று பார்த்துவிட்டு செல்வது வழக்கம் அல்லது பார்க்காததுபோல் வேகமாக நடந்து சென்று பார்ப்பது வழக்கம்.

ஒருநாள் ஜந்தாறு நண்பர்கள் அவர் அருகில் நின்று எதோ பேசிக்கொண்டு அவர் காட்டும் பழைய பேப்பரைப்பார்த்துக்கொண்டு இருக்கவும் நானும் துணிந்து அருகில் சென்று நின்றுப்பார்த்தேன்.

“நானாடா பைத்தியம்?, நான் பைத்தியம் இல்ல, ஊரில் எனக்கு சொத்து நிறைய இருக்கு அதை புடுங்கிக்க பங்காளிங்க போட்டிப்போடுறானுவோ அதான் வயலோட பத்திரத்த எல்லாம் எடுத்துக்கிட்டு வந்து கோர்ட்டு வாசல்  பைத்தியம்போல உட்கார்ந்து இருக்கேன். நான் கை எழுத்து பொட்டாதானே   என் சொத்து அவனுவ பேருக்கு போகும். பைத்தியம் எப்படி  கை எழுத்துப்போடும் “ என்று பழைய பத்திரத்தை எடுத்துக்காட்டீனார். அந்தமுகம் தெரியாத அவரின் பங்காளிகள் அனைவரும் அரக்கர்களாக தெரிந்தார்கள். இவர் எப்போ வீட்டுக்குபோவர் என்று நினைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றேன்.

அவர் கோர்ட்டு வாசலில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கயைில். பின்னாளில் அவரை நினைத்துப்பார்க்கும்போது எது அவரை பைத்தியமாக வைத்திருக்கிறது? என்று வினாதோன்றியதும் அவர் கையில் வைத்திருக்கும் பழைய பையை நினைத்து நகைக்கத்தோன்றியது. தனக்கு இனி இது எந்த விதத்திலும் பயன்படாது என்பது தெரிந்தும் மனிதன் எளிதில் விடக்கூடிய ஒன்றைவிடாமல் சுமக்கும்போது குழந்தையாகி பேதையாகி பைத்தியமாகிவிடுகின்றான். மற்றவர்களுக்கு பயன்படாமல் போவது அல்லாமல் தனக்கே பயன் அற்றுப்போகின்றான். அந்த பைத்தியம்போன்ற பாதுகாவலர் அந்த பையை சுமந்து திரியவில்லை அந்த பை அவரை வகனமாக வைத்துக்கொண்டு பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவரை அடித்து நுறைத்தள்ள நுறைத்தள்ள ஓட்டிக்கொண்டு இருக்கிறது.  

//நான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடிநான் அழுவேன்நான் அழுவேன்அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.  

குபேரன் எத்தனை பெரிய குழந்தை தனமானவன் என்பதை அறியும்போதுதான் அவன் பின் ஓடும் மனம் எத்தனை குழந்தைத்தனமும் பேதமையும் உடையது என்பது தெரிகின்றது. மீண்டும் ஒரு பொற்சொற்சிலைக்கு நன்றி.

ராமராஜன் மாணிக்கவேல்