குருபூர்ணிமா அமர்வை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன், அருமையான ஒருங்கிணைப்பு, வாழ்த்துக்கள். மையக் கதாபாத்திரங்களுக்கு இணையாக பல்வேறு கதாபாத்திரங்களுக்கு அவர்களின் உணர்வுகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் வெண்முரசின் முக்கிய அம்சம். முன்பு ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன், மலைமகன் பூரிசிரவசிற்கு வியாசரும் தராத மகுடத்தை வெண்முரசில் அளித்திருக்கிறீர்கள் என்று. அங்கருக்கு இணையாக எனக்கு பூரிசிரவசையும் விரும்பத் தொடங்கிவிட்டேன். அவர் என்றல்ல, பலராமர், சுபாகு, கௌரவ இளையோன் சுஜாதன், குண்டாசி என்று ஒவ்வொருவரின் பாத்திர வார்ப்பும் தனித்தன்மையும் முழுமையும் கொண்டது. துரியோதனருக்கு இணையாக அல்லது சற்றே அவருக்கும் ஒரு படி மேலாக துச்சாதனரை மனதார விரும்புகிறேன், தான் கொண்ட அறமாக தன் வீடுபேறாக தமையனின் அருகாமையை அவர் எண்ணுவதால்.
சுயோதனரின் மதுப்பார்க்கம் அன்று, தயாராகி வெளிவந்தவுடன் கேட்கிறார், இளையோன் சித்தமாகி விட்டானல்லவா, அங்கன் எங்கே என, யோசித்துப் பார்த்தால் நூற்றியைந்து உடன் பிறந்தாருடன் வந்தவரும் பெருந்தந்தை திருதராஷ்டிரரின் முதல் மைந்தனுமான மூத்த கௌரவர் அங்கணமே இருந்திருப்பார் என்று தோன்றுகிறது.
என் தாய்மாமன், பெரிய வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் ஊரின் பெரிய பண்ணை, தன் இமேஜ் பற்றிய கவலைகளோ குடும்பப் பெருமைகள் குறித்த பிரஞ்சைகளோ இல்லாமல் வலம் வருபவர். ஆனாலும் பண்ணை அல்லவா, ஊர்ப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் பங்கு கொள்ள வேண்டி வரும், வித்தியாசமான ஊர் வேறு, ஊர் ஆண்களுக்கு முப்பத்தி ஆறுக்குப் பிறகு தான் திருமண வயதை எட்டி விட்டோம் எனத் தோன்றுமோ என்னவோ, தீவிரமாகப் பெண் பார்க்கத் துவங்குவார்கள் அது எப்படியும் நாற்பது வரை இழுத்துச் செல்லும், நடுவில் இதைத் தடுத்து நிறுத்த பதினோறு பேர் கொண்ட திருமணத் தடுப்புக் குழு வேறு தீவிரமாக இயங்கும். எல்லாம் சொந்த பந்தங்கள் தான்.
ஆக, பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமில்லாத ஊர். என் மாமாவும் பஞ்சாயத்து பல கண்டவர், இதில் அனுபவம் கூடக்கூட அவரைப் பற்றி வெளியே சித்திரம் ஒன்று உருவாகி விட்டது. மாமனைப் பஞ்சாயத்துக்கு அழைப்பவர்கள் சோற்று நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டே அழைப்பார்களாம், இந்த கிமு கிபி மாதிரி நம்ம ரங்கசாமிக்கு சோ.மு சோ.பி அதாவது சோற்றுக்கு முன் சோற்றுக்குப் பின், பசி நேரம் வந்து விட்டால் அவருக்குப் பத்தும் பறந்து விடுகிறது. தீர்ப்பை தன் முன் வரும் முதல் வாதத்திற்கே விட்டுக் கொடுத்து விடுகிறார், இதனால் எதிராளிகள் பயனடைந்து விடுவதாகக் குற்றச்சாட்டு.
எனக்கு பலராமரை இவருடன் தான் ஒப்பிடத் தோன்றும், வாரணவதத்திற்குப் பிறகு அஸ்தினபுரியில் கூடும் அவைக்கு இளைய யாதவருடன் வரும் பலராமர் அவ்வாறாகவே நடந்து கொள்கிறார், இன்னும் எவ்ளோ நேரம் தாண்டா ஒண்ணுமில்லாத (?) விஷயத்தையே பேசுவீங்க? எனக்குப் பசியே வந்துவிட்டது. வெண்முரசில் வெடித்துச் சிரித்த தருணங்களில் அதுவும் ஒன்று.
பலராமருடன் இது போன்று பல நுண்ணிய சந்தர்ப்பங்கள் உண்டு, திரௌபதியின் மணத்தேற்பு நாளன்று மன்னர்களின் வாயிலைத் தவற விட்டுவிட்டு சூதர்களின் வாயிலில் நுழைந்து விட்டு சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்.அப்புறம் இந்த அஸ்தினிபுரி என்ன விலை, இந்தத் தெரு என்ன விலை என்னும் ரேஞ்சில் :) இதே போன்றதொரு இன்னொரு பாத்திரம் பூரிசிரவசின் மூத்த சகோதரன் பூரி; இங்கு அஸ்தினபுரியின் ஒற்றர்கள் உள்ளார்களென சலன் வெகு தீவிரமாக நம்புகிறான், நான் சொன்னேன், இப்படி ஒரு நாடு உள்ளதென்று கண்டு பிடித்துச் சொல்லவே ஒரு ஒற்றர் படை அஸ்தினிபுரிக்குத் தேவை என்று :)
எண்ண எண்ண மனதில் விரியும் கதாபாத்திரங்கள், வாழ் நாள் முழுவதும் அசைபோடப் போதுமான தருணங்கள், இனி எதைப் பற்றிக்கொண்டு இதை விடுவதோ மலைப்பாக இருக்கிறது. எங்களை விடுங்கள், முதாலாவிண் முடிந்ததும் நான் மீண்டும் முதற்கனலுக்கோ வண்ணக்கடலுக்கோ ஓடிவிடுவேன், நீங்கள் எதைப் பற்றிக்கொள்வீர்களோ.
நன்றி சார்
சிவா.