Tuesday, November 8, 2016

பகுத்தலும் தொகுத்தலும் (கிராதம் - 5 )


           பெரியமலையை  பகுத்து பாறைகளாகக்கண்டு  பாறைகளை பகுத்து துகள்களாக்கி, துகள்களை பகுத்து மூலக்கூறுகளாக்கி மூலக்கூறுகளை பகுத்து அணுக்களென அதன் பின்னர் அணுக்களையும் பகுத்து அணுத்துகள்களென அப்புறம்  அவற்றையும் தொகுத்து துணை அணுத்துகள்களென நுணுகி நுணுகி சென்றுகொண்டிருக்கும் ஆய்வு இறுதியாக  எதை நமக்கு கண்டுபிடித்துக் கொடுக்கும்?    விதைகளில் தொடங்கி, விருட்சங்கள், அவை இருக்கும் வனம், அவற்றைக்கொண்டிருக்கும் மலைகள், அவற்றை தாங்கிநிற்கும்  இந் நிலம், அது மிதந்துகொண்டுஇருக்கும்  பூமி, அதைக் கொண்டிருக்கும் ஞாயிற்றுக் குடும்பம், அது சிறு துகளென இணைந்திருக்கும் பால்வீதி யெனும் இந்த அண்டம், இப்படி பலகோடி அண்டங்களை தன்னுள் கொண்டிருக்கும் பேரண்டம் எனச் விரிந்து விரிந்து செல்லும் ஆய்வில் முடிவாக  நாம் கண்டுகொள்ளப்போவது எதை?

           தன்னுள் எழும் உணர்வையெல்லாம் பகுத்து இது  உண்மையல்ல இது உண்மையல்ல என விலக்கி விலக்கி தன்னுள் ஆழ்ந்து ஆழ்ந்து  சென்று அடையக்கூடியது எது? தான் காணும் உணர்வுகளைமட்டுமல்லாமல்  உலகின்  மற்ற அனைவரின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டு அவற்றை தனதெனக் கொண்டு, மேலும் மேலும் என அனுபவங்களை காவியங்களில் பெற்று மனிதனாக மட்டுமல்லாமல், தாவரமாக, விலங்காக பறவையாக, பேயாக, முனிவராக,  தேவர்களாக வாழ்ந்தலைந்து ஒருவன் அறிந்துகொள்வது எது?

           மனதில் எழும் ஒவ்வொரு சிந்தனையையும்  புறந்தள்ளி புற்றீசல் போல் எழும் எண்ணங்களையெல்லாம் விலக்கி விலக்கி ஒருவன் சென்று சேரும் இடம் எவ்விடம்? தன்னுள் தோன்றும் அனைத்து எண்ணங்களையும்  ஆய்ந்து ஆய்ந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து மற்றவர்களின் எண்ணங்களையும் ஆய்ந்து அவற்றின் பொருள்கொண்டு  அறிந்துக் செல்லும் பயணம் ஒருவனை எங்குகொண்டு சேர்க்கும்?

       தன் ஆடைகளை நீக்கி, அணிகலன்களை நீக்கி, தன் அகங்காரத்தை, அழகுணர்வை, கலையுணர்வை, ஆசையை, காமத்தை, புகழை யெல்லாம் வேண்டாம்  வேண்டாம் என விலக்கி செல்லும் ஒருவன் எதை அடைகிறான்? அது வென்ன இதுவென்ன என ஆய்ந்து  அவற்றையெல்லாம் அடைந்து அல்லது மனதளவில்  அவற்றை அடைந்ததான உணர்வினைப்பெற்று அந்த நிறைவில் ஒருவன் காண்பது எதை?

        தன்னை சுற்றியிருக்கும் சூழலிலிருந்து, மனிதர்களிடமிருந்து, உறவுகளிடமிருந்து விலகி விலகி சென்று, பின்னர் தன் உடலிலிருந்தும்  தன்னை பிரித்துக்கொண்டு,  தான் எனும் உணர்வையும் தமது என்ற பந்தங்களையும்  தவிர்த்து ஒருவன் தன்னந் தனியனாக தேடிச்சென்று   எதைப் பெற்று க்கொள்கிறான்?   தன்னை  தன் உடலையும் தாண்டி, மனைவி மக்கள் உறவினர் என அறிந்து, பின்னர் மனித குலம் முழுமையும்,  பிறகு மொத்த உயிர்குலமும் தானென விரிந்து விரிந்து சென்று,  தேடுபவன்  எதைப் பெற்றுக்கொள்வான்?

        தன்னை இன்மையாக்கிக்கொண்டே செல்பவனும் தன்னை முழுமைபடுத்திக்கொண்டே செல்பவனும்  சென்றடைபவை எவை? இரு எதிர் திசைகளில் முடிவிலி தூரம் பயணிக்கும்  அவர்கள் எதைச் சென்று காண்பார்கள், அங்கு எதைப் பெறுவார்கள், அப்போது என்ன உணர்வார்கள்?  எட்டு திக்கும் மதகரிகளென எழும் காரிருளை  கிழித்துச் சென்று  காண்பது  இன்மையின் பேரிருப்பையா அல்லது விழிகளை கூசவைத்து மறைக்கும் ஞானப்பேரொளியைத் தாண்டி காணும்  முழுமையறிவின் பேரின்மையையா?
   
        அல்லது அவர்கள் இருவரும் சென்றையும் இடங்கள்,   இருவர் அடையும் உச்சங்கள்  ஒன்றுதானா?  விண் மண் நிறைந்து உயர்ந்தோங்கி நின்ற ஈசனின் அடியைத் இதுவல்ல இத்வல்லை என்றப்டி தோண்டி தோண்டி சென்றயை முயல்பவனும் மேலே மேலே பறந்து சென்று இதுவும் இதுவும் என தன் பார்வையை தொகுத்துக்கொன்டே  போய் ஈசனின் முடியைக் காண முயல்பவனும் கண்டடைவுது ஒன்றுதானா?  அதை ஒருவன்  அறியும்போது அவனே  சிவமென ஆகி நிற்பான்  போலும்.

தண்டபாணி துரைவேல்