இனிய ஜெயம்,
நீலத்தில் சிறையில் நீலனின் அன்னை அடையும் துயர். அதற்க்கு சற்றும் குறையாத தீவிரம் கொண்டது ஜாதவேதன் மனைவியின் துயர். நீலன் கம்சனை கொல்கிறான். கொல்லப்பட வேண்டியவனை கொன்று குலப் பழி ஏற்கிறான். கம்சனுக்குத் துணை நின்றது அறமற்ற வேதம். இதிலிருந்து புறப்பட்ட நீலன்தான் ஜாதவேதனை கை விடுகிறான்.
ஜாதவேதனின் மனைவி கருப்பைக்கு எதிர் நின்றது அன்பற்ற வேதம். அதை எதிர்த்தே அர்ஜுனன் யமபுரி நுழைகிறான். யமனைக் கண்டு மீண்ட காளாமுகரை மோதி மிதித்து யமபுரிக்கு அர்ஜுனன் வழி கேட்கையில் இவன்தான்யா நாயகன் என மனம் துள்ளியது.
சம்பந்தமே இல்லாமல் மூர்க்க நாயனார், பிள்ளைக் கறி கேட்ட நாயனார் கதை எல்லாம் மனதில் தோன்றியது. இந்த இருளெதிர்வர்களை சக்கரைப் பொங்கல் தின்ன வைப்பதற்கும் சேக்கிழார்ருக்கு நாக்கு தள்ளி இருக்கும்.
யமபுரியின் வர்ணனை மிக மிக அமானுஷ்யம் கூடியது. குழந்தைகளின் சிதறிய உடல்களால் ஆன இருக்கையில் அமர்ந்து அர்ஜுனன் தர்மனின் வெட்டுண்ட தலையில் இருந்து வரும் குருதியை அருந்துகிறான். மாந்தாதாவின் தனிமை, மாந்தாதாவின் துயர்.
தயங்க வைக்கும் ஏழு அடிகளையும் சொல்லிச் சொல்லி கடக்கிறான். நரக உலகின் பொர்க்கதவம் திறக்கிறான். அர்ஜுனன்.
அமானுஷ்ய ஓவியம். இன்றிரவு துர்க்கனா நிச்சயம்.
கடலூர் சீனு