Sunday, November 6, 2016

தேவியர்





சொல்லை ஒரு கடலாக்கி அலையடிக்க வைக்கின்றீர்கள், அதன் ஒரு அலையில் இருந்து ஒரு கடல் எழவைக்கின்றீர்கள். கடல் அ்லை, அலைக்கடல் என்று விரிந்துப்போகும் கிராதத்திற்குள் நீந்துவது பெரும் மனவிரிவை அளிக்கிறது நன்றி. வாக்தேவி வரும் இடத்தில் இந்த மகத்துவம் கூடுவது வாக்தேவியின் வடிவான அன்னை கலைவாணியின் திருவருள் என்று உணர்கின்றேன். நீங்கள் சொல்வதுபோல அவள் பெரும்மோகினிதான். நிலமகளின் மோகினித்தனம் குருதியோடு கூடிய கனத்தையும் அலைமகளின் மோகினித்தனம் அணிமணியோடுகூடிய கனத்தையும் அளிக்கின்றது என்றால் கலைமகளின் மோகினித்தனம் கனம்இல்லா பெரும் கனத்தைத்தருவதால் எல்லை இல்லா வெளியில் தனது மோகினித்தனத்தை காட்டி நடிக்கின்றாள். அவள் மலர் பாதம் வாழ்க! என்றும் அவள்பாதம் நம்மின் பாதையாகுக. 

அன்னை வாக்தேவிச்சொல்வதுபோல அவள் முலைகள் என்றும் வற்றுவதும் இல்லை, அவள் முகம் சுளித்து மகன் வளர்ந்தவன் என்று முலைக்காம்பில் வேம்பறைத்துப் பூசுவதும் இல்லை. அவள் பூசும்வேம்பும் பாலென்று அமுதென்று இனிக்கும் உயிர்வளக்கும் என்றால் யார் என்ன செய்யமுடியும். ஆனால் அவள் தரும்பால் செறிக்காதபோது பசிக்காமல்போகிறது பசிக்காமல்போகும்போது அவள் பால் வெறுப்பாகப்போகிறது அங்கு உள்ளம் உயிர் அறிவு மெய்மை வாடி பாலையாகிறது. சகலகாலவல்லியின் வடிவும் வளமையும் தெய்வீகமும் எத்தனை உயரத்தில் வைக்கப்படுகிறது. அவளுக்கு கால்மேல் கால்போடும் தகுதி இருக்கிறது என்பதை காட்டுகின்றீர்கள் ஜெ.


கண்டு கேட்டு உண்டு முகர்ந்து உணர்ந்து மனிதன் அடையும் அனைத்தும் நொடி நொடி என அழியும் அழிவின்மைகள் மட்டும்தான். நொடி நொடியாய் அழியும் அழிவின்மையில் இருந்து தப்பிக்க நினைக்கும் மனிதன் அழியா பெரும் அழிவின்மையை கனவுக்கான்கின்றான். அதை அடைய ஒவ்வொன்றாய் துறந்து அதையும் அடையும் கணத்தில் அப்படி ஒன்று இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என்ற சமநிலைக்கு வருகின்றான். அந்த சமநிலையில் நின்று நொடி நொடியாய் அழியும் அழிவின்மைகளை அழியாநிலையில் நிறுத்தி  வைக்க நொடிகளை நொறுக்கி காலவெளியை கடக்கிறான். அங்கு அழியும் அழிவின்மைகளை அழியா அழியா அழிவின்மைகள் என்று கண்டு ஆனந்த அலையில் மிதக்கிறான். அங்கு பசிதரும் ருசி ஆனந்தம், காமம்தரும் உணர்வானந்தம், சொல்தரும் பொருள் ஆனந்தம், திருதரும் உருவானந்தம். கிராதை தரும் எல்லையின்மை ஆனந்தம்.  

அர்ஜுனன் உடலின்சுவையான  ஜடரையை, உயிரின் சுவையான காமினியை, சித்தத்தின் சுவையான வாக்தேவியை, ஆற்றலின் சுவையான ஜஸ்வரியை, அகத்தின் சுவையான கிராதையை துறந்து துறந்து ஆறுமலைக்கடந்து ஏழாவது மலையில் பாழ்வெளியில் நிற்கும்போது அவன் இழந்துவந்தவைகளின் அழிவின்மையை மேன்மையை கண்டு திரும்பிவருகின்றான். வரும்வழியில் கழட்டிப்போட்ட ஆடைகளை ஒவ்வொன்றாக மீண்டும் எடுத்து அணிவதுபோல அவன் துறந்த ஒவ்வொன்றையும் எடுத்து அணிகிறது உயிர். உயிர் தான் துறந்த ஐந்தைவிழைகிறது. துறக்கப்பட்டாதால் அந்த ஐந்தும் ஒரு உயிரை விரும்புகிறது.  

அர்ஜுன்ன் ஜடரையை அணியும்போது எல்லாம் மகவென்று நிற்கின்றான். காமினியை அணியும்போதெல்லாம் காளை என்று நின்றின்றான். வாக்தேவியை அணியும்போதெல்லலாம் பக்தன் என்று நிற்கின்றான். ஜஸ்வரியை அணியும்போது எல்லாம் ஆற்றல் என்று தோழன் என்று நிற்கின்றான் கிராதையை அணியும்போது மட்டும் வேண்டாமென்று விரும்புகின்றான். அதுவே அவனை அந்த கணத்தில் இல்லை என்பது இல்லை என்றும் இருக்கு என்பதும் இல்லை என்றும் ஆக்குகிறது. அதனால்தான் கிராதத்தன்மையே மற்ற நால்வரையும் அடைய அடித்தளமாக இருக்கிறது. கிராதத்தைப்பற்றும்போதும் துறவறத்தைப்பற்றும்போதும் இருக்கும் ஒரே பதுமைநிலை. 

கிராதத்தைப்பற்றிக்கொள்வதும் துறவறத்தைப்பற்றிக்கொள்வதும் மண்ணும் விண்ணும் என காட்சி அளிக்கிறது. மண்மீதுதானே விண்ணும் கிடக்கிறது. கண்ணனும் நேமிநாதரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அர்ஜுனன் விண்ணில் நேமிநாதரை விட்டு மண்ணில் கண்ணனை வந்து பற்றும் இடம் புரிகின்றது  ஜெ. நேமி நாதரும் கண்ணனும் தூரத்தில் இல்லை பற்றும் அர்ஜுனன்தான் அவர்கள் இடையே தூரம் இருப்பதாக காட்டுகின்றான். கிராதமும் துறவறமும் தூரத்தில் இல்லை பற்றிக்கொள்ளும் மானிடர்தான் அதை தூரமாக காட்டுகின்றார்கள். 

சிவன் ஏன் பிச்சாடனாக இருக்கிறான், நாராயணன் ஏன் பட்டுபீதம்பரியாக இருக்கிறான் என்பது தெரிகிறது ஜெ.

ஜடரையின் தங்கை காமினி, ஜடரை ஒருவனுக்கு அன்னையாகிறாள் காமினி  அவனுக்கே மனைவியாகிறாள். 

அர்ஜுனன் இடம் அக்காவின் குழந்தையை கொண்டுவந்து கொடுத்து ஆசிவாங்குவதுபோல் காமம் கொள்ளும் ராதைதான் அர்ஜுனனுக்கு இடக்கையால் காண்டீபம் கொடுக்கும் அன்னையாகிறாள். 

பெண்ணே அன்னையே உனக்கு இரண்டு முகம் இல்லை, நீ இரண்டு முகம் காட்டும் பிரக்ஞாதேவி. 

ராமராஜன் மாணிக்கவேல்