Sunday, February 5, 2017

இருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)


ஒருவர் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியுமா?  என்றென்றும் எவ்வித வேறுபாடும் இல்லாது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தபடி ஒருவனால் இருக்க முடியுமா?  ஆனால் நாம் அடைந்திருக்கும் அறிவு நம்மை அப்படி சும்மா இருக்க விடுவதில்லை.   இருத்தல் மட்டுமே என்பது வெறுமையான   ஒன்றாக தெரிகிறது. அதன் காரணமாக இருத்தலின்பம் சலிப்பூட்டுவதாக மாறுகிறது.  ஆழ்கடலில் மீன் பிடிக்க தூண்டில் முள்ளில் இரையெதுவும் பொருத்தப்படவேண்டியதில்லை, சலிப்புற்றிருக்கும் மீன் அதுவாகவே வந்து தூண்டில் முள்ளை கவ்வி மாட்டிக்கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மனிதனும் தன் வாழ்வெனும் கடலில் சும்மா இருத்தல் என்பது மிக மிகச் சலிப்பூட்டும் ஒன்றாக காண்கிறான். ஆதலால் ஏதேனும் புதிதான ஒரு செயலை கவ்விக்கொண்டு தன் சலிப்பை வெல்ல முயல்கிறான்.     புதிது புதிதாக ஒன்றை கற்பித்து அதற்கான தேடலில் ஈடுபடுகிறான். ஒன்றும் செய்யாது இருப்பவர்கள்கூட தன் மனதில் தேடி அடைவதான கற்பனை சுகங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். வெறும் இருத்தல் மட்டுமேயான அனுபவத்தின்மீதான சலிப்பு மனிதனுக்கு குண மாறுபாட்டை உருவாக்குகிறது.  அது மனிதனை உந்தி செயலில் ஆழ்த்துகிறது. அந்த விசையை சரியான வழியில் பின்படுத்திக்கொள்பவர் செயல் வீரர்களாக ஆகிறார்கள். இருக்கும் நிலையில் சலிப்படைந்து அடுத்து அடுத்து என தேடலில் செல்பவர்கள் இவ்வுலகை முன்னடத்திச் செல்கிறார்கள்.   இந்த உன்னத சலிப்பின் காரணமாகவே கலைகளில் அறிவியலில், மனிதன் முன்னேற்றமடைகிறான். அவர்களின் மனச்சலிப்பை போக்கிக் கொள்ளும் அறிவுச் செயல்பாடுகளால் புதிய  தத்துவங்கள் பெருகுகின்றன.  இது சத்துவ குணம் ஓங்கியவர்கள் செய்வது.  சிலர் தன் அகங்காரத்தைப் பெருக்கி அந்த சலிப்பை வெல்ல முற்படுகின்றனர். அவர்கள் தம் ஆசைகளை பெருக்கிக்கொண்டு அவற்றை நிறைவேற்ற முயல்கின்றனர். பிறர் மேல் கோபத்தைப் பெருக்கிக்கொண்டு  அவர்களுக்கு தீங்கு செய்ய  எத்தனிக்கின்றனர்.  மோகத்தை பல்வேறு விதங்களில் விரித்து  பெருக்கி அதில் ஈடுபடுகின்றனர் . அந்த அகங்கார வீக்கத்தால் விளைவதே காம குரோத மோகம் போன்றவை.   ராஜச குணம் கொண்டவர் சலிப்பை வெல்ல இவ்வாறு  செயல்படுகின்றனர்.  தன் சலிப்பை தன் சோம்பலால், போதையில் மூழ்குவதால், ஊக்கமின்மை கொண்டு  முயலாமையால் அடக்கிக்கொள்பவன் தாமஸ குணத்தினன் என அறியப்படுகிறான்.

இருப்பதன் சலிப்பே மனிதனை காமம் குரோதம் மோகம் மூன்றுக்கும் அழைத்துச் செல்கிறது. சலிப்பின்றி இருக்கத் தெரிந்தவன் யோகி. சித்தமடக்கி சொல்லற சும்மா இருத்தலே யோகம் என்கின்றனர் முனிவர். ஒவ்வொரு ஒலித்துளியாலும் அச்சொற்களை இங்கு நான் முழுதுணர்கிறேன்” என்றார் தருமன்.

 
    இருத்தலின் இன்பத்தை அனுபவித்தல் என்பது ஒரு கலை, ஒரு  தியானம். இதை இடைவிடாது அனுபவித்தலே யோகியர் நாடும் ஆனந்தம்.  ஆனால் நம் அறிவு அடுத்து என்ன அடுத்து என்ன என்று நம்மை செலுத்திக்கொண்டே இருப்பது. அறிவு நம் நிறைவை குலைத்து இப்போதைய இருப்பில் சலிப்பை உண்டாக்குகிறது.  இருத்தல் ஒன்றையே அனுபவிப்பது என இருக்கும் உயிர்கள்,  தாவரங்கள்  ஆகும். ஒரு பெரிய மரத்தை கவனிக்கையில்  அது இடைவிடாது தன் இருத்தலை அனுபவித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நிதானமாக நடந்துபோகும் எருமை மாடு ஒருவேளை இருத்தலின்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். ஆனல் நாம் அவற்றை அற்ப உயிர்களெனக் கொள்கிறோம்.  அவற்றைவிட நாம் இன்பமான வாழ்வை வாழ்கிறோம் என்பது எப்படி சொல்லமுடியும்? உயிரோடு இருத்தலே இன்பமென வாழ்வது யோகியரின் இயல்பு.  இரமணர் சொல்வார் அனைத்து உயிர்களின் விழைவு சுகமாக இருத்தலே.  நாம் சுகமாய் இருக்கும் வழி தேடியே அறிவியலில் ஆயிரம் கண்டுபிடிப்புகளும் ஆன்மீகத்தில் ஆயிரம் தத்துவங்களும் தோற்றுவிக்கப்பட்டு பயிலப்படுகின்றன.  சுகமாய் இருத்தல்தான் நோக்கம் என்ற போதிலும் முதலில் எது உண்மையான சுகம் என அறிதல் முக்கியமானது.  நம் உடலில் அரிப்பெடுக்கும்போது சொறிந்துகொள்ளுதல் சுகமாக இருக்கிறது.  அதனால் சொறிந்துகொண்டிருப்பது சுகமாய் இருப்பதற்கான வழி என்று கூற முடியுமா?  ஆகவே சுகத்தை தேடி அடைய  முயல்வதற்கு முன் உண்மையில் சுகம் என்பது என்ன என்று அறியவேண்டியிருக்கிறது.  அரிப்பு எடுப்பதற்கு முன் இருந்த நிலைக்கு நாம் திரும்பிச்செல்ல சொறிதல் தேவைப்படுகிறது.   அரிப்பெடுப்பதற்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்று சிந்தித்துப்பார்த்தால்,  சும்மா இருந்தோம். ஆம் உண்மையான சுகம் என்பது சும்மாயிருத்தலே.  நம் மனம்,  உடல் தன் இயல்பில் திரிந்து போகும்போது நாம்  மீண்டும் அந்த இயல்பு நிலைக்கு திரும்ப  விழைகிறோம்.   மீண்டும் அந்த நிலையை அடையும் நிகழ்வையே சுகம் என நினைக்கிறோம். இப்படி மனம் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுபடுவதுவும் திரும்பவிழைவதுமான ஊசாலாட்டத்தில் இருப்பதைத் தவிர்த்து எப்போதும் தன் இருத்தலில் லயித்து இருப்பதே ஞானியர்  இலக்கு.  இப்படிச் செல்லும் பயணத்தின் முடிவில் காமம் பசி தூக்கம் போன்றவை உருவாகும் உடல்கூட ஒரு உறுத்தல் என ஆகி அதையும் நானல்ல எனக் கடந்து தன் இருத்தல் உணர்வை மட்டுமே அறிந்திருக்கும் நிலையே பரமானந்தம். இந்த ஆனந்த நிலை என்பது நாம் அடைவதற்கு அரிதான ஒன்றல்ல.  இதை நாம் அன்றாடம் நம் வாழ்வில் ஓரிரு மணித்துளி கால அளவிற்கு அனுபவிக்கிறோம். கடும் வெயிலில் இருந்து நிழலிலில் சேரும் அந்த பொழுதில்,  கடும்தாகத்தில் தவித்து பின் நீர் கிடைத்து அருந்தும் அந்த நிமிடத்தில் நாம் அந்த ஆனந்தத்தை உணர்கிறோம். நம் இயல்பு தவறி இருந்து நம் உண்மை இயல்புக்கு திரும்பும் பொழுதெல்லாம் நாம் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.  மோக உணர்வு போன்றவை நம் மனதின் இயல்பையும் பின்  உடலின் இயல்பையும் குலைக்கின்றது. அதனால் ஏற்பட்ட  உந்துதல் தனிந்து தன் இயல்புக்கு திரும்பும் அந்த நொடிப்பொழுது சுகம் நம் தூய இருப்பை அறியும் தருணம் ஆகும்.   ஆனால் இருப்பில் லயிக்கும்  நிலையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் நம் மனம், புத்தி,  சித்தம்,  அகங்காரம்   தடுக்கிறது.  சித்தர்கள் இவற்றை அடக்கி அல்லது அழித்து  எப்போதும் சும்மா  இருந்து,  இருத்தல் இன்பத்தை இடையறாது  அனுபவிக்கின்றனர்.  அவர்கள் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் அவர்கள் உள்ளம் சும்மாயிருந்து சொல்லற நிற்கிறது.  ஆக ஒருவர் சொற்களாலான அனைத்து தத்துவங்களையும் பயின்று  அறிந்து ஆய்ந்து தெளிந்து முடிவில் அடைய நினைப்பது அனைத்து சொற்களும் அற்று மனம் சும்மா இருக்கும் நிலைதான் என ஆவது வியப்பான ஒன்றல்லவா? 

தண்டபாணி துரைவேல்