Wednesday, February 22, 2017

மாமலர் – திரௌபதி



மாமலரின் முதல் பெரும் ஆச்சரியமே தன் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் திரௌபதி தான். திரௌபதியை ஓர் இல்லத்தரசியாகக் காண்பது குறித்து வந்த பதிவுகளில் சில அவள் இதில் தான் மகிழ்வுடன் இருக்கிறாள் என்னும் தொனியில் இருந்தன. உண்மையில் திரௌபதியின் இந்நிலை குறித்து சொல்வளர்காட்டின் இறுதியிலேயே வந்துவிட்டது. அவள் தன் அன்றாட அலுவல்களில் பிழையின்றி முழு மனதுடன் ஈடுபடுவதன் மூலம் தன்னை முற்றிலுமாக ஒளித்துக் கொண்டுவிடுகிறாள். பாண்டவர்களுக்கு அவள் அவ்வாறு இருப்பதன் பின் உள்ள வஞ்சம் தெரிந்திருந்தாலும், அவள் மகிழ்வுடன் இருப்பதாகவே எண்ணத் தலைப்படுகிறார்கள். முக்கியமாக பீமன் அவ்வாறே எண்ணுகிறான். அங்கே அவளுக்கு அணுக்கமானவனாக அவனே இருக்கிறான்.

அதையே அவன் புரூவரசுடன் காதலாடி, காமமாடி, அன்னையாக மலர்ந்து வாழ்ந்த ஊர்வசியின் உருவில் காண்கிறான். தன்னைப் பிரிந்து சென்ற ஊர்வசியின் நினைவால் அவளை முதலில் சந்தித்த சோலைக்கே மீண்டு வரும் புரூவரஸ் தன்னை பீமனாக உணரும் இடத்தில் பீமன் மீது பரிதாபமே வந்தது. மிகச் சரியாக ஊர்வசியைச் சந்தித்த தருணத்தில் அவன் அறிந்த அதே மணம், திரௌபதியை அறிந்த நேரத்தில் பீமன் உணர்ந்த அதே மணம். ஆம், இதே திரௌபதி தானே அத்தகைய பெரும்போரையும் நிகழ்த்த அச்சாக இருக்கப் போகிறாள். அங்கே தெரியப்போகும் திரௌபதி இவன் இப்போது அறிந்தவளுக்கு முற்றிலும் மாறான ஒருத்தி. ஆயினும் அவளும் இவளே. இரு நிலைகளும் பாரிஜாதமோ, செண்பகமோ எனக் கிறங்க வைக்கும் ஒரே மாமலரின் ஒரே மணம் போன்றவையே.... ஆம், அந்த மாமலர் திரௌபதியே. அவளின் வெளிப்பாடுகளே அந்த கலவையான, இருப்பினும் தனித்துவமான மணம்!!!

திரௌபதி என்று வருகையில் வெண்முரசு தனித்துவமான படிமங்களைத் தெரிவு செய்து விடுகிறது. பிரயாகை என ஐவரும் கலக்கும் கங்கா பிரவாகமாக பாஞ்சாலியை உருவகித்த வெண்முரசு இப்போது அவளை யாரும் அறியாத, தனித்துவமான மாமலராகவும் படைக்கிறது.

அருணாச்சலம் மகராஜன்