Tuesday, February 7, 2017

எண்ணமும் இயல்பும்
மணலுடன் வறுபடும் கடலையை சலிப்பானில் சலித்து ஒரு கணம் மேலே வீசு எறிந்து பிடிக்கும்போது, சூடுப்பட்ட ஒவ்வொரு கடலையும் காற்றின் குளிச்சியில் சிலிர்ப்பதுபோல பாண்டவர் வாழ்க்கையில் அந்த குளிர்ச்சி தருணம் வந்து வாய்த்து உள்ளது. 

மாமலர்த்தோட்டத்தின் அன்பு என்னும் குளிர்க்காற்று அவர்கள்மேல் படுகின்றது. எத்தனை எளிதாக ஆனந்தமும் அற்புதமும் அவர்களுக்குள் நுழைந்துவிட்டது.

தருமனும் திரௌபதியும் அந்த கணத்தில் அன்னை தந்தையாய் ஆகி மலர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் பெற்றெடுத்த அன்னைதந்தையில்லை. அன்னைதந்தை என்று  வாழும் கணத்தால் ஆனவர்கள்.

விளையாடி வீடுவரும் மைந்தன் வயிற்றுக்காகவும் நலனுக்காகவும் காத்திருக்கும் அன்னைதந்தை போன்றவர்கள். பீமன் பெரும் குழந்தையாகி நிற்க. தருமன் கண்ணெறு கழிக்கும் தந்தையாக. திரௌபதி குழல்நீவி குளிப்பாட்டும் அன்னையாக 

வாழ்ந்துக்காட்டுகின்றார்கள். . அன்னைதந்தையின் நலனில் நினைவுக்கொள்ள நேரம் இன்றி பக்குவம் இன்றி சுவையில் கவனம் கொள்ளும் குழந்தையாக பீமன் இருப்பதுதான் எத்தனை இயல்பானது. வாழ்க்கை இப்படியும் வண்ணம் மாறக்கூடியது. இந்த வண்ணம் வருவதற்கு எத்தனை சிடுக்குகளில் நுழைந்து வெந்து நொந்து வெளிவரவேண்டி உள்ளது. ஆன்மா பக்குவப்பட மீண்டும் மீண்டும் பிறக்கிறது.ஆன்மாவிற்கு அந்த பக்குவத்தை பரம்பொருள் காலத்தின் வழியாக ஊட்டுகிறது.

மனிதனின் இயல்பு என்னவென்று அறியும்வரை அவன் தான் எண்ணுவதையே தான் என்று நினைக்கிறான். எண்ணுவது இயல்பாக இருக்கவேண்டி அவசியம் இல்லை. ஒரு யானை ஒரு மரத்தின் கிளையில் ஊஞ்சல் ஆட எண்ணுவது இயல்பு அல்ல ஆனால் அந்த யானையின் இயல்பால்  பல மரம் அதன் துதிக்கையில் உலாபோகும்.

பாண்டுவைப்பார்த்து வளர்ந்து தந்தையின் அடிப்பற்றி முனிவன்போல இருக்க தருமன் எண்ணினாலும் அவன் இயல்பு முனிப்போன்று தனித்து இருப்பது இல்லை, திருதராஸ்டிரன்போல தந்தை என்று இருப்பது அவன் இயல்பு. காலம் வாழ்க்கை அவனுக்கு அதை ஊட்டுகின்றது அதை முழுதறிகின்றான் தருமன்.

//“இளையோரேஒரு முனிவனென்று என்னை எண்ணிக்கொள்ள எப்போதும் விழைந்து வந்திருக்கிறேன்இன்று நான் அடைந்த மெய்யறிதலென்பது ஒன்றேநான் முனிவனல்லஎன் இளையோர் மீதான அன்பிலிருந்து எனக்கு விடுதலை இல்லைஅது என் தளையல்லஅணி என உணர்ந்ததே என் வீடுபேறு” என்றார்.//

திரௌபதியும் தன்னை யானைகளை கொன்று தின்னும் பெரும் சிம்மம் என்றுதான் இதுவரை எண்ணினால், அந்த எண்ணமே அவள் இயல்பு என்று எண்ணி இருந்தால் ஆனால் அவள் இயல்பு குட்டிகளை ஈன்று அதற்கு உணவூட்டும் சிம்மம் என்று கண்டுக்கொள்கிறாள். இந்திரபிரதஸ்தமும் அஸ்தினபுரியும் அவளுக்கு இன்று வேட்டையாடிய காடுமட்டும்தான், இந்த கோமதிவனம் காடுதான் அவளுக்கு சொர்க்கம்.

குண்டன் காலமாகிய ஏட்டை புறட்டும்போது இந்திரபிரதஸ்தத்தையும் அஸ்தினபுரியையும் பற்றி அறிய திரௌபதி மறுப்பது இன்றைய தாய் உள்ளத்தால். காலத்தின் இயல்பால் தாயே போர்க்கலத்திற்கு போகின்றாள் பிள்ளைகளின் வழியாக. முண்டன் அதை கால ஏட்டை புறட்டிபார்த்து சொல்வது எண்ணுவது இல்லை அதுவும் இயல்பானதுதான்.

மனிதன் எண்ணத்திற்கும் இயல்புக்கும் இடையில் கிடந்து அடிப்பட்டு ஒலி எழுப்பும் குடுகுடுப்பை மட்டும் ஆனால் காலம் மட்டுமே இயல்பானது. அதை முண்டன் வழியாக இயல்பாக நகைச்சுவையாக வாழ்வாக சுவையாக எதிர்ப்பார்ப்பாக அச்சமாக கண்ணீராக சிரிப்பாக புறட்டுக்காட்டுகின்றது மாமலர்.  காலம் மட்டுமே இயல்பானது என்பதை முண்டனின் இந்த வரிகள் நிலைபெறவைக்கின்றன. இயல்பு எளிதனதுதான் ஆனால் எத்தனை கனமானது.
//“பாண்டவனே கேளாய்… அறநிலையாகி குருநிலையில்..” என்று சொன்னபடி போனான்.//
சகதேவன் காலத்தின் இயல்பில் உள்ள கனத்தை அறிந்தவன் அதனால் வேண்டாம் என்கிறான். திரௌபதி காலத்தின் இயல்பில் உள்ள கூர்மையை அனுபவித்தவல் அதனால் வேண்டும் என்கிறாள். 

வேண்டாம் என்றாலும் காலம் இயல்பானது.

ராமராஜன் மாணிக்கவேல்.