Friday, February 10, 2017

கீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)



    
 
    மலையிலிருந்து கீழிருக்கும் ஊரை பார்க்கும் போது முழு ஊரும் கண்ணுக்கு தெரியும். தெருக்கள் வீடுகள் குளங்கள் என ஒன்று விடாமல் தெரியும். நடமாடும் மனிதர்கள் மாடுகள் எல்லாமும்  கூட தெரியும். அனைவரும் ஒரு மைதானத்தில் கூடினால்  அங்கிருப்பவர்  எத்தனபேர் என்று கூட தெரிந்துகொள்ளலாம்.  ஆனாலும்  அது முழுமையான பார்வையாகாது.  அங்கிருந்து பார்க்கும் போது அனைத்து கட்டிடங்களும் ஒரே உயரம் அனைத்து மனிதர்களும் சம அளவில் ஆனவர்கள் எனத்தோன்றும். அந்த உயரப் பார்வையில் ஏற்றத் தாழ்வுகள் வேறுபாடுகள் தெரிவதில்லை.   தருமனைப்போல   உயர்ந்த உள்ளம் கொண்டவர் பார்வைக்கு மனிதர்கள் அனைவரும் ஒன்று போல் குணமுடையவர்களாகத் தோன்றுகின்றனர். தாம் சிந்திப்பதைப்போன்றே மற்றவர்களும் சிந்திப்பார்கள் என நினக்கிறார்கள். அதன் காரணமாகவே ஏமாற்றப்படுகிறார்கள்,  பல சூழ்ச்சி வலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
      
 
ஆனால் மாறாக நாம் மலைவிட்டு கீழிறங்கி  சாலையில் நடக்கும்போது பார்க்கையில் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரம் வடிவம் கொண்டிருக்கின்றன என்பதை அறிகிறோம். எவை சரியாக பராமரிக்கப்படுகின்றன எவை பராமரிப்பு குறைவாக உள்ளன என்ற தகவல்கள் கூட  யாரும் சொல்லாமலேயே அறிந்துகொள்ள முடிகிறது. மனிதர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் மகிழ்வானவர்கள் துயரம் கொண்டவர்கள், உடல் நலம் கொண்டவர்கள், நோயுற்றவர்கள் என பல பாகுபாடுகளைக்  காண்கிறோம்.
      
 
 இப்படி கீழிருந்து பார்ப்பதில் பார்வைப் பரப்பு குறைந்து போய்விடுகிறது என்ற போதிலும் பார்ப்பதின் நுண்மை அதிகரிக்கிறது.  அதாவது நுண்ணோக்கியில் பார்ப்பதைப்போல.   நுண்ணோக்கியில் பார்க்கும்போது சாதாரணமாக பார்க்கையில்  வழவழப்பாக தென்படும்  ஒரு பரப்பில்  மேடு பள்ளங்களை கீறல்களை, மெல்லிய விரிசல்களை எல்லாம்  பார்க்கிறோம்.  அழகான பொருள் அருகே சென்று நுண்மையாக  காணும்போது அதன் அழகு மறைந்து  குறைகள்  கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கின்றன. 
   
 
  குஸ்மிதனுக்கு   மானிடர் மனங்களை இப்படி கீழிருந்து மிக அருகில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது.   அவர்களின் ஐயங்கள், வஞ்சங்கள், குரோதங்கள், துயரங்கள், ஆசைகள் எல்லாம் காண முடிகிறது.    அனைவரிடம் வெகு எச்சரிக்கையாக தன் குறைபாடுகளை, குறை எண்ணங்களை மறைத்துக்கொள்பவர்கள் குஸ்மிதனை பொருட்படுத்தாத காரணத்தால் அவனிடம் தம் குறைகள் தெரிவதைப் பொருட்படுத்தாது விட்டு விடுகின்றனர். அவன் அறிந்த அவர்களின் குறைபாடுகளை அவன் பகடி செய்கிறான்.   ஒருவனை அவன் குறைகளை வைத்து பகடி செய்யப்படும்போது அவனுக்கு இரு வழிகளே இருக்கின்றன. ஒன்று அவன் கோபப்பட்டு கடுமையான எதிர்வினை  புரிய வேண்டும் அல்லது தானும் சிரித்து அதை நகைச்சுவையெனக் கொள்ள வேண்டும்.  குஸ்மிதன் அவன் உருவம் காரணமாக பரிதாபத்துக்குரியவனாகக் கருதப்படுபவன்.   உலகின் கண்களில் பரிதாபத்துக்குரியவர்களாக இருப்பவர்களை தாக்குவது மிகவும்  இழுக்கான் செயலாக பார்க்கப்படுகிறது.  ஆகவே குஸ்மிதனை பெரிதாக கடிந்துகொள்ள முடியாது.   ஆகவே அவனின்  பகடிக்காக கோபப்படாமல் அப்படி கோபம்  வந்தாலும் அதை மறைத்துக்கொண்டு,  சிரித்து,   அதை நகைச்சுவையெனக் கொள்வதன் மூலமே தன் அகங்காரச் சேதத்தை  சரிசெய்துகொள்ள முடியும். 
   
 
வெண்முரசில் சிறிதான பாத்திரமாக இருந்தாலும் எதுவும்  காற்றிலிருந்து திடீரென  தோன்றிவிடுவதில்லை. ஒவ்வொரு  பாத்திரத்தின்  உருவாக்கம் உளவியல் கட்டமைப்பு எல்லாம் முழுமையாக சித்தரிக்கப்படுகின்றது.   ஆகையால் அவை உயிருள்ள நபர்களைப்போல் நம் மனதில் பதிந்து விடுகிறார்கள். குஸ்மிதனின் பாத்திர உருவாக்கம் முழுமையாக இருக்கிறது. அவன் ஏன் பகடியை தன் தொழிலாக,  ஆயுதமாகக் கொள்கிறான் என்பது எல்லாம் முழுமையாக கூறப்படுகிறது. அவன் தந்தையால் பிறந்ததும் கைவிடப்பட்டு மக்களால்  குறை பிறவியென இளிவரலோடு பார்க்கப்பட்டு,  இரக்கத்துக்குரியவனாகவே எப்போதும் கருதப்பட்டு வளரும் ஒருவன்.   அவன்  தன் மனநிலையை இந்தக் குறைவுகளால் பாதிக்கப்பட விடாமல் அந்தக் குறைகளை தனது பலமாக ஆயுதமாக எடுத்துக்கொண்டு தனக்காக ஒரு ஆளுமையை தானே உருவாக்கிக்கொள்கிறான். 
     
 
 பெருங்கதைகளில்  பாத்திரங்கள் போகப் போக நாயகத் தன்மை அதிகரித்துக்கொண்டே சென்று ஒரு தெய்வத்தன்மையை அடைந்துவிடும். எதிர் நாயகனாக இருப்பவர்கள் எல்லாம் முழுக்க முழுக்க ஒரு தீயபாத்திரமாக ஆகிவிடுவார்கள்.  அதன் பிறகு நல்லவர் கெட்டவர் என்ற இருமைகளுக்கெதிரான போராட்டமாக கதை மாறிவிடும்.   கதா பாத்திரங்கள் வணக்கத்துக்குரிய அல்லது வெறுப்புக்குரிய  என இரு பாகுபாடுகளாக பிரிந்துவிடும்.  இதன் காரணமாக பாத்திரங்களிடம் நமக்கு ஏற்பட்ட நெருக்கம் குறைந்துபோகும் நிலை ஏற்படுகிறது.   மகாபாரதம் போன்ற பெரு வீரர்களின் கதையில் இது இயல்பாக நடக்கக் கூடியது. அதை  தவிர்க்க வெண்முரசு அற்புதமான முறையை கையாள்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பகடி செய்பவர்களை வைத்து இப்படி பாத்திரங்களிடம் ஒட்டிக்கொள்ளும் இந்த அதிநாயகதன்மைகளை  நீக்கி அவர்களை நம்மிடம் இயல்பாக உலவச்செய்கிறது.  குஸ்மிதன் தர்மனை, பீமனை,  திரௌபதியை பகடி செய்து அவர்களின்  அதி நாயக தன்மையை ஏளனம் செய்து அவர்களை நம்மிடம் இன்னும் நெருக்கம்கொள்ள  வைக்கிறான். ஏன் வெண்முரசு நூலே வெண்முரசில் குறிப்பிடப்பட்டு  குஸ்மிதன் சொல்லால் பகடி செய்யப்படுவதெல்லாம் நடக்கிறது.  இது  எனக்கு வெண்முரசின் தனிப்பட்ட மற்றொரு சிறப்பாக தெரிகிறது.   
 
தண்டபாணி துரைவேல்