“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும் களம் எல்லைகொண்டுவிடுகிறது. அவ்வெல்லைதான் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்விரிவை அளிக்கிறது. எல்லை குறுகும்தோறும் சொற்கள் எடைமிகுந்து தெய்வச்சிலைகள்போல் அலகிலாத ஆழம்கொண்டு அச்சுறுத்தத் தொடங்கிவிடுகின்றன. சொற்களைக் கொண்டு ஒரு நுண்ணிய களமாடலைத்தான் அரசவைகளில் நிகழ்த்துகிறோம்.”
தெருக்கூத்தில் முக்கிய போர்க்காட்சியில் சண்டையிடும் இருவரையும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரையொருவர் உண்மையிலேயே தாக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் நீண்ட நீளமான துணிகளால் கட்டப்பட்டு அத்துணிக்கயிற்றின் முனைகளை இருவர் பிடித்துக்கொள்வார்கள். ஆவேசப்பட்டு ஒருவர் அதீதமாக செல்லும்போது அவரை பிடித்து இழுத்துக்கொள்வார்கள். (இது உண்மையிலேயேதேவையான ஒன்றா அல்லது பார்ப்பவர்களை கவர்ந்திழுக்க ஒரு உத்தியா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. )
நாம் நம் சொற்களின் மூலம் தான் இன்னொருவரை தொடர்புகொள்கிறோம், நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம், எதிரிலிருப்பவருக்கு நம், கோபம், காதல், பாசம், நட்பு போன்றவற்றை தெரிவிக்கிறோம். நாம் இவரென சொற்களால் நம்மை அலங்கரித்து எதிரிலிருப்பவருக்கு காட்டுகிறோம். ஆனால் அத்தனை சொற்களுக்கும் பின்னால் அவற்றைக்கட்டுபடுத்தி வெளியிடும் ஒரு எச்சரிக்கையுணர்வு இருக்கிறது. நமக்குள் இருந்து சொல்லும் உணர்வை ஒரு கயிறால் கட்டி இழுத்துப்பிடித்துக்கொண்டு கவனிப்பில் வைத்துக்கொண்டிருக்கிறோம். நம் மனதில் எழும் சொற்கள் முழுவதையும் சொல்லிவிடுவதில்லை.
ஏனென்றால் மனதில் சொற்களை பிறப்பிக்கும் 'மூலம்', நம் சிந்தையை அப்படியே சொற்களாக மாற்றுகிறது. பின்னர் அந்தச் சொற்களை பல்வேறு வடிகட்டிகளில் உட்செலுத்தி அப்புறம் அது ஒலிவடிவம் பெற்று நம் வாயிலிருந்து வெளிவருகிறது. முதல் வடிகட்டி உரையாடலுக்கு தொடர்பற்ற சொற்களை நீக்குவதற்கானது. நம்மை தாழ்த்திக்காட்டும் வார்த்தைகளை மற்றொன்று வடிகட்டுகிறது. எதிரிலிருப்பவரை தேவையின்றி சங்கடப்படுத்தும், வருத்தமூட்டும் கோபப்படுத்தும், சொற்களை கவனித்து நீக்குகிறது. பின்விளைவுகளை கவனத்தில் கொண்டு வடிகட்டும் அமைப்பு ஒன்று இருக்கிறது. அப்புறம் ரகசியங்களை வெளிப்படுத்தாத ஒரு வடிகட்டி. நம்மைச்சார்ந்தவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இன்னொன்று. இதைப்போன்ற இத்தனை வடிகட்டிகளைத் தாண்டியே நாம் நம் சொற்களை வெளிவிடுகிறோம்.
இந்த வடிகட்டிகளை தாண்டி தவறி வெளிவரும் ஒரு சொற்றொடர், ஒரு உண்மை, சிலசமயம் ஒற்றை வார்த்தை, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இதைப்போன்ற பிழையின் காரணமாக அரசியல்வாதிகள் பெரும் பாதிப்புகளை அடைந்துக்கிறார்கள், நட்புகள் உடைந்துபோயிருக்கின்றன, உறவுகளில் கசப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஜானகிராமன் கதை என்று நினைக்கிறேன். வயதான தம்பதியர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனித்து மகிழ்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கையில் அந்தப் பெரியவர் ஒரு பழைய உண்மையைத் தவறிக் கூறிவிடுவார். அதன் காரணமாக அவர் மனைவி அவருடன் இறக்கும்வரை பேசாமலேயே இருந்துவிடுவார்.
அப்படி இல்லாமல் நான் என் மனதில் தோன்றுவதை அப்படியே இவரிடம் கூறுவேன் என்று யாரையாவது நம்மால் அடையாளம் காட்ட முடியுமா? மனைவி தந்தை, மகன் என எவரும் இருக்க முடியாது. நம் உயிர் நண்பர்களிடம் கூட நாம் சிலவற்றை சொல்லாமல் விட்டுவிடுவோம். அப்படி இல்லாமல் ஏதோ ஒரு மன உந்துதல் காரணமாக தான் நினைப்பதையெல்லாம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தால் அது கேட்பவருக்கேகூட சங்கடமாக இருக்கும். மனம் கூசும். ஒரு வகையில் அது அவரின் நிர்வாணத்தை எவ்வித அலங்காரமும் இன்றி காண்பதற்கு ஒப்பாகும்.
ஆனால் ஒருவர் முன் முழுக்க முழுக்க தன்னை திறந்து வைப்பது இந்த சொற்களின் தடுப்பரண்களையெல்லாம் தவிர்த்து பேசுகையில்தான் நடக்கிறது. அப்படி பேசுவதற்கும் அதை கேட்பதற்கும் ஒருவருக்கொருவர் இடையில் பெரிய அளவிலான புரிந்துணர்வும் அளவுகடந்த நம்பிக்கையும் வேண்டும். அவை பீமனிடம் மட்டுமே திரௌபதி கொண்டிருக்கிறாள். அதனால் அவன் முன் தன் மனதை முழுதுமாக திறந்து வைக்கமுடிகிறது. அதன் காரணமாக அவள் ஆழ்மனதில் உறையும் சௌகந்திகப்பூவின் அதே மணத்தை அவனும் உணர முடிகிறது.
தண்டபாணிதுரைவேல்