மாமலரின் இன்றைய
பகுதியில் திரௌபதிக்கு மட்டுமே நுகரக் கிடைத்த மணம் பீமனுக்கும் கிடைக்கும் தருணம்
வெண்முரசில் வந்த காதல் தருணங்களில் உச்சம் எனலாம். இதற்கிணையான ஒரு தருணம்
மழைப்பாடலில் வந்தது. அன்று திருதாவின் உள்ளத்தில் ஓடும் ஓர் தென்னகப் பண்
காந்தாரியின் காதில் கேட்டது. அவள் கண்ணைக் கட்டிக் கொண்டாள்.
மணம் என்பது
அருவங்களிலேயே விவரிக்க ஒண்ணாதது. எத்தனை சொல்லெடுத்தாலும் இறுதியில்
சொல்லப்படாது, சொல்லால் தீண்டப்படாது அங்கேயே நின்றிருப்பது, உள்ளம் போல, ஒரு
ஆளுமை போல, ஒரு எண்ணம் போல. ஆவதால் மட்டுமே அறிய முடிவது. அறிவதும் ஆவதும்
ஒன்றேயாகும் ஒரு தருணம் வாய்க்கையில் மட்டுமே மணம் நினைவுக்குள் புக முடியும்.
அதன் பிறகு நினைவடுக்குகளில் இருந்து மீட்கையில் எல்லாம் மணம், மணமாகவே
புலன்களுக்குக் கிட்டும்.
ஒருவர் உணர்ந்த
மணத்தை அதை அறியாத பிறிதொருவர் உணர்வது என்பது இரு மனங்களும் ஒத்திசையும் ஒரு
அபூர்வ கணத்திலேயே வாய்க்கும். அதை ஓர் அழகான உவமை மூலமாக மாமலர் சொல்கிறது. தான்
முகர்ந்த சௌகந்திக மணத்தை பீமனும் உணர்ந்த மகிழ்வில் அவனுக்கு மட்டுமே கேட்கும் படி
பேசும் அவள் குரலை ‘வீணைக்கம்பிமேல் தலைமயிர் இழுபட்டதுபோன்ற
குரல்’ என்கிறது.
ஒத்திசையும் சுருதி தந்தியில் தானே நிகழமுடியும். இனிமையான அத்தியாயம்.
அருணாச்சலம் மகராஜன்