கந்தமாதான மலையின் பிலத்துக்குள் தன்னை
உந்தி உள்ளே சரிவது வரை தர்மனுக்குள் எத்தனை அழல் கனன்றிருக்கும்? அவன்
மட்டுமே தனித்து நிகழ்த்த வேண்டிய பயணம். அவரவருக்கான கடமை என்ன என்ன என
தம்பிகளுக்கு பகிர்ந்தளித்து விட்டு மீளும் நிச்சயம் அற்ற அந்த
பயணத்துக்குள் செல்கிறான். இன்று எல்லாம் முடிந்து மீண்டும் அவன்
அவனுக்குள் சிறைப்பட்டு விட்டான். செயல்பட களமற்ற அந்த ஆற்றலும், செயலின்மை
கிளர்த்தும் சிந்தனை மற்றும் உணர்வுக் குழப்பங்கள் , கொண்டவன். அதுவே
இன்றைய தர்மனின் சித்திரம்.
எரிவாயின் உள்ளே
உள்ளே எம்பி விழும் அக் கணம் எய்திய உவகையை, அவனது ஷாத்ரம் அவனுக்களித்த
பரவசத்தை கண்டபின் தர்மன் போன்ற ஒருவனால் எப்படி தரித்திருக்க இயலும்.
பசித்த புலி முன் செல்ல தர்மன் முயல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
தர்மனுக்கு நேர் எதிர் நிலையில் பீமன். தர்மனுக்கு பசித்த புலி முன்
செல்வது உயிரை பணயம் வைக்கும் சாகசச் செயல். பீமனோ பசித்த புலியை ,குரங்கு
சகோதரர்களுக்கு விளையாட தருபவன். அப் பெருங்காற்றுக்கு இவையெல்லாம் சிற்சில
களி விளையாட்டுக்கள். பீமனுக்குள் உறையும் ஆற்றலை அவன் அது வெளிக்கொள்ளும்
களம் எதுவோ, எப்போதும் அந்த களத்திலேயே அதை வைத்திருக்கிறான். வால்
சிக்கி, அந்தரத்தில் ராட்டினம் போல சுற்றி, விடுபட்டு பறந்து போய் ,தனது
மொத்த எடையால் பூமியை அறைந்து விழும் புலி. ஆயுளுக்கும் அப்படி ஒரு
தாக்குதலை எதிர்கொண்டிருக்காது. அதன் தலைமுறைகளுக்குள் இனி அந்த பீதி
பதிந்துவிட்டிருக்கும்.மந்திகளி ன் மித்ரன் மரங்களில் ஏறி உயர்ந்து .மறைந்துபோகிறான்.
சொல்புதிது சீனு