Thursday, February 9, 2017

பகடியில் புரண்டெழுதல்



மாமலரில் மூன்று குரங்குகள் தூக்கிவரப்போகும் பன்றியைக்காண பீமன் சாப்பிடுவதைக் கண்டுகொண்டு காத்திருந்தேன். மூன்று குரங்குள் சேர்ந்து முண்டன் என்ற குள்ளனைத்தூக்கிவந்தது என்பதை படித்ததும் மனம் புரண்டு எழுந்தது. மனம் புரண்டு எழுவதுதான் வாழ்க்கை. இருந்தபடியே இருப்பது எத்தனை புதியதாக இருந்தாலும் சலிப்பைத்தான் தரும், தருமனின் சலிப்புவழியாக செல்லும்  கதை அந்த சலிப்பை கதையே புரண்டுஎழுவதன் மூலமாக சமன்செய்துக்கொள்கிறது.

பகடி என்பதே காலத்திற்கு இடத்திற்கு வாழ்க்கைக்கு புலனுக்கு எதிராக புரண்டு எழும் நிலைதான். புரண்டுவஎழுவதை அறியாத மனிதன் பகடி என்பதை தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சுமை என்று முட்டியை உயர்த்துகின்றான்.

முண்டன் மனைவியாலும் அவளின் இரண்டாம் கணவனாலும் காட்டில் ஆடையின்றி தூக்கி எறியப்படும் முண்டன் “என்னிடம் சொல்லி  இருந்தால் இருவருமே அவளுக்கு கணவனாக இருந்திருக்கலாம்“ என்பன் மூலமாக  அந்த கணத்தின் அபத்தத்தை சோகத்தை புரண்டுஎழ செய்கிறான் அதே நேரத்தில் திரௌபதியின் மறைந்துபோன வரலாற்றை புரண்டுஎழச்செய்கிறான். அது பகடி என்பதை மனம் புரண்டு எழாமையால் தருமன் தவறாக எண்ணி முகம் சிவக்கிறான் ஆனால் அந்த நிகழ்வை மனம்புரண்டு எழுந்து பகடியாகப்பார்க்கும் திரௌபதி சிரித்து “எளிய பெண்போலும்“ என்பதன் மூலமாக உள்ளங்களை புரண்டுஎழச் செய்கிறாள்.

பெண்களின் அகத்தையும் ஆண்களின் அகத்தையும் ஊடுருவிப்பார்த்து இருவர் இடத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முண்டன் தன் குழந்தை தனத்தின் மூலம் ஒட்டுமொத்த குள்ளர்களின் அகத்தைக்காட்டி குள்ளர் முன் உயரமானவர்களின்  மனகீழ்மையை புரண்டுவிழச்செய்கிறான். பகடிமூலமாக அங்கு மனிதமனதின் இருள்ஆழங்கள் புரண்டு எழுகின்றன.   

காலஏடுகளைப்புறட்டும் முண்டன் முன் காலம் கண்ணீரும் செந்நீருமாக புரண்டுஎழுவதைப்பார்க்கும்போதுதான் பகடி என்பது நகைப்புமட்டும் இல்லை காலத்தின் மடிப்புகளில் ஏறி  வாழ்வின் ஒளியை இருளை காண்பது என்பது தெரிகிறது. .

இயல்பாக மலர்ந்துக்கொண்டு இருக்கும் மாமலர்  அதன் இயல்பின் மென்மையாலேயே வாழ்வின் அனைத்து இடங்களிலும் எளிதாக நுழைந்து நிரம்பிவிடுகிறது. .

சாலமரக்குடிலுக்குள் பீமன் வருவதற்கு முன்பே  வரும் குரங்குக்கூட்டத்தில் ஒரு முதிய பெரும் குரங்கு அரசநடைப்பொட்டு அறைஉள்ளே வரும் அப்போது அத்தனை குரங்கும் உடல்வணங்கி விலகுவதும் அது தாலத்தைத்தொட்டுப்பார்த்து “அஞ்சும்படி ஒன்றுமில்லை“ என்று வெளியேரும்போது குட்டிக்குரங்குகள் தாலத்தை மிதித்து ஒலி எழுப்பி பெரும் குரங்கை அஞ்சவைப்பதும் பகடியின் உச்சம். அது தலைமுறை இடைவெளியின் உச்சமும்கூட. அந்த பகடிக்குள் தலைமுறைகள் புரண்டுஎழுகின்றன. காலத்தின் பீடத்தில் இருக்கும் மரபுகள் புரண்டுவிழுகின்றன. மாமலரின்பகடி எப்போதும் இங்கிருந்து இங்கு இல்லாததை காணவைக்கிறது. 

ராமராஜன் மாணிக்கவேல்.