Thursday, February 9, 2017

உறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)
    
உறவுகளுக்கிடையே உருவாகும் பிணக்குகளும் இணக்கமும் பற்றி வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதை இந்தப் பதிவில் எழுதி  இருக்கிறேன். 
http://venmurasudiscussions.blogspot.in/2015/08/blog-post_8.html
      
 
உறவைவிட நட்பு பெரிதுபோல் சொல்லப்பட்டாலும் அவ்வாறில்லை என அந்த உரை எழுதும்போது நான் உணர்ந்தேன்.  நம் நண்பரைக் காணும்போது  நம் மனதில் இனிக்கும். அதாவது நட்பின் நெருக்கத்தை மனதில் உணர்வோம்.  அதனால் அதை நம்மால் சொல்லால் சொல்லமுடியும்.  ஆனால் உறவினரின் அருகாமை நமக்கு இரத்தத்தில் இனிப்பது. அது சில சமயம் நம் மனதுக்குக்கூட எட்டாது. அதை நாம் சொல்லால் சொல்லமாட்டோம் , சொல்லத் தெரியாது. அப்படியே உணர்ந்தாலும் அதை வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. அப்படி உள்ளுக்குள்  இனிப்பதை நாம் பாசம் என்று சொல்கிறோம். அப்பா, அம்மா, பிள்ளை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என நெருங்கிய உறவுகள்   தங்கள் பாசத்தை சொற்களில் பறைசாற்றிக்கொள்வதில்லை. காதலர்களூக்கிடையே பரிமாறிக்கொள்ளும் காதல் வார்த்தைகள் கணவன் மனைவியானவுடன் மறைந்து போகின்றன. மற்ற சொந்தங்களிடம் நாம் பாசமாக இருக்கிறோம் என்பதை நாம் சில சமயம் உணர்வதேயில்லை. ஆனால் ஊன்றிப்பார்த்தால் மட்டுமே இது போன்ற உறவுகளுக்கிடையேயான பாசம் தெரியவரும். அப்பாவின் பாசம் பெரும்பாலும் திட்டல்களில்  அக்கறைகளில், மகன் பொருட்டு யாருக்கும் தெரியாமல் செய்யும் தியாகங்களில், மாற்றாரிடம் தம் மகன் பொருட்டு தன்  நிலை, கர்வம் போன்றவற்றை விட்டுவிட்டு குறுகி நின்று உதவி கேட்கையில் என வெளிப்படும். சதா சச்சரித்துக்கொண்டிருக்கும் சகோதர உறவுகளில் அடியில் பாசம் ஓடிகொண்டிருக்கும். உடன் பிறந்தார் பிள்ளைகளை தம் பிள்ளை என உணர்ந்து அவர்களிடம் பெருகும் பாசத்தில் அந்த சகோதரப்பாசத்தின் பிம்பம் தெரியும். உறவினர்களை சந்திக்கும்போது கைபிடிக்கையில் கொடுக்கும் அழுத்தத்தில் அந்தப் பாசம் உணரப்படும்.  பேசுவதற்கு ஒன்றுமிருக்காது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதற்கு ஒன்றும் இருக்காது. ஏன் இளைத்துவிட்டாய் போன்ற சம்பிரதாய பேச்சுக்கள்தான் பெரும்பாலும் இருக்கும்.  ஆனால் சந்திக்கும்போது உள்ளூற ஏற்படும் மகிழ்ச்சி வெளிக்காட்டாமல் உணரப்படும், உள்ளமெல்லாம் தித்திக்கும்.
   
 
நான் வெளியூரில் தங்கி படிக்கும் காலத்தில் வீடு வரும்போது என் அப்பா, என்னை தலையில் வலிக்கும்வன்னம் கொட்டி தலையில் எண்ணெய் வைத்து தலைவாரினால் என்ன என்று கடிந்துகொள்வார்.அதுதான் அவர் வரவேற்பு.  அவர் என்னிடம் பேசுவது  எல்லாம் எதற்காகவாவது திட்டுதலாகத்தான்  இருக்கும்.    அதைப்போல் மற்றவர்களிடம் எல்லாம் அடிக்கடி கைபேசியில் பேசும் நான் சகோதரனிடம் எப்போதாவதுதான்  பேசுவேன். அதுகூட ஓரிரு நிமிடங்கள் தான். பேசிய பிறகு அதுகூட தேவையற்ற அபத்தமாகத் தோன்றும். அவன் ஒருவன் இருக்கிறான் என்பதளிக்கும் மன நிறைவே போதுமானதாக இருக்கையில் மேற்கொண்டு என்ன வேண்டும் எனத் தோன்றும். சில காலம் சென்று சந்திக்கும் போது அவனைப் பார்ப்பதே போதுமானதாக இருக்கும்.
    
 
இந்த உறவுகளுக்கிடையேயான  உணர்வையெல்லாம் மேற்கத்திய காதலர்கள் போல் அடிக்கடி சொல்லிக்கொண்டு  உறுதிபடுத்திக்கொள்ளவேண்டியதில்லை.  அது கருங்கல்லில் எழுத்துப்போல நம் ரத்தத்தின் அணுக்களில் பொறித்துவைக்கப்ப்பட்டிருப்பது.  அது எப்போதாவது அரிதாக  வெளிப்படுகிறது என்பதால் அது இல்லை அல்லது குறைவு பட்டது என்று சொல்லமுடியாது.
  
 
  வெண்முரசில் இந்த உறவுகளுக்கிடையேயான பாசம் இப்படி செயல்கள் மூலம் வெளிப்படுவதைப் பார்க்கையில் மனதுக்கு மிக இனிமையாக இருகிறது. தருமன் தன் தம்பியர்கள் மீது கொண்டிருக்கும் பாசம்  அது அவன் செயல்களில்,  தடுமாற்றங்களில், முகம் திருப்பிக்கொள்வதில், கடிந்துகொள்வதில் எல்லாம் வெளிப்படுகிறது. பீமனை விலங்கு எனத் திட்டுவது, உள்ளுக்குள் அவன் உடலை காண்கையில், அவன் உண்ணுவதைப் பார்க்கையில் அடையும் பரவசத்தை மறைத்துக்கொள்ள முயல்வது, அர்ச்சுனனைக் காண்பதற்காக அவன் கொள்கிற ஏக்கம், காண்கையில் அடையும் அடக்க முடியாத பரவசம், யாருக்கும் தெரியாமல் தன் குருதித்துளி கொடுத்து கண்ணேறு கழிப்பது என அவன் பாசம் பொங்கிப்  பிரவகிக்கிறது. தருமன். திரௌபதி,  பீமன், அர்ச்சுனன்,  நகுலன்,  சகாதேவன் அவர்களுக்கிடையே  பாசம் எனும் நூலால் ஒரு நெருக்கமான  உறவுமணி  மாலை கோர்க்கப்பட்டிருப்பதை இன்றைய வெண்முரசு விளக்கிச் செல்கிறது.
        
 
நண்பர்களைப்போலில்லாமல் உறவினர்கள் நம்  மீது கோபம் கொள்வார்கள், நம் உயர்வில் பொறாமை கொள்வார்கள் நாம் அவர்களுக்க்கு உதவிகள் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.  ஆம் இல்லையென்றுகூறவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு நம்மிடம் நடந்துகொள்வதற்கான  உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இந்தப் பிணக்குகளெல்லாம் எக்காலத்திலும் உறவை முறித்துவிடாது. அடிதடி, திட்டுதல்கள் பழித்துக்கொள்ளுதல் போன்று  அவ்வப்போது ஏற்படும் பகையெல்லாம் காய்ந்திருக்கும் மேல் மரப்பட்டைகளில் காணும் விரிசல்கள் போன்றவை. ஆனால் அதனடியில்   உயிர்ப்பான வைரம் பாய்ந்த மரமாக பாசம் இருந்துகொண்டிருக்கிறது.  அந்தப் பாசத்தை வெண்முரசு தன் வண்ணத் தூரிகையால் நமக்கு  வரைந்து காட்டுகிறது. 
 
தண்டபாணி துரைவேல்