Friday, February 17, 2017

காமத்தின் துன்பம்



நர நாராயணர் கதை எனக்கு முற்றிலும் புதியது. இணை பிரியாத இருவர் கூடி இயற்றும் ஒற்றை தவம். வெண் முரசு பேசிய மெய்த்தேட்டம் குறித்த  உப கதைகளில் இனியும் இணை சொல்ல ஒன்று வர இயலாத தனித்துவமான கதை.  நாராயணருக்கு மீட்சி அளித்து முழுமை தந்த மகள் ஊர்வசி.

தேவகுரு பிரகஸ்பதி  உண்மையில்  பாவம். திருமணமோ முதிய வயதில். தாராயின் சந்திரன் மீதான சிடுசிடுப்பு  அவருக்கு  விளையாட்டாக மட்டுமே புரிந்திருக்கிறது. 

 “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு”

அவர் கர்ப்பித்ததுதான்.  அவரது ஞானத்துக்கு சோதனை சந்திரன் வடிவில்.  சொல்லை திரும்பப் பெறுவது என்பது ஞானத்தின் அழிவே. ஞானத்தை அழித்து தாரையை மீட்கிறார்.

அவள் பொருட்டு மட்டுமே உயர்ந்த  உச்ச தருணங்கள் அடங்கி தாரை மீண்டும் இருள் அறைக்குள் அடைகிறாள். அதன் பின் பிரகஸ்பதி அனுபவித்துத்தான்  இழுக்கின் சிகரம்.  தன் மகவென அவர் கொண்ட அத்தனை உவகையும் செருக்கும் மாயையாகும் கணம்.  

தாரைக்கும் சந்திரனுக்கும் புதன் பிறக்கிறான். புதனுக்கும் இளாவுக்குமான காதலை இன்னும் நான் கடக்க வில்லை பிறிது எப்போதேனும்தான் எழுதவேண்டும்.  இவர்களின் மைந்தன் புருரவஸ்.

 “நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப்பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே, நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை.” 

துர்வாசரின் சொல்லுடன் இந்த புவியை ஆள புகுகிறான் புரூரவஸ்.

 அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம்.

புருவரசின் பாட்டி தாரை யின் கொழுநர் பின்னிழுத்துக்கொண்ட அறத்தின் வரையறை இன்று மாற்றம் கொண்டு புருவரஸ் முன்பு எழுந்து நின்று அவனது வாழ்வின் செல்திசையை தீர்மானிக்கிறது.

“காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” 

இன்பரின்  சாபம் அல்லது வரம் இதோ ஊர்வசியாக புரூரவஸ் முன்னால் . 

புரூரவஸ் துவங்கி யயாதி தொடர்ந்து சந்தனு வரை ஒரே துன்பம். காமத்தின் பெருந்துன்பம். 

கடலூர் சீனு