Tuesday, February 21, 2017

கரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)

  
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதி  ஒருநாள் வெள்ளம் பெருகி  கரை  உடைத்து பெரு மரங்களை சாய்த்து வீடுகளை மூழ்கடித்து சேதங்களை விளைவிகின்றதுசமூக  அறம் தன்னறம் ஆகியவற்றை இரு கரைகளாகக் கொண்டு அதனிடையில்  மனிதன் ஒருவனின் வாழ்வெனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது

 ஏதோ ஒரு உணர்ச்சிவெள்ளம் அவனுள் பெருக்கெடுக்கும்போது இந்தக் கரைகளை உடைத்து அவனுக்கும் அவனைச்சுற்றி இருப்பவர்களுக்கும் சேதத்தை விளவிக்கும்படி நடந்துகொள்கிறான். கோப உணர்வு மிகுதியால் சமூக நெறிகளை மீறி மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கிறான். சமூகத்தின் பார்வைக்கு அது வரும்போது அதற்கான தண்டனையை பெறுவோம் என்பது அறியதது அல்ல. ஆனாலும் அவன் கோபம்அவன் அடங்கிச் செல்லும் நெறிகள் என்ற கரைகளை உடைத்து வெளியே பாய்ந்து அவனுக்கும்  மற்றவருக்கும் சேதத்தை உருவாக்கிவிடுகிறது.
  

ஆனால் இன்னொரு வகையில் வெள்ளம் கரையை உடைக்கிறது. இந்த வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் சட்டென்று வருவதல்ல. படிப்படியாக நீர்வரத்து அதிகமாகிகொண்டே சென்று நீர் கரைகளில் ததும்பி கரைகளை  உடைத்து  வெள்ளப் பெருக்கை உருவாக்கும்நீர்மட்டம் படிபடியாக ஏறுவதை  கவனிப்பதற்கே சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்அதைப்போல் சில உணர்வுகள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்று நம் மனதை மூழ்கடித்து பெரும் விளைவுகளை ஏற்படுத்திடிவிடும். வஞ்சம், காமம், சோம்பல் முதலிய உணர்வுகள் அத்தகையவை


    
நதி எவ்வளவு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் அது எப்போதும்  கரைகள் மீது அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறதுநாம் அமைதியாக இருப்பதுபோல் இருந்தாலும் நம் உணர்வுகள் நாம் போட்டு வைத்திருக்கும் நெறிகள் என்ற கரைகளின் மேல் ஒரு அழுத்தத்தைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தன்னுணர்வோடு எச்சரிக்கையாக நெறிகளை வலுபடுத்திக்கொண்டு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதன் காரணமாகவே நாம் பல நியமங்களை தினசரி வாழ்வில் கடைபிடித்துவருகிறோம். மனதின் உணர்வுகளைத் தூண்டும் செயல்களில் ஈடுபடாமல், ஐம்புலன்களின்வழி அவ்வுணர்வைத் தூண்டுபவை நம்மை நாடாமல் பார்த்துக்கொள்கிறோம். உணர்வைத் தூண்டும் முதல் எண்ணம் உள்ளத்தில் தோன்றும்போதே அதை தடுக்க வேண்டும். அப்படி தடுக்கப்படாத எண்ணம் வளர்ந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் நம் சிந்தை  அந்த எண்ணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறதுஅப்போது உணர்வுகள் கட்டுபடுத்த முடியாத நிலையை அடைந்துவிடுகின்றன. சரியெது தவறு எது என நம்மை சிந்திக்க விடாமல் பின்விளைவுகளைப்பற்றி  எண்ண விடாமல் நம்மை பாதகமான செயல்களில் உட்படுத்திவிடுகின்றன


  
மெல்ல மெல்ல பனிப்போர்வைபோல நம் சிந்தைமேல் கவிழ்ந்து வெள்ளமென மனதில் பெருகி ஒரு கட்டத்தில் நெறிகளை உடைத்து ஓடும் ஒரு உணர்வு காமம் ஆகும்காம உணர்வு     தாரை, சந்திரன் இடையில் அது நெறி மீறிய உறவாக ஆவதை வெண்முரசு நுண்மையாக காட்டுகிறதுகணவர்  வியாழரின்  விலக்கம் தாரையின் உள்ளத்தில் ஒரு சலிப்பை உருவாக்குகிறது. யார் ஒருவரும் மற்றவரால் போற்றப்படவேண்டும் என விரும்புகின்றனர். அதுவும் அழகு அறிவு அல்லது ஏதாவது கலையில் திறன் அதிகம் கொண்டவர்கள் அந்தத் திறன் மற்றவர்கள் அறிய வேண்டும், போற்றப்படவேண்டும் நினக்கிறர்கள். அதன் காரணமாக தன் அழகை , அறிவை, திறனை ஒவ்வொருநாளும் கூட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே தன் வாழ்வின் பயன் என உணர்கிறார்கள். ஆனால் இது கவனிக்கப்படாமல் போகும் போது அவர்களுக்கு ஒரு சலிப்பை உருவாக்குகிறது. தன் அருகிலிருப்பவரிடம் கிடைக்காத அங்கீகாரத்தை மற்றவரிடம் தேடுகிறார்கள்.


   
தாரையில் அழகு  வியாழரால் கவனிக்கப்படாமல் போகையில் அதற்கான இயல்பான சலிப்பு அவளுக்கு உருவாகிறதுஅழகும் காமமும் பிணைக்கப்பட்டது. காமத்தை சுமந்துவரும் கருவியென அழகு ஆகிறது. காமம் ஒருவரின் அழகைக்கூட்டுகிறது. அழகின்காரணமாக ஒருவர்மேல் காமம் கூடுகிறது. ஆகவே அவள் அழகு கவனிக்கப்படாமை, அவளின் காமத்தை சீண்டுகிறது.   அவள் கண்கள் அதை அவரைத்தாண்டி வெளியில் தேடுகிறது. சந்திரன் அவள் உள்ளத்தில் சிறு விதையென விழுகிறான். முதலில் ஒரு குறுகுறுப்பாக எழுந்து அவள் மனதில் வளர ஆரம்பிக்கிறான். எதேச்சையாக அவனை நினைப்பதாக அவள் நினத்துக்கொண்டிருப்பவள் ஒரு கட்டத்தில் அவனை மட்டுமே நினைத்துகொண்டிருப்பதை அறிந்து துணுக்குறுகிறாள்அவன் நினைவை விலக்க முயன்று தோற்றுப்போகும் நிலையில் அவள் காமம் கரைதாண்டும் அளவு பெரிதாகி விட்டதை அவள் அறிகிறாள்.

அவன்மேல் அவள் காமம் கொண்டிருப்பதை அறியாது அவன் முகம் தன்னுள் எழுவதைக்கொண்டு அவள் அறிகையில் அக்காமம் முற்றிலும் வளர்ந்துவிட்டிருந்தது. அவன் உடலை அவள் ஓரவிழியால் பலமுறை நோக்கியதுண்டு. நோக்கியகணமே எழும் உளஅதிர்வால் படபடப்புகொண்டு விழிவிலக்கி பிறிதொன்றில் மூழ்குவாள். முகம் சிவந்து மூச்சு சீறிக்கொண்டிருக்கும். பின்னர் கண்கள் கசிய மீள்கையில் தன் தனிமையை எண்ணி ஏங்குவாள்.
 

 இப்போது அவள் தன்னை தன்னிடம்  மறைத்துகொள்ளவதை நிறுத்திக்கொண்டு, கணவன் முதலிய பிறரிடம் தன் காமத்தை மறைத்துக்கொள்ள முயல்கிறாள். அதன் காரணமாக அவள் சந்திரனை வெறுப்பதாக தன்னைக்  காட்டிக்கொள்கிறாள். சந்திரனைச்  சீண்டி அவன் கவனத்தை ஈர்க்க எனக்கூட இது இருக்கலாம்.    ஒருவரிடம்   நேசத்தை காட்டுபவர், வெறுப்பைக் காட்டுபவர் இருவரும் மனதளைவில் அந்த ஒருவரிடம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மனதை ஆட்கொண்டு இருக்கிறார்கள். சதா அந்த ஒருவரை எப்போது நினைவில் கொண்டிருக்கிறார்கள்.

   
அவன்மீது கொண்ட காமத்தாலேயே அவள் தன்னை அவனிடமிருந்து முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அவனிடம் கடுமுகம் மட்டுமே காட்டினாள். ஏதென்றில்லாமல் அவனிடம் முனிந்தாள். அவனைப்பற்றி கணவனிடம் பொய்க்குற்றம் சொன்னாள்.

 
தன் மனைவியின் மன மாறுதலை உண்மையில் வியாழர் தன்  ஆழ்மனதில் அறிந்திருக்கிறார். அதை அவருடைய  மேல் மனம் நம்ப மறுக்கிறது. அவள் ஒன்றும் தன்னை ஏமாற்றவில்லை, தான் அவளை முழுதுமாக நம்புகிறேன், என தனக்குத் தானே சொல்லிக்கொள்ள விரும்புகிறார். அதை செயலாக நடத்திக்கொள்கிறார்.
 
தன் மாணவர்களில் இளையோனும் அழகனுமாகிய அவன்மேல் மனைவி சொன்ன பழுதுகள் அவருள் நுண்ணிய உவகையை நிறைத்தன. அவர் அவனுக்காக அவளிடம் நல்லுரை சொன்னார். அவனை வேண்டுமென்றே அழைத்துவந்து தன்னுடன் உணவுக்கு அமரச்செய்தார். அவர்கள் இருவரையும் இணைத்து நகையாட்டுரைத்து சிரித்து மகிழ்ந்தார்.


   
ஒருவனுக்கு, தன்னை ஈன்றவள், தன் நாட்டு அரசி, தன் அண்ணன் மனைவி, குருவின் மனைவி, மற்றும் தெய்வம் என ஐந்து தாய்கள் உண்டு என்று சொல்வார்கள். சந்திரன் தன்  குருவின் மனைவியான தாரையை தாயாக காண வேண்டும். அவன் தாரையை பார்க்க நேரிட்டால் அவன் பார்வையில்  அன்னையைக் காணும் சிறு குழந்தையின் களங்கமின்மை இருக்க வேண்டும். ஆனால் சந்திரன் தன் நெறியை மீறி அவளை  வேறு பார்வையில் காண்கிறான். இதன் காரணமாக இருவர் உடல்களும் ஒன்றின் விழைவை ஒன்று  அறிந்துகொள்கிறதுஉடல்கள் அவர்களின் உள்ளத்தை தன் பக்கம் திருப்புகின்றனஇப்போது  அவர்கள் இந்த உலகத்தை இந்த உலகத்தில் தங்களைக் கட்டுப்படுத்தும் நெறிகளை விட்டு வேறு உலகத்தில் சென்றுவிடுகிறார்கள். அங்கே அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.   வேறு நபர்களோ  நெறிகளோ அற்ற காமப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள்வெள்ளம் கரை ததும்பி கரை முட்டி இருக்கிறது. ஒரு சிறு அசைவில் உடைந்து விடும் நிலைஒரு மலர், ஒரு சொல் ஒரு அசைவு, ஒரு பாவனை, ஒரு பார்வை, ஒரு பெருமூச்சு அவ்வளவுதான்  கரை உடைந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறதுஅந்த வெள்ளப்பெருக்கில், அவர்கள்  கொண்டிருக்க வேண்டிய சமூக அறங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள், தன்னைச்சார்ந்தவர்களைப்பற்றிய நேசம் அனைத்தும்  மூழ்கடித்து உடைத்தெறியப்படுகின்றன.   உணர்வு வெள்ளம் கரை உடைத்தோடும் அந்த நிகழ்வு வெண்முரசில் சொல்லப்படும்போது இது  இப்படியல்லாமல்வேறு  எப்படி நடந்திருக்க முடியும் என நமக்கு தோன்றுகிறது.
  
   
நறுமணமலர்மரத்தடிக்குச் சென்றபோது இயல்பாகவே அவள் நினைவெழுந்தது.
 
அவனை எதிர்கொண்ட அவள் விழிகள் திடுக்கிட்டவைபோல மாறுவதைக் கண்டான்.
சற்றே பருத்த அவள் உதடுகள் மெல்ல விரிசலிட மேலுதடு வளைந்து வேட்கை காட்டியது. நீர்மை படர்ந்த விழிகளைத் திருப்பி முலையிணை விம்மஅவர் இல்லைஎன்றாள். அச்சொல்லிலேயே அனைத்தையும் அவள் சொல்லிவிட்டதை நெடுங்காலம் கழித்து அதை எண்ணத்தில் மீட்டியபோது உணர்ந்தான். ஆனால் அவனுள் வாழ்ந்த காமம் அதன் முழுப்பொருளையும் உணர்ந்துகொண்டிருந்தது அப்போதே. “அறிவேன்என்றபின் மலர்களை கொண்டுசென்று வைத்துவிட்டு வந்தான்

அவள் அவன் வழியில் மூச்சிரைக்க விழிதாழ்த்தி நின்றிருந்தாள். மேலுதட்டில் வியர்வை பூத்திருந்தது. அனல்கொண்ட கலம் என அவள் உடல் சிவந்திருந்தது. இருவரும் அசைவிழந்து நின்றனர்.
 
அவள் இமைகள் தாழ்ந்திருந்தமையால் நோக்கை அறியமுடியவில்லை. ஆனால் உடலே விழியென நோக்கு கொண்டிருந்தது. அவள் விழிகள் சரிந்து தன் வலமுலையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் உடல் சிலிர்த்த கணம் அவள் நீள்மூச்சு ஒன்றை விடுத்தாள். அவன் அக்கணமே அவளை தாவித்தழுவிக்கொண்டான்.


கரைமீறிய காமத்தின் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளதங்கள் முறை மீறிய காமத்தை நியாயப்படுத்திக்கொள்ள,   காரணத்தை,   தத்துவத்தை அவர்கள் கண்டெடுத்துக்கொள்கிறார்கள்.

   “
நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு

    
சமூக நெறி மீறிய உறவுஎப்படி ஆரம்பிக்கிறதுஎப்படி வளர்கிறது அதற்கான காணிகள் என்னஅது எப்படி இறுதியில் நிகழ்ந்துவிடுகிறது என்பதை மிக நுண்மையாக வெண்முரசு சித்தரித்துச் செல்லும்விதம் மிகவும்  அருமையாக அமைந்திருக்கிறது.