Saturday, February 4, 2017

மாமலர் – சலிப்பும், வெகுளியும்



மாமலரின் இன்றைய பகுதியில் ஒரு குறள் பகடியாக சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது – நீத்தார் பெருமை (குறள் 29)

சகதேவன் தருமனின் கோபத்தைப் பற்றி சொல்கையில் “வெகுளி கணமேனும் காத்தல் அரிது என்றல்லவா தொல்நூல் கூற்று?” எனக் கூறுகிறான். உண்மையில் இக்குறள் இருவகையில் பொருள் கொள்ளக் கூடியது. இங்கே குணமென்னும் குன்றேறி நின்ற நீத்தார் கொண்ட, கொள்ளும் கோபம் அவரறிந்த மெய்மையாலேயே உடனடியாக அவர் மனதில் இருந்து மறைந்து விடும் என்பது ஒரு பொருள். மற்றொரு வகையில் அத்தகைய பெரியோர் கொள்ளும் சினம் கண நேரமென்றாலும் அது உடனடியாக வெளிப்பட்டுவிடும். இங்கே சகதேவன் இந்த இரண்டாம் பொருளை எடுத்துக் கொள்கிறான். கூடவே அவர் “சினம்கொண்டால் அதன் பொருள் மெய்மையை அணுகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்” என்று வேறு சொல்கிறான்.

ஆனால் இக்குறளுக்கு இந்த இடத்தில் வருவதற்கு ஒரு பொருத்தப்பாடு உள்ளது. பரிமேலழகர் இக்குறளின் உரையில் சலியாமையும், பெருமையையும் குணமென்னும் குன்றாக வள்ளுவர் கூறுகிறார் என்கிறார். இங்கே தருமன் சலிப்பின் உச்சியில் இருக்கிறார். அவர் காணுமிடமெல்லாம் சலிப்பே எஞ்சுகிறது. மிகச் சரியாக திரௌபதி “சலிப்பு. அதை வெல்ல மீண்டும் பகடை” என்கிறாள். அவரின் சலிப்பும், அது தரும் எரிச்சலும் அவரை அலைகழிக்கிறது. நேற்று புலி முன் கொண்டு நிறுத்தியது. ஒரு வகையில் பார்த்தால் தருமர் முதலில் இருந்தே இவ்வாறாக ஏதேனும் ஒரு பிரச்சனையை நோக்கிச் சென்று கொண்டே இருந்திருக்கிறார். பிரயாகையின் பூநாகம் அத்தியாயம் நினைவுக்கு வருகிறது. தாங்கள் வென்று வந்த சௌவீர நாட்டின் முடியை குந்தியின் தலையில் வைத்தது தருமர் தான். அன்றும் அது தவறு என்று உணர்ந்தவன் பீமன் தான். தருமர் அம்முடியை குந்தி நோக்கிக் கொண்டு செல்கையில் இரண்டாவதாக தேரில் இருந்து இறங்கும் பீமன் இயல்பாக திருதாவை நோக்கியே முதலடி வைப்பான். பிறகே தமையனின் தவறை உணர்ந்து வருவது வரட்டும் என்ற புன்னகையோடு தருமன் பின் செல்வான். 

மாமலரின் முதல் அத்தியாயம் தருமன் பார்வையில் தான் ஆரம்பித்துள்ளது. தருமனின் முழு சலிப்பும் அந்த ஓட்டத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வெண்முரசு நாவல்களின் முதல் அத்தியாயங்களில் மிகச் சாதாரணமாக துவங்கியது போலத் தோற்றம் அளிக்கிறது அந்த அத்தியாயம். சலிப்பு அது தான் அவ்வத்தியாயத்தின் சாரம். மாறாக அங்கே சலிப்பு என்பதே இல்லாமல் வாழ்கிறான் பீமன். ஒரு வகையில் மெய்மை தேடும் மானுடன் ஒருவன் இருத்தலின் மூலமே இன்பம் பெறும் ஒருவனைப் புரிந்து கொள்ள முயல்வதாக மாமலர் வரலாம்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்