Wednesday, February 8, 2017

மலர்விரி விற்குடி

 
 
அன்புநிறை ஜெ,

கிராதத்தில் காளனும் காளியுமாய் நின்ற  அம்மையப்பனிடம் விடை பெற்று, அம்மையும் அப்பனுனென வாழ்ந்திருக்கும் தருமனையும் திரௌபதியையும் மாமலரில் காண்பது மிக அழகு. அர்ஜூனனையும் பீமனையும் எண்ணும் போது, ஊர் சுற்றி ஞானம் வேட்கும் இளையவனும், அம்மையப்பனை  வலம் வந்து தானிருக்கும் இடத்திலேயே சுவை வழி ஞானம் பெறும் மூத்தவனும் கண்முன் வருகிறார்கள். கிராதத்தில் சடையன் சொல்வது போல"மீண்டும் மீண்டும் இவர்கள் இங்கு பிறந்தபடியே இருக்கிறார்கள். அழகனும் ஆனையனும்".

பன்னிரு படைக்களத்தின் பின்
அணுக முடியாதவளாய் கனன்ற திரௌபதி, ஒரு கணமேனும் பெண்ணென இரங்கமாட்டாளா எனத் தவித்து தானும் ஜடாக்னியென மெய்மையறிந்து
வரும் தருமன் - இங்கு மாமலரில் இயல்பான ஒரு இல்லாளென அன்றாடத்தில் உழலும் பெண்ணிடம் தன்னுடன் வாசிப்பானுபவத்தில் ஈடுபட்ட சகியைக் காணாது எரிச்சலுறுகிறார்.

அவள் கொண்ட இறுக்கத்தையும் அவர் கொண்ட உருக்கத்தையும்   
தொட்டோடிய காலநதி  இருகரைகளையும் சமன்செய்து மென்மணல் கூட்டியிருப்பது - நடக்க சுகமாக இருக்கிறது. 

மூத்தவரவாகவே பிறந்துவிட்டதாக பகடி செய்யப்படும் தருமன்  - மகனென பீமனை மனதுள் ரசித்த மறுகணமே தன் குருதியளித்து கண்ணேறு துடைப்பதும், ஊண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடாது மண் கலந்த உணவை - 'அவன் உண்பதை நாம் உண்டாலென்ன' என அமர்ந்துண்ணுவதும், பார்த்தனின் வரவை எண்ணிய மாத்திரத்தில் நெகிழ்வதும் - தானென்றே உணரும் ஆண், தந்தையென்றுமட்டும் உணரும் அழகிய தருணங்கள்.

எரிமகள் இங்கு இல்லாளாக உருவெடுப்பது மிக இயல்பாக இருக்கிறது. எரி நின்றாடி எழுவதுதானே சுவை.
கனவில் பசித்து வரும் கொழுனனுக்காக விருந்து சமைக்கும் மனைவி, தன் ஆடையை இடையில் செருகிக்கொண்டு  நீராட்டும் பாங்கில் தாயாகவே இருக்கிறாள். 
  
வாலர்கள் சூழவரும் கதையின் நாயகனது அரங்க நுழைவு காற்றின் மைந்தனுக்கு முற்றிலும் இயைந்ததே. காற்று கதவு திறக்கக் காத்திருப்பதில்லை; கூரையும் செல்வழியே திறக்குமெனில்.

 மரமானுடர், தேனேந்திகள், வாலர்கள் போல புதிய சொல்லாட்சிகளும் , வழக்கில் சிதைந்த 'எரவாணம்' 'இறைவாணத்தில்' என மீட்சி பெற்றும் அழகாய் ஒவ்வொரு இதழாய் விரிகிறது மாமலர். 
அரும்பு மலராகும் மாயத்தை விழிகள் என்றும் அறிவதில்லை. இங்கு சிங்கையில் மலர் விரிவதைக் காண உருபெருக்கும் ஆடி ஒன்றை வைத்திருப்பது போல இந்த மாமலர் விரியும் நுண்மைகளைக் கண்டு அகமும் விரிகிறது. 

அடுத்துவரும் முண்டனின் பிரவேசம் - கிராதத்து சண்டனைப் போல இவன் வாயிலாகக் கதைவளருமோ! படைத்தவன் செய்த இளிவரலை வரமென்றாக்கி உண்மைகளைப் பகடியாக்கும் பித்தன்.  அவன் சொல்லும் முன்னோட்டம் - விரிகுழல் எரிமலர் மாயையை எண்ணியபடி
வண்டு தீண்டாத செண்பகம் சூடிடும் அரசி, அனைத்துக்கும் அடியில் எதனாலும் தீண்டப்படாதவளே தெரிகிறாள்.

மலரக் காத்திருக்கிறோம்.

மிக்க அன்புடன்,
சுபா