Friday, February 24, 2017

அறிய அரிது




அன்புள்ள ஜெ வணக்கம்.

மாமலர் நாவல் பெயருக்கு ஏற்றார்போல மென்மையாக இருக்கிறது. ஆனால் மாமலர்போல அறியொன்னா அரிதாகவும் இருக்கிறது. மலர் இதழ்போல வண்ண வண்ண கதைகள்.  இதழ்களின் உள்ளே உள்ளே அறியாவெளியில் அதன் வாசம். வழி சுவடின்றி வந்த வெளியெங்கும் நிறைந்து நின்று மூழ்கடிக்கிறது. நன்றி.

உலகம் வேறு வடிவத்தில் இருக்கிறது, காண்பது கேட்பது சொல்வது முகர்வது ஊறுவது என்று உலகம் வாழ்க்கையை தனக்கு தகுந்தமாதரி   அறிந்து வைத்திருக்கிறது. இந்த ஐந்து எல்லைக்குள் வட்டத்திற்குள் அடங்காத எதுவும் உலகத்தில் வாழ்க்கை இல்லை.

சிலர் வட்டத்தில் இருந்து தாண்டி, வட்டத்தில் அடங்காத ஒரு வாழ்க்கையை அறிந்து அதை வாழ்ந்துப்பார்க்கிறார்கள். அந்த வாழ்க்கைக்காக தன்னையே பலிக்கொடுக்கிறார்கள். புருரவஸ் வட்டம்தாண்டிய வாழ்க்கை வாழ்கின்றான். அவன் விழி அல்லது விதி அவனை அப்படி செய்யவைத்துவிட்டது.  

கிருபானந்தசுவாமிகள் “அகிம்சை ஹிம்சை“ வேற்றுமை என்ன? என்பதற்கு நகைச்சுவையாக சொன்னப்பதில் “ஆடுவெட்டும்போது நாக்கில் தண்ணிவந்தால் ஹிம்சை, கண்ணில் தண்ணிவந்தால் அகிம்சை“

ஒரு உயிர் வதைப்படும்போது அதை உணரும் சிலருக்கு தன்உயிர்வதைப்படும் உணர்வு ஏற்படுகிறது அதனால் அவர்கள் உயிர் கண்கள்வழியாக கண்ணீராக வழிகிறது. அதுவே ஒரு உயிர்வதைப்படும்போது சிலர் உடல் குதுகலம் அடைகிறது அதனால் நாவில் எச்சில் ஊறுகின்றது. புருரவஸ் குளக்கரையில் அமர்ந்திருக்கும்போது குளத்தில் துள்ளி விளையாடும் மீனை கவ்வி மரக்கிளையில் வைத்து கண்ணில் கொத்தித்திண்ணும் கொக்கை புருரவஸ் பார்க்கும்போது அந்த மீனின் உயிராக தன்னுயிரைப்பார்க்கிறான். இதுவே ஒரு மாறாக புருரவஸ் அந்த கொக்காக தன்னை நினைத்தால் எப்படி இருக்கும்? மனித மனம் எளிதாக எளிய உயிர்களின் மீது படிந்துவிடுகின்றது. வலிய உயிர்களை எதிரியாகப்பார்க்கிறது. பெரிய உயிர்கள் உடலாகத்தெரிகின்றன. சிறிய உயிர்கள் உயிராகத்தெரிகின்றன. யானையின் மீது பாறை ஏற்றப்படும்போது மகிழும் மனம், பூனைமீது கல்லெறியும்போது பதறுகின்றது. யானையின் உயிருக்கும் பூனையின் உயிருக்கும் என்ன வேற்றுமை. உடல்தான் வேற்றுமை. 

ஒரு உயிர் தன்னை எதுவாக வைத்துப்பார்க்கிறது என்பதில் உள்ளது வாழ்க்கையின் வடிவம். தன்னை கொக்காக வைத்துப்பார்த்தாலும் மீனாக வைத்துப்பார்த்தாலும் அறம் ஒன்றுதான். மீன் கொக்கிற்கு உணவாகின்றது. கொக்கு முதலைக்கு உணவாகின்றது. முதலை புழுவுக்கு உணவாகின்றது. அறம் உடலோடு பிணைக்கப்படவில்லை மாறாக என்றும் நிலைநிற்கும் உயிரோடு பிணைக்கப்பட்டு உள்ளது. உலகம் உடலோடு தனது பார்வையை நிறுத்திக்கொள்ள அறம் அறிந்தவன் உடலைத்தாண்டி .உலகைப்பார்க்கிறான். புருரவஸுக்கு அந்தப்பார்வை குருவழியாகக்கிடைக்கிறது.

புருரவஸ் உலகம் உலகத்தைப்பார்ப்பதுபோல் பார்க்காமல் அதன் எல்லைக்குள் நின்றுப்பார்க்காமல் எல்லைத்தாண்டிப்பார்க்கிறான். அந்தப் பார்வை அவனை அறத்தான் ஆக்குகின்றது. எல்லைத்தாண்டிப்பார்க்கும் அறத்தான் அவனுக்கு விண்மகள் ஊர்வசி சியாமையாக வந்துக்கிடக்கிறாள்.

அறத்தான் உலகின்  எல்லையில்  இருந்து  வெளியேறுவதால் முதலில் உலகை அஞ்சுகிறான் உலகமே அவனுக்கு பெரும் அஞ்சம்தரும் களமாக இருக்கிறது. அவனை பதறவைக்கிறது. நல்குருவால் அவன் உலகை எப்படிப்பார்க்கவேண்டும் என்று அறியும்போது உலகம் புதிய நீர்சுனையாகிவிடகிறது அங்கு இருக்கும் மீனும் பூவும் ஒளியும் பழையதுதான் என்றாலும் அனைத்தும் புதியதாகிவிடுகின்றன.

அறத்தான் காணும் புதிய உலகத்தில் வந்து சேரும் சியாமை என்னும் கறும்பசுமை காட்டுவண்ணத்தவளும்   அவன் உலகை புதுப்புது பூ கனி வண்ணங்களாகவே செய்கிறாள். இந்த இன்பம் நீள்நாள் அல்ல அது ஒரு கனவு என்று ஆகும். அந்த கனவு கலையும்போது அறம் மீண்டும் நோயில் விழும்.

அறத்தான் அறம் அறியும் முன் உலகைக்கண்டு அஞ்சுகின்றான். அறத்தான் நோய் உரும்போது உலகம் அவனைக்கண்டு முகம் சுளிக்கிறது. அவனின் அழுகல் நாற்றமே உலகுக்கு தெரிகிறது. அவனை ஒரு அழுகலாகவே உலகம் பார்க்கிறது. உலகத்தின் வெள்ளைத்துணியில் கறையாக கிடக்கும் அழுகல் என்று உலகம் நினைக்கிறது. அனைத்துவகை நறுமணத்தையும் மிஞ்சி எழும் கொடும்மணமாகப்பார்க்கிறது  அறம் சாகட்டும் என்று காலம் பார்க்கிறது. மருத்துவம் நினைக்கிறது அறத்தான் வழியாக அறம் சாவதில் . உலகுக்கு  எந்த இழப்பும் இல்லை மாறாக ஒரு மகிழ்ச்சியே உலகுக்கு உள்ளது. காரணம் அறம் உலகின் பார்வையில் ஒரு நாற்றம் மட்டுமே. 

அறத்தான் வழியாக அறம் தனது இன்பத்துணையை விண்ணேறவிட்டுவிட்டு  ஐந்து மகன்கள் வளரும் வேதத்தை அரசாட்சியை குருநிலையை இல்லத்தை மறந்து மக்கி அழுகும்போது அறத்தின் அழுகல் தன்மையை மட்டும் அறிந்து அதன் மேன்மை அறியா மக்கள்  அறம் இறந்தபோதுதான் அதன் புகழ் வாழ்க என்று கூவுவார்கள். நாற்றத்தை தாண்டி நலம் அறியா உலகம் எங்கு உள்ளது?.

ஊர்கூடி சுற்றம்கூடி பெற்றபிள்ளையும் தூக்கிச்சென்று எரியவைத்தாலும் அறம் பிழைக்கும். இன்பம் மட்டும் இல்லை அறம் என்று அறம் கண்டுக்கொள்ளும்.

அறம் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை மாறும்போது இந்த உலகமே ஒரு புது உலகம். அறம் தனது இன்பத்தை துறந்து நாறி மக்கும்போதும் இறக்காமல் மீண்டு எழும். மீண்டும் அது உலகுக்கு கருணையாக மட்டும் காட்சிக்கொடுக்கும். 

மக்கள் வாழும் உலகில் எதற்கு எடுத்தாலும கொலை. நிமித்திகனையும் மருத்துவனையம் அவர்கள் தெய்வம் என்பார்கள் நிமிதி்கமும் மருத்துவமும் பிழைக்கும்போது அதை கற்றவனை கொல்வார்கள். உலகில் ஒவ்வொரு செயலும் பிழைக்கும்போது செயலை அங்கேயே விட்டுவிட்டு செயல் செய்தவனை உலகம் கொன்றுவிடும். செயல் அங்கேயே நிற்கும். அறம் அழுகினாலும் அறம் வாழும் உலகில் கொலைகள் இல்லை. அறம் செயலைப்பார்க்கிறது அதன் தவறு என்ன என்பதை களைய முயல்கிறது அது செயலின் கருவியாகிய உயிரை காக்கிறது. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.