Sunday, February 5, 2017

தருமனும் பீமனும்



அன்புள்ள சார்,

மாமங்கலையின் மலையின் முதல் அத்தியாயத்தில் இறப்பைப்பற்றிய குறிப்புக்கள் மிக ஆச்சரியமாகவும் இருந்தன. ஏனென்றால் எனது சில நண்பர்களுக்கும் மற்றும் எனக்கும் சென்ற ஆறுமாதங்களில் இதுவே தோன்றியது.  நினைத்துப்பார்க்கையில் போன வருடத்தில் மட்டும் ( அல்லது இந்த துர்முகி வருட்த்தில்) அதிக மரண செய்திகள். உறவினர்கள் மற்றும் நண்பர்களில். இறப்பு என்பதைப்பற்றியே சிந்தித்திருந்தேன்..(  ரெண்டுநாளாச்சு இன்னும் புதுசா ஒரு சேதியும் வரலையே.. ). சில நேரங்களில் பயம் கூட.. குருஜி “ம்ருத்யுஜன மந்திரம்” உபதேசித்தார்.   நேற்று உங்கள் பதிவை படித்ததும் இதைப்பற்றி நம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்..  ( கிராதம் படிச்ச கைப்புள்ளைகளுக்கே இப்படீன்னா எழுதினவருக்கு எப்படியிருக்கும்... :-00  ) 

முன்பு family tree யாக வெண்முரசு கதாபாத்திரங்களை தொகுக்க நினைத்து ஆழ்ந்தெரியாமல் காலை விட்டேன். அதில் நான் யார் என்பதை சொல்ல வேண்டும்.  அப்போது யுதிஷ்டிரன் என பெயரிட்டுக்கொண்டேன்.  ஏன் என எனக்கே ஆச்சரியம். மனதில் தருமன், காந்தி போன்றவர்கள் சத்ய புருஷர்களாக நிலைபெற்றுவிட்டார்கள். தருமனாக இருப்பது மிக கடினம். கூன் விழுந்த முதுகுடன் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஜல்லிகட்டுக்கு இந்த் போராட்டம் அவசியமா என்பதிலிருந்து விவேகம் அஜித் உண்மையா கிராபிக்ஸா என்பதுவரையில் எதிலும் உண்டு இல்லை என்றொரு முடிவுக்கு வர முடிவதில்லை. போட்டு குழப்பியடிக்கிறது. 

ஆரவாரமான மனிதர்களை பார்க்கையில் அது சற்று மாறுகிறது. பீமன் அப்படித்தான் நுழைகிறான். மகாபாரத்தில் பீமன் மிகவும் பொறாமை கொண்டவனாக சித்தரிக்கப்பட்டுள்ளதை  அருட்செல்வபேரரசன் விளக்கினார். ( குரங்கு பால் குடிச்ச பய என ஜாஜா ஒத்து ஊதினார் ).  வண்ணக்கடலில் கூட பீமனே பல பிரச்சனைகளை துவக்கி வைத்து கடமையாற்றினான். ஆனால்,  முன்பு எப்போ வருவாரோ வியாசர் உரையில் பீமனே குழந்தைகளுக்கு நாயகன் என்று கூறியிருந்தீர்கள். அதனால், பீமனுக்கான நாவல் குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல வருமோ என்றொரு எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.  அதற்கேற்றார்போல பீமனும் புலியை சுழற்றி, மரக்கிளைகளில் தொங்கி வருகிறான். டார்சான் போல வருகிறான் என்று ஒரு நண்பர் கூறினார். ஜேன் வராவிட்டால் குழந்தைகளுக்கும் தாராளமாக விளக்கி கதை சொல்லலாம் என நினைத்துக்கொண்டேன். 

 பீமனை உற்றுப்பார்க்கும் தருமன் தானும் மாறுகிறான். மனது குதூகலமாகிவிடுகிறது. சற்றுமுன் மாமங்கலையின் மலையின் மூன்றாவது அத்தியாயத்தில்  வினோத் சேட்டா ரவி அண்ணனுக்கு டிப்ஸ் கொடுத்த்தை படித்ததும் நள்ளிரவில் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.
 
காளிப்பிரசாத்