Saturday, February 25, 2017

குஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)    முண்டன் என அழைக்கப்படும் குஸ்மிதன் ஆங்காங்கும் போகிற போக்கில் சொல்லும் கூற்றுக்கள் மிகவும் அர்த்தம் பொதிந்தவையாக உள்ளன. அவன் சொல்கையில் அதை சற்று  நிதானித்து சிந்தித்திக்கும்போது அவன் சொல்லும் கருத்துக்களின் ஆழத்தை அறிய முடிகிறது. அதில் சில கூற்றுகளை இங்கு திரும்பவும் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.
மொழியெனும் மனமூடி
 
குஸ்மிதன் கூறுகிறான்:
 
   “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!”
 
    நிர்வாண உடல் அவ்வளவு அழகானதல்ல. குழந்தைமை மறைய மறைய நிர்வாணத்தின் அழகு குறைந்துகொண்டே செல்கிறது. காமத்தின் கண்கொண்டல்லாமல் நிர்வாணத்தைக்  பார்க்கையில் கண்ணும் மனமும் கூசவே செய்கிறது.   அதனால் அதை ஆடைகொண்டு அலங்கரித்துக்கொள்கிறோம்.  ஆடைகளில் தேவையான அளவுக்கு உடலை ஒளித்து மறைத்து  நாம் காட்டும் உடல் முழுமையானதல்ல. மற்றும் அது நமக்கு வேறு பிம்பத்தை காட்டும்படி செய்கிறது.  நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் திடீரென்று போதுமான ஆடையின்றி காண நேர்ந்தால் அவரை  வேறு ஒருவர் என நம் உள்ளம் சந்தேகிக்கிறது.   கனத்த அங்கி போட்டு மிடுக்காக இருக்கும் ஒருவர் ஆடை இல்லாத போது தளர்வும் முதுமையும் வெளிப்பட பலஹீனமானவராகத் தோன்றுகிறார்.  ஆடை எப்படி நம் உடலை மறைத்து வேறு  உருவை மற்றவருக்கு தோன்றச் செய்கிறதோ அதைப்போல நம் உள்ளத்தின் மேல் நாம் மொழியை ஆடையென அணிந்து நம்மை உள்ளத்தை அலங்கரித்துக்காட்டுகிறோம்.  மொழியின் மூலம் வெளிப்படுத்தப்படும் நம் உள்ளம் முழுமையானதல்ல.  சற்று  மறைத்து, சற்று  திரித்து, சற்று மிகைப்படுத்தி, அல்லது சற்று குறைத்து நம் உணர்வுகளை சொற்களில் வெளிப்படுத்துவதால் மற்றவர் நம் சொற்கள் மூலம் அறிவது நம் உண்மையான உருவல்ல. ஒவ்வொருவர் உள்ளமும் சொல் எனும் முகமூடியை போட்டுக்கொண்டிருக்க நாம் அதன் உரு இதுவென பலவாறு யூகித்துக்கொண்டிருக்கிறோம்.

----------------------------
வண்ணம் மாறும் விலங்கு 
 
குஸ்மிதன் கூறுகிறான்:
    
 
“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.”   
இப்படி உண்மையற்ற தன் உருக்களையே பிறர் முன் ஒவ்வொருவரும் வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். சிலசமயம் அந்தத் தவறான தன்னுடைய மாய உருவையே தன்னுடையதென  தாமே நம்புவதும் உண்டு. அதன் காரணமாக  ஒருவர் கொண்டிருக்கும் இன்றைய  நிலையை நாளை கொண்டிருப்பதில்லை. அப்படி அவர்கள் நிலையை தன் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது அவர்களுக்கு முரணாகத் தோன்றவில்லை.  நேற்று இதுதான் சரியென்று உறுதி செய்த ஒன்றின் மேல் இன்று ஐயம் வருகிறது. நாளை அது முற்றிலும் தவறு என்று  அவர்களே மாற்றி உரைக்கிறார்கள்.    இன்று ஒருவர் காட்டும் உருவை வைத்து அவர் இப்படி இவ்வாறு செயல்படுவார் என நாம் கணிப்பது நாளை அவர் காட்டும் உருவில் பொருளிழந்து போய்விடும்.  கனிவும் பொறுமையும் கொண்டிருக்கும் ஒருவர் மற்றொரு நாள் சிறிய குற்றத்துக்கு சீறி விழுகிறார். ஒரு கட்டத்தில் எதையும் மற்றவர் நலனுக்கு தியாகம் செய்பவராக தோன்றும் ஒருவர் இன்னொருநாள் அற்ப ஆசைகளுக்காக சண்டை பிடிக்கிறார். மனிதகள் இப்படி தினம் தினம், தன் வண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒருவரின்  உண்மையான வண்ணம்தான் என்ன? ஒருவேளை இதுதான் இவரின் உண்மையான வண்ணம் என ஒன்று எவருக்கும் இருப்பதில்லையோ?
-----------------------------------------

இருண்டிருக்கும்  இறந்தகாலம்
 
 
குஸ்மிதன் கூறுகிறான்:
 
 
“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன?” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே? நினைவுகூரச் செய்வது எது? விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே? இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள்.    
 
எதிர்காலத்தை கணிக்க  என்னதான் நடக்கும் என தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் . ஆனாலும் எதிர்காலத்தை எவராவது நான் கணித்துச் சொல்வேன் என்று சொன்னால் அதை நாம் ஏமாற்றுவேளை என்று சொல்கிறோம். ஆனால்  இறந்தகாலத்தைப்பற்றி மனிதன் தனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருக்கிறான். ஆனால் அவன் புழங்கிவந்த இறந்தகாலம்தான்  மனிதனுக்கு அதிக மர்மங்களைத்தருகிறது. நேற்று வைத்த ஒரு சாவியை இன்று காணாமல்  தேடிக்கொண்டிருக்கிறோம்., அதன் இருப்பு இறந்த காலத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. நேற்று  கொடுங்குற்றத்தை செய்த ஒருவன் யார் எனத் தெரியாது காவலர்கள் தேடுகின்றனர். அந்தக் குற்றவாளி ஒளிந்திருப்பது இறந்தகாலத்தில் இருளுக்கு பின்னால்.  ஒரு எளிய செய்தியான  நான் நேற்று இந்த உணவை சாப்பிட்டேன் என்பதை இன்று ஒருவருக்கு என்னால்  நிரூபிக்க முடியும் என்று யார் உறுதிகூறமுடியும்.  உண்மைகளின் நம்பக்த்தன்மையை இறந்த காலம் தேய்த்து அழிக்கிறது. உண்மைகள் பொய்கள் அனைத்தும் அதில் குழம்பிகிடக்கின்றன.  காலம் நிகழ்வுகளை பேரருவியென ஒருவனின் சல்லடை போல் ஓட்டைகள் நிறைந்த நினைவெனும் ஓட்டைக்ஜள் நிறைந்த கூடையில் கொட்டுகிறது. அவன் நினைவு நீண்டகாலம் தேக்கிக் வைத்துக்கொள்வது அவன் மிக விரும்பிய அல்லது மிக வெறுத்த சில நிகழ்களைமட்டுமே .  அவையும் சிறிதுகாலம் போன பின் அவனுடைய எண்ணங்கள் விழைவுகள் எதிர்பார்ப்புகளால் திரிந்து போய் வேறு வடிவம்கொண்டு நிற்கிறன்.  வெறும் எலும்புக்கூடென எஞ்சும் சில உண்மைகளின் மேல் தன் கற்பனையால்,  தோல்உடுத்தி  வண்ணம் பூசி வரலாறுகள் சமைக்கப்படுகின்றன.
_______________________________________

மனதில் மணக்குமா  மலரின் வாசம்?

குஸ்மிதன் கூறுகிறான்:

காட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா?” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா? முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா?”
 
  முன்னர் நடந்த ஒரு காட்சியை திரும்ப நாம் நினைத்துப்பார்க்கலாம்.  அப்போது அதேகாட்சி நம்மால் ஓரளவுக்கு  நம் அகத்தில் காணமுடியும். அப்படியே ஒரு சுவையை நினைத்துப்பார்க்க முடியும். புளிப்பான சுவையை நினைக்கையில் நம் பல் கூசுவதும் உண்டு. ஆனால் ஒரு மணத்தை நினைவில் கொண்டு மீண்டும் அனுபவிக்க முடியுமா?  இப்போது வீசும் மணம் இன்ன மணம் என்று அடையாளம் காணலாம்,  கண்மூடி ஒரு வாசனையை கற்பனையில் அனுபவிக்க முடியாது என்று இங்கு  கூறப்படுகிறது. இது அனைவருக்கும் முழுக்கப் பொருந்துமா என எனக்குத் தெரியவில்லை. நான் முயன்றுபார்க்கையில் பூக்களின் மணத்தை நினைவு கூறமுடிவதைப்போல்தான் எனக்கு தெரிகிறது.  
______________________________________________________

அடையாப் பொருள் அடையும் பொருண்மை
 
குஸ்மிதன் கூறுகிறான்:

   “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது…! ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா?”

   ஒரு விழைவு அதுவும் நிறைவேறாத விழைவு ஒருவன் மனதில் பேரூக்கொண்டு வளர்கிறது. அது நிறைவேறாமையாலேயே அது உடைக்க முடியாத பெரும் பாறையென ஆகிறது. நிறைவேறிய  விழைவுகள் கனம் குன்றிபோகின்றன். எத்தனை பெரிய விழைவாகத்  தெரிந்திருந்தாலும் நிறைவேறுகையில் அவ்விழைவு சிறுத்துப்போகிறது. கையில் இருக்கும் பொருளில் கவனம் சிதறுகிறது. கிடைக்காதபொருள் நம்மை கவர்திழுத்தபடி இருக்கிறது.  வசப்பட்ட பொருள் கசக்கத்தொடங்குகிறாது. வசப்படாததன் இனிப்பை மனம் ஊதிப்பெருக்குகிறது.   தெரிந்திருப்பதன் கனம் தேய்ந்து போகிறது.  மறைந்திருப்பதன் பொருண்மை வளர்ந்தபடி இருக்கிறது.
____________________________________________

வெட்டத் தூண்டும் வாள் 

குஸ்மிதன் கூறுகிறான்:

கூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு? எங்கு எழுகிறது விருப்பு? சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.
 
  ஒருவன் அடையும் திறன், அறிவு அவனை அதற்கான செயலில் தூண்டுகிறது. அவன் கையில் இருக்கும் கருவி அவனைத் தன் கருவியென ஆக்குகிறது. கையில் கத்தி வைத்திருப்பவன் கையில் கிடைப்பதை வெட்டிப்பார்க்க நினக்கிறான். விளையாட என வாங்கிய கவண்கல் எவ்வித நோக்கமும் இன்றி ஒரு பறவையை அடித்து வீழ்த்த அவனைத் தூண்டுகிறது.  போர்த்தளவாடங்களை அதிகம் கொண்ட நாடு போருக்கான காரணங்களை தேடி அலைகிறது.     ஒருவனின் அறிவுத்திறன் மற்றவர்களை தர்க்கத்துக்கு அழைக்கிறது. திறன்கொண்டவன் தன் திறனை பயன்படுத்தமுடியாதபோது,  ஊக்கம்கொண்டவன் செய்வதற்கு ஒன்றுமில்லாதிருக்கும்போது,  ஆய்தம் கொண்டவன் அதை பயன்படுத்த இயலாதபோது சலிப்பை அடைகிறான். அச்சலிப்பை போக்கிகொள்வதற்கு என ஒரு விருப்பை ஏற்படுத்திக்கொள்கிறான். உலகின் அனைத்து எழுச்சிக்கும் பின்னும் திறனும் ஊக்கமும் கொண்ட மனிதர்களின் சலிப்பே  இருக்கிறது என்பது உண்மையல்லவா?

__________________________________________
அலுப்பூட்டும் அடைந்த காதல் 

குஸ்மிதன் கூறூகிறான்:

பெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”
 
  மேற்கூறிய கூற்று இரு பாலருக்கும் பொருந்தும்.    காதலில் அடையும் வெற்றியே காதலை பாதிக்கிறது என்பது வியப்பாக இருந்தாலும் உண்மைதான். காதலின் வெற்றியை நாடி  வேகவேகமாக ஓடியவர்கள் அந்த வெற்றிக்குப்பின் ஒரு தளர்ச்சியை அடைகிறார்கள் என்பதைக் காண்கிறோம். அப்போது சட்டென்று தன் காதல் இணையின் கவர்ச்சி குறைந்துபோவதாய் உணர்கிறார்கள். ஓயாமல் பேசிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் அமுதமாய் கருதி சிந்தையில் ஏந்திக்கொண்டவர்கள் இப்போது குறைந்த சொல்லே போதுமானதாக இருப்பதாக உணர்கிறார்கள். அந்தச் சொற்கள் கூட சலிப்பூட்டுவதாக மாறுகிறது. காதலின் காரணமாக தன்னை முழுக்க   அர்ப்பணித்துக்கொண்டவரிடம் இன்னும்  பெறுவதற்கு ஏதும்  இல்லையே என குறைபட்டுக்கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதர்கள் இன்னும் இன்னும் என கேட்டுக்கொண்டே இருப்பவர்கள். அவர்களை எவ்வளவுதான் இன்பத்தால்,  காதலால்,  இன்செயல்களால் நிறைத்தாலும் இன்னும் இல்லையா என்று தன் காதல் இணையின்  கைப்பையை எட்டிப்பார்ப்பவர்கள்.  ஆகவே ஒருவர் தன் துணைக்கு  கொடுப்பதற்கு என புதிதாக எதையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டியிருக்கிறது. 

-------------------------------------------------------------------------------------------
உள்ளதில் கனக்கும் பாறை
 
குஸ்மிதன் கூறுகிறான்:

“வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன. 

“உள்நுழையமுடியாத மண்டபமா கரும்பாறை? மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.”
  
ஒரு பாறை எப்போதும் மனிதனை உறுத்துகிறது. மனிதன் உரு மாறுபவன் அவன் உடல் வளர்ந்து தளர்ந்து தேய்ந்து அழிகிறது. அவன் திறன்கள் வளர்ந்து குறைந்து அர்த்தமிழந்துபோகின்றன. அவன் காணும் நதி பெருகியோடுகிறது பின்னர் குறைந்து மெலிந்து ஓடுகிறது. காற்று குறைந்தும் மிகுந்தும் வீசுகிறது. கடல் கூட தன் மட்டத்தை உயர்த்தி  தாழ்த்தி நிலைமாறுகிறது. ஆனால் ஒரு பாறை ஒரு மனிதனின் பார்வையில் அசையாது அழியாது இருந்தபடி அப்படியே உள்ளது. அதன் நிலைத்தன்மை, அழிவின்மை, அதன் உறுதி, சலனமின்மை  தன்னை வெளிக்காட்டாமை போன்ற அதன்  குணங்களை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அவனுடைய ஆயுளுக்கு அவை அழிவின்மை கொண்டைவையாக இருக்கின்றன.  ஒன்றுக்குள் எப்போதும்  வேறொன்று இருக்கும். வெளியில் இருப்பதற்கு உள்ளிருப்பதற்கும் ஏதாவது வண்ணத்தில் திண்மையில் ஏதாவது வேறூபாடு இருக்கும். 
 
ஆனால் பாறைக்குள் இருப்பது பாறை மட்டுமே. உள்ளும் வெளியும் ஒன்றேயானது  பாறை. பாறையை தெய்வமென வழிபடுகிறார்கள், பாறைமேல் கால் வைத்தும்  ஏறுகிறார்கள், பாறையின் பின்னே ஒளிந்துகொண்டு தப்பிக்கிறார்கள். பாறையை உருட்டிவிட்டு இன்னொருவரை கொல்ல முயல்கிறார்கள். இச்செயல்கள் அனைத்திலும் பாறை இருந்தாலும் அந்தச் செயல்களுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பீமன் ஒரு பாறைபோல பாண்டவர்களில் ஒருவனென இருக்கிறான்.  ஒரு செயல் அவன் பால் திணிக்கப்பட்டாலன்றி அச்செயலில் இறங்குவதில்லை. இறங்கிய பிறகு  
 
 அவன் அதை எவ்வித மனச்சங்கடமுமின்றி செய்து முடிக்கிறான்.  அவன் போரிடுவதுகூட ஒரு பாறை உருண்டோடுகையில் சிற்றுயிர்களை அழிப்பதைப்போல் இருக்கிறது. எப்படி அந்தச் சிற்றுயிர்கள் அழிவதற்கு  பாறை காணமில்லை அதை உருட்டிவிட்டவன்தான் காரணமோ அப்படியே பீமனின் செயல்களில் இருந்து விடுபட்டவனாகிறான். அதன் காரணமாக அவன் போரிடுகையில் அல்லது தண்டனையளிக்கையில்  எவ்வித மனச்சங்கடத்திற்கு ஆளாகதவனாக இருக்கிறான். இவ்வாறு  குஸ்மிதன்  அவனை பாறையுடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது..