உடல் தாண்டிச் செல்லும் பயணம். ( மாமலர் -12)
மனிதன் தன் வாழ்வில் தேடி ஓடி அடைவதெல்லாம உடலுக்காகத்தான். உடலை வளர்க்க உணவு, அதைப் பேணிக்காக்க உடை, உறைவிடம், இந்த அடிப்படைத்தேவைகள் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை தேடிகொண்டே வாழ்நாள் முழுதும் இருக்கிறான். இந்தத் தேடலே ஒரு போதையென ஆகி தேவையைத் தாண்டியும் அவன் சேர்த்துக் குவித்துக்கொண்டிருக்கிறான். தன் உடலின் நீட்சியாகத்தான தன் பிள்ளைகளைப்பார்க்கிறான். அதனால் அவன் தன் பிள்ளைகளுக்குமாக மேலும் மேலும் என பொருளைத்தேடி சேர்க்கிறான். அவன் நாடும் புகழ் பதவி எல்லாம் கூட அவன் உடல் மேல் அலங்கார அங்கிகளென போர்த்திக்கொள்வதற்காகத்தான். இறந்த பிறகு அவன் உடலாக அவன் பேர் இருக்கின்றது. அதனால் அவன் தேடும் நற்பேர் கூட அவன் உடலுக்காகத்தான்.
சிலசமயம் அவன் தன் உடல்பொருட்டல்லாமல் செயல்கள் செய்வதாக நினைக்கிறான். ஆனாலும் அதில் இறுதியாக அச்செயல்களின் பலன் சென்று சேர்வது அவன் உடலைத்தான். இறந்த பின் நற்பலன்கள் அவனுடன் செல்கின்றன என்று சொல்வதெல்லாம் யூகம்தான். தான் அறிந்த அனைத்து தத்துவங்கள் சுவர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகள் போன்றவற்றின் மேல் அவனுக்கு உண்மையாக நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. எவருக்காவது அப்படி இருக்கும் நம்பிக்கைக்கூட எளிதில் உடைந்துவிடும் நிலையில் உறுதியற்று இருக்கிறது. மேலை மதங்களில் அவன் சுவர்க்கத்துக்கு செல்லும்போது இதே உடலில்தான் செல்கிறான். இதே உடல் சுகங்களை அங்கு அனுபவிக்கிறான் என்று கருதுகிறார்கள். அதன் பொருட்டு உடலை தகுந்த மரியாதை அலங்காரங்களுடன் புதைத்து அதை சமாதி கட்டி அடையாளம் அழியாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
அனைத்தையும் இறுதியில் உடலென ஆக்கியாக வேண்டியிருக்கிறது. வெறும் உடலென. பிறிதொன்றும் இல்லை என. எஞ்சுவது இதுவொன்றே எனில் எதன்பொருட்டு எல்லாம் என.
ஆகவே மனிதன் எதைச் செய்தாலும் அதை சிந்தித்துப்பார்க்கையில் அது தன் உடல் பொருட்டே என ஆகிறது. இருக்கட்டுமே. உடலைத் தவிர நமக்கு மிக நெருங்கியதென எதுவும் இல்லை. அதனால் அதன் பொருட்டு செயல்களைச் செய்வதில் என்ன தவறு? ஆனால் உடல் அழிந்துபோவது, நிலைத்திருக்கவியலாத சடப்பொருள். உள ஆழத்தில் நான் இந்த உடலல்ல என்ற எண்ணம் இருந்தபடி உள்ளது. உடல் சில அங்கங்களை இழந்து குறைவு பெற்றாலும் நாம், 'நான்' என நினைத்திருப்பதில் குறைவு எதையும் காண்பதில்லை. ஆகவே நம் உடலைத்தாண்டி நம் இருப்பு ஒன்று இருப்பதை உணர்கிறோம். ஆனாலும் இந் நினைவு நீடித்து இருப்பதில்லை. உடல் நம்மை அதனுடன் பிடித்து ஒட்டிவைத்துக்கொள்கிறது. அதைத்தாண்டி நம் சிந்தனை எழாத வண்ணம் நம்மை கட்டுக்குள் வைத்திருக்கிறது. சிலர் சில நேரங்களில் மட்டுமே அந்த கட்டுக்களின் பிடியிலிருந்து விடுபட்டு தன்னை உடலல்ல என உணர முற்படுகின்றனர். அப்படி நாம் நம்மை உடலிலிருந்து அரும்பாடுபட்டு உயர்த்தியிருக்கையில் கூட, காமத்தில், கோபத்தில் துயரத்தில், அதீத களிமயக்கத்தில் நாம் வீழ்ந்து நம்மை வெறும் உடலென மட்டுமே நினைப்பவர்களாகிறோம். எப்போதோ நம் நல்லூழின் காரணமாக நம்மை உடலென காண்பதில் ஒரு சலிப்பு எழுகிறது. அப்போது நம்மைத் தேடி நம்முள் ஆழ்கையில் உண்மையான நான் எனும் உணர்வின் மணத்தை அறிகிறோம். பீமன் அப்படி அறிகிறான். தன் உள்ளாழத்திலிருந்து வெளிவரும் அம்மணம் எங்கிருந்து வருகிறது என அறிய முற்படுகிறான்.
“அப்போதுதான் அந்த மணத்தை உணர்ந்தேன். அதுவே நான் அடைந்த உச்சநிலை. அதை அறிந்தால்தான் நான் எவரென நான் உணரமுடியும். அதை எண்ணியபின் எனக்கு இனி பின்னடிவைப்பில்லை”
ஆனால் அதற்கு தன்னை முழுக்க உடலிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். அதுதான் துறவின் இறுதி இலக்கு. அப்படி தன்னை விடுவித்துக்கொள்ளும் அறிவே உண்மையானது அதுவே ஞானம் எனப்படுகிறது. முதலில் உடலுடன் நம்மை கட்டிவைத்திருக்கும் தளைகளை விடுவிக்க வேண்டும்
ஆனால் நேற்றுவரை நீங்கள் கொண்டிருந்த அனைத்தையும் உதறியாகவேண்டும். ஒவ்வொரு அடியிலும் அவற்றிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டிருக்கவேண்டும். முற்றிலும் விலகியபின் அடைவதே அம்மலர்” என்றான் முண்டன். “ஆம், விலகுகிறேன்” என்று பீமன் சொன்னான்.
உடலுடன் நம்மை கட்டி வைத்திருப்பவை,(நம் உடல் சுகங்கள் நிறைவேறத் தடுத்தவர்கள் மீதான) வஞ்சங்கள், (நம் உடலுக்கு அந்த உடல் சூடிய புகழுக்கு ஊறு விளைவித்தவர்கள் மீதான )பகைகள், (நம் உடலை, உடல் பூண்ட பெருமைகளை பேண இயாலது போன நம்) துயர்கள், (நம் உடல் சுகம் பொருட்டு நாம் கொண்ட) விழைவுகள், (நம் உடலை பிற உடல்கள் மற்றும் பொருள்களோடு பிணைத்திருக்கும்) பற்றுகள், ( உடலைப் பேண உடல் சுகங்களை அனுபவிக்க தான் அடைந்த ) கடன்கள் போன்றவையாகும்.
குனிந்து கைப்பிடி நீரை அள்ளி பீமனிடம் அளித்து “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன் என்க!” என்றான். பீமன் “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன்” என்றான். பிறிதொரு கைப்பிடி நீரை அள்ளி “என் வஞ்சங்கள் அனைத்தும் அகல்க!” என்றான். பீமன் அவ்வண்ணமே சொன்னான். துயர்களை, ஐயங்களை, விழைவுகளை, பற்றுகளை, கடன்களை விட்டுவிடுவதாக அவன் நீருறுதி எடுத்தான்.
இவற்றையெல்லாம் விடுத்து தன் உடல் தாண்டி பீமன் முண்டன் துணை கொண்டு பயணம் செய்யப்போகிறான். அந்த ஞானப் பெரும் பயணத்தில் நம்மையும் உடனழைத்துச் செல்லப்போகிறது வெண்முரசு.
தண்டபாணி துரைவேல்